* இந்த உலகக் கிண்ணத்தில் மொத்தமாக 100 ஓவர்களும் முழுமையாக விளையாடப்பட்ட போட்டிகள் ஒன்று கூட நிகழவில்லை. அதாவது ஒரு போட்டியில் கூட முழு ஓவர்களும் விளையாடப்படாத ஒரே ஒரு உலகக் கிண்ணத் தொடராக இந்தத் தொடர் பதிவானது. இம்முறை தொடரின் மிக நீண்ட போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையில் தர்மசாலாவில் நடைபெற்ற ஆட்டமாக இருந்தது. அந்தப் போட்டி 99.2 ஓவர்கள் வரை நீடித்தது. பதிலெடுத்தாடிய நியூசிலாந்து 50 ஓவர்களுக்கும் துரத்தி ஆடியபோதும் நிர்ணயிக்கப்பட்ட 389 ஓட்ட இலக்கை ஆறு ஓட்டங்களால் தவறவிட்டது. அதாவது இந்த உலகக் கிண்ணத்தில் பதிலெடுத்தாடிய அணி 50 ஓவர்கள் வரை விளையாடிய ஒரே போட்டி இது தான்.
* இம்முறை உலகக் கிண்ணத்தில் ஹட்ரிக் விக்கெட் விழுத்துவதற்கான வாய்ப்புகள் 19 தடவைகள் நெருங்கி வந்தபோதும் தொடர் முழுவதும் ஒரு ஹட்ரிக் விக்கெட் கூட வீழ்த்தப்படவில்லை. ஹட்ரிக் இல்லாத உலகக் கிண்ணம் இதற்கு முன்னர் 1996 ஆம் ஆண்டே நிகழ்ந்துள்ளது. 1999 மற்றும் 2019 இற்கு இடையே உலகக் கிண்ணங்களில் பத்து தடவைகள் ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தப்பட்டதோடு கடந்த ஆறு தொடர்களிலும் குறைந்தது ஒரு ஹட்ரிக்கேனும் பெறப்பட்டுள்ளது. எனினும் 1975 தொடக்கம் 1996 வரையான முதல் ஆறு உலகக் கிண்ணங்களிலும் ஒரே ஒரு ஹட்ரிக் விக்கெட்டை வீழ்த்தியவராக சேடன் ஷர்மா இருந்தார். 1987 தொடரில் அவர் இந்த சாதனையை படைத்தார்.
* ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் அடுத்தடுத்த பந்தில் தமது சதத்தை பூர்த்தி செய்த நான்காவது ஜோடியாக டேவிட் வோர்னர் மற்றும் மிச்சல் மார்ஷ் பதிவாகினர். பாகிஸ்தானுக்கு எதிரான லீக் சுற்று போட்டியின் 31ஆவது ஓவரில் அவர்கள் இவ்வாறு சதம் பெற்றனர். முன்னதாக 2000 ஆம் ஆண்டு தொன்னாபிரிக்காவுக்கு எதிராக மைக்கல் பெவன் மற்றும் ஸ்டீவ் வோ, 2009இல் இலங்கைக்கு எதிராக விராட் கொஹ்லி மற்றும் கெளதம் காம்பீர் அதேபோன்று 2015 இல் ஸ்கொட்லாந்துக்கு எதிராக திலகரத்ன டில்ஷான் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் அடுத்தடுத்த பந்தில் சதம் பெற்றிருந்தனர்.
* பங்களுரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வர்த் லுவிஸ் முறையில் வெற்றி பெற்றபோதும் அந்த அணி நியூசிலாந்தை விடவும் 201 ஓட்டங்கள் குறைவாகவே பெற்றது. இது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாகும். முன்னதாக 2006 கோலாலம்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 309 ஓட்டங்களை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை பெற்ற நிலையில் டக்வர்த் லுவிஸ் முறையில் மேற்கிந்திய தீவுகள் வெற்றியீட்டியது. இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணி 168 ஓட்டங்கள் பற்றாக்குறை வைத்ததே அதிகமாக இருந்தது.
* இந்த உலகக் கிண்ணத்தில் பட் கம்மின்ஸ், மெக்ஸ்வெல்லுடன் இணைந்து இரண்டு சந்தர்ப்பங்களில் மொத்தமாக 305 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர். ஆனால் இதல் கம்மின்ஸின் பங்கு வெறுமனே 20 ஓட்டங்கள் தான். அதாவது டெல்லியில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் மெக்ஸ்வெல் 91 ஓட்டங்களும் கம்மின்ஸ் 8 ஓட்டங்களும் பெற இருவரும் 103 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். பின்னர் மும்பையில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருவரும் 201 ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்துகொண்டனர். ஆனால் இதில் மெக்ஸ்வெல் பெற்ற ஓட்டங்கள் 179.