விளையாட்டு என்றால் வெற்றியும், தோல்வியும் சகஜம் என்று தத்துவம் பேசும் நேரமல்ல இது. உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி பெற்ற தோல்விகள் சகிக்க முடியாததாகிவிட்டது. கடைசியில் சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் தடை செய்யும் அளவுக்கு உச்சத்தை தொட்டுவிட்டது. உண்மையில் இலங்கை அத்தனை மோசமாகவா ஆடியது!
முதல் மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியாவிடம் தோற்ற இலங்கை அணி அடுத்து வந்த நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்தை வீழ்த்தியது வரை வழக்கமானது. ஆனால் அதற்குப் பின்னர் நடந்த ஐந்து போட்டிகளிலும் தோற்றது மாத்திரமல்ல மோசமான தோல்விகளை சந்தித்து அணியின் பலவீனத்தை ஒட்டுமொத்தமாகக் காட்டியது.
இலங்கை வீழ்த்திய நெதர்லாந்து அணி தொடரில் பலவீனமான அணி என்பதோடு நடப்புச் சம்பியனாக வந்தபோதும் இங்கிலாந்து கூட இந்தத் தொடரில் மோசமாகவே ஆடியது.
இலங்கையின் துயரக் கதை ஆரம்பத் துடுப்பாட்ட வரிசையில் இருந்தே தொடங்குகிறது. தொடர்ச்சியாக ஓட்டங்கள் சேகரித்த வீரராக பத்தும் நிசங்க இருந்ததோடு அவர் மொத்தமான 332 ஓட்டங்கள் பெற்றார். ஓட்ட சராசரியும் 41.50 என்ற அளவில் ஓரளவு நன்றாக இருந்தது.
பத்தும் வேகமாக ஓட்டங்கள் சேகரிப்பதில்லை என்பதால் மறுமுனை ஆரம்ப வீரர் குசல் பெரேரா மீதே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதிலும் அணித் தலைவர் தசுன் ஷானக்க முதல் இரண்டு போட்டிகளில் ஆடிவிட்டு வெளியேறியபோதும் அணியில் சொல்லிக்கொள்ளும்படியான ஒரே அதிரடி வீரராக குசல் பெரேரா இருந்தார். ஆனால் அவர் தடுமாற்றம் கண்டார். விளையாடிய ஏழு போட்டிகளில் 149 ஓட்டங்களையே பெற்றார்.
தொடரில் ஒரே ஒரு போட்டியில் தான் அவர் ஆரம்ப விக்கெட்டுக்காக 25 க்கும் மேல் இணைப்பாட்டத்தை பெற்றார். இது எதிரணிக்கு இலங்கை துடுப்பாட்ட வரிசையை ஊடுருவி சாய்க்க இலகுவானது.
குசல் மெண்டிஸை பொறுத்தவரை 2022 இல் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்தார். அதற்கு ஏற்ப அவர் உலகக் கிண்ணத்தையும் நம்பிக்கையுடனேயே ஆரம்பித்தார். தென்னாபிரிக்காவுக்கு எதிராக 76 ஓட்டங்களை அவர் விளாசியபோது எதிரணியும் சற்று தடுமாறியது. அந்த ஓட்டங்களில் எட்டு சிக்ஸர்கள் அடங்கும். பின்னர் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 122 ஓட்டங்களை பெற்றார்.
ஷானக்கவின் காயத்தால் அணித் தலைமை பொறுப்பு குசல் மெண்டிஸின் கைகளில் விழுந்தது. அதுவும் உலகக் கிண்ணத்தில் வைத்து முதல் முறை இலங்கை அணித் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டி ஏற்பட்டது. அது தொடக்கம் குசல் மெண்டிஸால் 40 ஓட்டங்களைக் கூட தாண்ட முடியவில்லை. கடைசி ஏழு போட்டிகளதும் அவரது ஓட்ட சராசரி 13.71 தான். தலைமை பொறுப்பு அவருக்கு ஒரளவுக்கேனும் சுமையை ஏற்படுத்தி இருப்பது இந்தத் தரவு உறுதி செய்கிறது.
இது எதிர்காலத்தில் அவருக்கு தலைமை பொறுப்பை வழங்குவது பற்றி ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளும்.
