இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இலங்கையருக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவிக்கும் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் கட்சி என்ற வகையில் தமது அரசியல் நோக்கத்துக்காக இவ்வாறான அடிப்படை யற்ற கூற்றுக்களை சபையில் முன் வைப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
சபையில் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற வகையில் நாம் இனவாத நோக்குடன் ஒருபோதும் செயற்பட முடியாது என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், யுத்தம் நடைபெறும் பகுதிகளுக்கு அருகில் உள்ள மாகாணங்களுக்கு கூட நாம் எமது நாட்டவரை அனுப்புவதில்லை என்றும் குறிப்பிட்டார். வடக்கில் யுத்தம் நடக்கும்போது காலி, மாத்தறை பகுதியில் மேற்கொள்ளப்படும் விவசாய நடவடிக்கைகளுக்கு ஆட்களை அனுப்புவது போன்ற நிலைதான் இது.
அங்குள்ள எமது தூதுவர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்றே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு எந்த யுத்தப் பயிற்சியும் வழங்கப்படுவதில்லை.அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தமது கேள்வியின் போது,
காஸாவில் இடம்பெற்று வரும் உக்கிரமான மோதல்களுக்கு மத்தியில் நாட்டுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்துக்காக இலங்கையரை அங்கு வேலைவாய்ப்புக்காக அனுப்புவது தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். பலஸ்தீனர்களின் வீடு தீக்கிரையாகும் போது அதில் சுருட்டுப் பற்றவைப்பது போன்ற செயல்பாடு இது.
அத்துடன் இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இலங்கையருக்கு அங்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டு ஆயுதப் பயிற்சி வழங்கும் ஏற்பாடுகள் காணப்படுகிறது என்றும் நாம் சந்தர்ப்பவாதிகளாக செயல்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் இலட்சக்கணக்கான இலங்கையர் தொழில் வாய்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மூலமாக பெரும் வருமானம் நாட்டுக்கு கிடைக்கின்றது. யுத்த மோதல்களுக்கு மத்தியில் அந்த நாட்டுக்கு எமது நாட்டவரை அனுப்புவது முறையற்றது என்றும் அவர் தெரிவித்தார். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்