விசேட அதிரடிப்படை தலைமையக பணிப்பாளர்(கட்டடங்கள்) மற்றும் திட்டப் பணிப்பாளராகவும் கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம். அபயகோன், இலங்கை போக்குவரத்து சபையின் பாதுகாப்பு மற்றும் விசாரணை மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் விசேட புலனாய்வுப் பிரிவு, நடமாடும் பரிசோதனைப் பிரிவு மற்றும் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றினூடாக டிப்போக்களின் பாதுகாப்பை பலப்படுத்துதல், முறைகேடுகள், திருட்டுகள், மோசடிகள், ஊழல் மற்றும் பயணச்சீட்டு முறைப்பாடுகள், ஒழுக்காற்றுப் பிரச்சினைகளைக் கையாளுதல், நடமாடும் திடீர் சுற்றிவளைப்பு மூலம் தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுத்தல் என்பன அவருக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவர் இந்த மூன்று துறைகளையும் கண்காணிக்கும் தகுதியான அதிகாரியாக அவர் செயல்படப் போகிறார். இது தவிர, இ.போ.சவின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் விசேட நடமாடும் சோதனைப் பிரிவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்குவதன் மூலம் வருமானம் அதிகரிக்கப்படுவதுடன் சிறந்த ஒரு நிறுவனமாக மாற வேண்டும் என்பது அவரது நம்பிக்கையாகும்.