உலக அரசியல் வரலாற்றை எழுதுவதில் தனக்கே தனித்துவமான இடத்தை வகித்த ஹென்றி கீசிங்கர் 100 வது வயதில் மரணமடைந்துள்ள செய்தி அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வியப்பானது. இறுதிவரை அமெரிக்க நலனுக்காக உழைத்த ஒரு இராஜதந்திரியின் சகாப்தம் நிறைவுக்கு வந்துள்ளது. ஆனால் அமெரிக்க சகாப்தம் நிலைத்திருக்கவும் நீடிக்கவும் தனது உழைப்பின் முழுமையையும் வழங்கிவிட்டு மறைந்துள்ளார் கீசிங்கர். மறுபக்கம், உலக நாடுகள் டுபாயில் ஒன்றுகூடியுள்ளன. உலகளாவிய காலநிலையை மீட்டெடுக்கும் உபாயத்துடன் உலகளாவிய மாநாடு நடைபெறுகின்றது. அதேநேரம் ஹமாஸ் – -இஸ்ரேல் போர் மீளவும் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இக்கட்டுரையும் மீள ஆரம்பித்துள்ள போரின் போக்கினைத் தேடுவதாக அமையவுள்ளது.
ஏழு நாட்களாக நிகழ்ந்த போர் நிறுத்தம் எட்டாவது நாளும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதனை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஹமாஸும், ஹமாஸ் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாகஇஸ்ரேலும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துக் கொண்டு போரை இரு தரப்பும் தொடக்கியுள்ளன. அதிகாலை தொடங்கியுள்ள போரில் (01.12.2023) இஸ்ரேலிய தாக்குதலால் 54க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் பிளிங்கன் போர் நிறுத்தத்தை நீடிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார். அமெரிக்காவின் கோரிக்கையை மீறிய இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக அல்ஜசீரா குற்றம்சாட்டியுள்ளது. அதே நேரம் காசாவிலிருந்து ஏவுகணைத் தாக்குதல்கள் இஸ்ரேல் மீது நிகழ்ந்ததாகவும் துப்பாக்கி தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் அதனை ஹமாஸ் மேற்கொண்டதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டிவருகிறது. அப்படியாயின் எத்தரப்பு போரைத் தொடங்கியது. ஏன் அவசரமாக போர் நிறுத்தத்தை இரு தரப்பும் முறித்துள்ளன என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.
ஒன்று, போர் நிறுத்தத்தை முறித்தது இஸ்ரேல் என்பதை உலகளாவிய ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அதற்கான அடிப்படையாக போரில் முந்திக் கொள்வது வெற்றியை தக்கவைக்க முடியும் என்ற உபாயத்தின் அடிப்படையிலேயே இஸ்ரேல் நகர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனை கடந்த கட்டுரையிலேயே தெரியப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும். அதாவது போர் நிறுத்தகாலம் போருக்கான தயாரிப்புக் காலமாகவே போரில் ஈடுபடும் நாடுகளால் மேற்கொள்ளப்படுகின்றன.
அதனையே இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது. எந்த தரப்பு போரில் முந்திக் கொள்கிறதோ அதுவே போரை வெற்றி கொள்ளும் என்ற உத்தி போர்க்களங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. அதனையே இஸ்ரேல் வெளிப்படுத்தியுள்ளது. காரணம் போர் நிகழ்ந்த காலப்பகுதியை விட போர்நிறுத்த காலம் ஹமாஸின் மறைவிடங்களையும் பதுங்கு குழிகளையும் இஸ்ரேல் கண்காணித்ததுடன் அதற்கான வாய்ப்பான சூழலையும் உருவாக்கியிருந்தது.
அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுடன் போர்க்களத்தில் முந்திக் கொள்வதால் போரில் எதிரியின் இருப்பினை கண்டறிந்து அழிப்புகளை சாத்தியப்படுத்தலாம் என இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இரண்டு. இஸ்ரேலிய மக்களது அபிப்பிராயம் பாலஸ்தீனர்கள் பக்கம் சாய்வதை அண்மைய பதிவுகள் அதிகம் வெளிப்படுத்தியிருந்தன. அதனால் பாலஸ்தீனர்களுக்கு தனியான, சுதந்திரமான தேசம் அமைவதை ஆதரிக்கும் நிலையும் ஹமாஸ் மீதான ஆதரவும் அதிகரிக்கும் நிலையை போர் நிறுத்த காலத்தில் அவதானிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. அது மட்டுமல்லாது யூதர்களும் ஹமாஸ் அமைப்பையும் அவர்களது கோரிக்கையையும் நியாயமானதென கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தனர். இதனை முடிவுக்கு கொண்டுவரத் தவறும் பட்சத்தில் இஸ்ரேலிய இருப்பு அதிக நெருக்கடிக்கு உட்படும் என நினைத்த இஸ்ரேலிய ஆளும் தரப்பு போரை உடனடியாக தொடங்கியிருந்தது.
