2023 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த மூன்றாம் காலாண்டு பகுதிக்கான நிதிப் பெறுபேறுகளில் SLT குழுமம் மிதமான நிதிசார் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. SLT PLC வருமானம் ரூ. 17,490 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 3.7% வளர்ச்சியடைந்திருந்தது. மொபிடெல் 2022 மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2.7% சரிவை பதிவு செய்திருந்தது.
காலாண்டில் குழுமத்தின் மொத்த வருமானம் 3.9% இனால் அதிகரித்து ரூ. 27.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. இப்பெறுமதி 2022 மூன்றாம் காலாண்டில் ரூ. 26.7 பில்லியனாக காணப்பட்டது. SLT PLC வருமான வளர்ச்சியில் புரோட்பான்ட் (Broadband), PEOTV மற்றும் நிறுவனசார் தீர்வுகள்(Enterprise Business) வருமான மூலங்கள் பங்களிப்பு செய்திருந்தன. மூன்றாம் காலாண்டில், மொபிடெல் தொடர்ச்சியாக சில காலாண்டுகளில் சரிவை பதிவு செய்திருந்ததை தொடர்ந்து, வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றாம் காலாண்டில் 3% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.
2022 மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், SLT குழுமத்தின் தொழிற்பாட்டு செலவு (Opex) நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 13.3% இனால் அதிகரித்து ரூ. 19.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. SLT இன் தொழிற்பாட்டு செலவு அதிகரிப்பில் பிரதானமாக, மின்சார கட்டண அதிகரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பு போன்றன பங்களிப்புச் செய்திருந்தன.