மூன்று, அவ்வாறான எண்ணத்தை ஐக்கிய நாடுகள் சபையும் அதன் செயலாளரும் கொண்டிருந்ததோடு பாலஸ்தீன அரசு அமைவதற்கான நகர்வை உலக நாடுகளும் முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ளன. அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை பாதுகாக்கவும் நிலைத்திருக்க வைக்கவும் போர் இஸ்ரேலுக்கு அவசியமானதாக காணப்பட்டது. காரணம் போரின் மூலம் இஸ்ரேலிய நிலத்தை மட்டுமல்ல அதன் தற்காப்பு பகுதியான காசாவையும் தக்கவைக்க வேண்டும் என்பதும் இஸ்ரேலின் திட்டமிடலாக உள்ளது. அதனால் போர் வாய்ப்புகளையும் அதற்கான அடிப்படைகளையும் கைப்பற்றக் கூடியதாக அமையும் என்பதனால் போரை இஸ்ரேல் தொடக்கியிருந்ததாக தெரிகிறது. போரின் மூலம் காசாவின் முழுநிலப்பரப்பையும் கைப்பற்றுவதுடன் நிலப்பகுதி முழுவதும் இஸ்ரேலிய இராணுவத்தை கொண்டு தக்கவைத்த பின்னர் யூதர்களின் இருப்பினை தக்கவைக்க முடியுமென இஸ்ரேல் கருதுகிறது. காசா மட்டுமல்லாது மேற்குக் கரையையும் அத்தகைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைகிறது. இதன் மூலம் பாலஸ்தீன் முழுவதும் ஹமாஸின் இருப்பினை கண்டறியவும் அழிவுக்கு உட்படுத்தவும் சாதகமான சூழலை ஏற்படுத்த முடியுமென திட்டமிடுகிறது. அதாவது அடுத்துவரும் காலப்பகுதியை எவ்வாறு இஸ்ரேலினது முழுமையான அல்லது அகண்ட நிலப்பரப்பை தக்கவைப்பதென்ற உத்தியை வெளிப்படுத்த வாய்ப்பான சூழலை உருவாக்குவது அதன் நோக்கமாக அமைந்துள்ளது.
நான்கு, இஸ்ரேலிய பிரதமரது அரசியல் இருப்பினைப் பாதுகாப்பதும் தக்கவைப்பதுவும் பிரதான நோக்கமாக தெரிகிறது. குறிப்பாக பணயக் கைதிகளை மீட்டெடுக்க தவறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் டெல்அவிவில் யூதர்களது ஆர்ப்பாட்டம் பெரியளவில் நிகழ்ந்ததுடன் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கோசங்களும் பதவிவிலகுமாறான கோரிக்கைகளும் வலுத்திருந்தன. அதனால் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று, பிரதமர் தனது பதவியை தக்கவைத்துக் கொள்ளத் தேவைப்பட்டது. அதேநேரம் அத்தகைய சூழலை தவிர்க்க முடியாது எதிர்கொண்ட இஸ்ரேல் முடிந்தவரை போரை உடனடியாகவும் அதேநேரம் ஹமாஸின் தயாரிப்புகளுக்கு தடைபோடும் விதத்தில் நகர்த்தப்படுவதும் அவசியமானதாக தென்பட்டது. அதனால் போர் உடனடியாகத் தேவைப்பட்டது. குறிப்பாக தற்போது அமெரிக்க வேல்ஸ்ரீட் எனும் ஊடகம் போர் தொடங்குவதற்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்த ஹமாஸ் தரப்பின் தாக்குதல் பற்றி இஸ்ரேல் ஓராண்டுக்கு முன்பே தெரிந்திருந்ததாகவும் அதனை பெரிதாக கவனத்தில் கொள்ளாததது மட்டுமல்லாது அதனை எதிர் கொள்ள முடியுமெனவும் இஸ்ரேல் கருதியதாகவும் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய தற்போது இருதரப்புக்கும் இடையில் நிகழும் போரை முன்கூட்டியே இஸ்ரேல் தெரிந்து வைத்திருந்ததென்றும் இஸ்ரேலின் உளவுத்துறை போரில் ஹமாஸ் இந்தளவுக்கு ஈடுபடுமென்றும் தாக்குப்பிடிக்குமெனவும் கருதவில்லை என்பதுவுமே இஸ்ரேலிய தரப்பின் நியாயப்பாடாக அமைந்துள்ளது. அதனால் போரை வேகப்படுத்துவதுடன் அழிவையே பாலஸ்தீனர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களது எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியுமென இஸ்ரேல் கருதுகிறது. இதுவரை காலமும் இஸ்ரேல் மட்டுமல்ல ஒடுக்கப்படும் தேசியங்கள் மீதான ஒடுக்குமுறையாளர்களின் உபாயமும் அதுவாகவே அமைந்துள்ளது. அதன் விளைவையே கடந்த 07.09.2023 அன்று இஸ்ரேல் அனுபவித்தது. அத்தகைய எதிர்ப்பு உளவியலே ஒடுக்கு முறைக்குட்பட்ட தேசியங்கள் மீது ஏற்படுத்தப்படுகின்றன. அதற்கான இன்னோர் கட்டத்தை போரின் மூலம் யூதர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர். இத்தகைய எதிர்ப்பு உளவியல் பாலஸ்தீன
சிறுவர்களிடமும் யூதச் சிறுவர்களிடமும் கட்டி வளர்க்கப்படுகிறது. இப்போரில் கொல்லப்பட்டவர்களது எண்ணிக்கையில் அல்லது பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்களும் பெண்களுமாகவே அமைந்திருந்தது. இது போரின் ஓரியல்பாகும். உடனடியாகவும் அதிகமாகவும் பாதிக்கப்படுவது அத்தரப்புக்களே.
ஐந்து, அமெரிக்க வெளிவிவகார செயலாளர் பிளிங்கனது இஸ்ரேல் வருகை போரை தாமப்படுத்துவதுடன் போர் நிறுத்தத்தை நீடிக்க திட்டமிடுவதாக அமெரிக்க ஊடகங்களும் உலக நாடுகளின் அவதானிப்புகளும் வெளியாகியிருந்தது. அதனால் போர் தாமதப்படுத்தப்படும் என்ற நிலை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதனால் பிளிங்கனது வருகையை முன்னிறுத்தி எழுந்த கருத்துகளின் மத்தியில் போரை தொடக்காதுவிட்டால் ஹமாஸின் இருப்பு அங்கீகரிக்ப்பட்டு விடும் என்ற எண்ணத்துடனேயே இஸ்ரேல் போரை உடனடியாக ஆரம்பித்திருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு வருகைதர முயன்ற போதே காசாவில் அமைந்திருந்த வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதலை நிகழ்த்தி பாரிய உயிரிழப்பை ஏற்படுத்தியதை நினைவு கொள்வது அவசியமானது.
அதாவது அமெரிக்க , இஸ்ரேல் கூட்டு உத்தியாகவே தற்போதைய போரை விளங்கிக் கொள்வது பொருத்தமானதாக அமையும். அமெரிக்கா பொதுத்தளத்தில் தனது தாராள முகத்தை பாதுகாக்கவும் இஸ்ரேலின் அபாயமான அணுகுமுறையைக் காட்டுவதும் ஒரே தளத்திற்கூடாகத்தான் என்பதை ஆயுத தளபாடங்கள் முதல் புலனாய்வுத் தகவல்கள் வரை இரு தரப்பும் பரிமாறிக் கொள்கின்றதை வைத்துக் கொண்டு உணரமுடிகிறது. இதனால் போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டு இஸ்ரேல் செயல்படுவதற்கு அமெரிக்காவும் ஒருகாரணமாகவே உள்ளது.
எனவே ஹமாஸ்-, இஸ்ரேல் தரப்புக்கள் போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக் கொண்டமைக்கு பல காரணங்கள் உண்டு. அதிலும் இஸ்ரேலின் நடவடிக்கையே போரைத் தொடங்குவதற்கு காரணமாக அமைந்ததாக தெரியவருகிறது. மீண்டும் ஒரு பெரிய மனித அவலத்தை தோற்றுவிக்கும் சூழலை ஏற்படுத்துவதாகவே தெரிகிறது. அதன் மூலம் இருதரப்பும் பதிலுக்கு பதிலான நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாகவே தெரிகிறது. முழுமையாக இருதரப்பு மக்கள் மட்டுமல்லாது இராணுவத் திறன்களும் அழிவுக்குள் தள்ளப்படும் போராகவே அமையுமென்ற எதிர்பார்க்கை இராணுவ வல்லுனர்களிடம் உள்ளது. இந்தப் போரில் மீட்டெடுக்க முடியாத மீதி பணயக் கைதிகளது நிலையும் அதில் அதிகமாக அமெரிக்க பணயக்கைதிகள் காணப்படுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற விவாதமும் நிலவுகிறது. ஹமாஸின் உத்தியும் அதுவாகவே அமைந்துள்ளது. ஆனால் ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகளை வைத்துக் கொண்டு மீதி பணயக்கைதிகளை மீட்டெடுத்துவிட முடியுமென இஸ்ரேலிய தரப்பு கருதுகிறது. இத்தகைய நிலைக்குள்ளேயே போர் அவசரமாக தொடங்கப்பட்டுள்ளது. இது மீளவும் முடிவற்ற நிலையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.