என்றாலும் சதீர சமரவிக்ரம மற்றும் சரித் அசலங்க பெரும் நம்பிக்கை தருபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இருவரும் ஒன்றிணைந்து இன்னிங்ஸை கட்டியெழுப்புவது அரிதாக இருந்தது. ஒருவரேனும் தனித்து பொறுப்புடன் ஆடுவதை காண முடிந்தது. என்றாலும் மத்திய பின் வரிசையில் வனிந்து ஹசரங்க மற்றும் ஷானக்க போன்ற வேகமாக ஓட்டங்கள் பெறுபவர்கள் இல்லாதது பெரும் பின்னடைவாக இருந்தது.
கடைசி பத்து ஓவர்களில் இலங்கை சராசரியாக 83.43 ஓட்டங்களையே பெற்றிருக்கிறது. மற்ற அணிகளுடன் ஒப்பிட்டால் இது மோசமானது. இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளைப் பார்த்தால் கடைசி ஓவர்களில் இந்த அணிகள் சராசரியாக 130 ஓட்டங்களுக்கு மேல் பெற்றிருக்கின்றன. இது இந்த உலகக் கிண்ணத்தில் கடைசி ஓவர்களின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
துடுப்பாட்ட வரிசை நம்பிக்கை தராதபோதே காயத்துக்கு மாற்று வீரராக அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியூஸை அணிக்கு அழைக்க வேண்டி ஏற்பட்டது. வந்த முதல் போட்டியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகளை சாய்த்து நம்பிக்கை தந்தார். அது அடுத்தடுத்த போட்டிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் கால, சூழல் சாதகமாக இருக்கவில்லை.
ஒட்டுமொத்தமாக, உலகக் கிண்ணத்தில் இலங்கையின் துடுப்பாட்ட சராசரி 25.89. இது அனைத்து அணிகளுடனும் பார்த்தால் நான்காவது மிக மோசமானது. பங்களாதேஷ், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளை விடவே நல்லது.
அண்டை நாட்டில் துடுப்பாட்டத்திற்கு சாதனமான ஆடுகளங்கள் இருந்தபோதும் இலங்கை அணியால் ஒன்பது போட்டிகளிலும் மொத்தமாக 45 சிக்ஸர்களையே பெற முடிந்தது. இலங்கை அணி தொடரில் ஐந்து முறை முதலில் துடுக்கெடுத்தாடியது. அதில் ஒரு முறை மாத்திரமே 300 ஓட்டங்களை தாண்டியது. ஆனால் அதனையும் பாகிஸ்தான் அணி துரத்தி அடித்தது.
தொடர் முழுவதிலுமே இலங்கை வீரர்கள் மொத்தமாக நான்கு முறை மாத்திரமே நூறு ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்டது மற்றொரு மிகப்பெரிய குறை. போட்டி ஒன்றை கட்டி எழுப்புவதற்கு இணைப்பாட்டங்கள் தான் அடிப்படை, அது கைகூடவில்லை.
இலங்கை அணியின் பந்துவீச்சு பற்றிய எதிர்பார்ப்பு உலகக் கிண்ணம் ஆரம்பிப்பதற்கு முன் பெரிதாக இருந்தது. ஆனால் வனிந்து ஹசரங்க காயத்தால் வெளியேறியது பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. இது மத்திய ஓவர்களில் பெரிதாகத் தெரிந்தது. டில்ஷான் மதுஷங்க ஆரம்பத்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால் அவருக்கு உதவியாக, குறிப்பாக மத்திய ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் இருக்கவில்லை.
மதுஷங்க தொடரில் மொத்தமாக 21 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் வேறு எந்த பந்துவீச்சளரும் எட்டு விக்கெட்டுகளைக் கூட தாண்டவில்லை. மத்தியூஸ் மற்றும் லஹிரு குமார தலா ஒரு போட்டியில் சோபித்தார். அது தவிர்த்து மதுஷங்கவிலேயே பெரிதும் தங்க வேண்டி இருந்தது.
அதிலும் இலங்கைக்கு எப்போதுமே பலம் சேர்க்கும் சுழற்பந்து வீச்சு பெரும் பின்னடைவாக இருந்தது. அவர்கள் தொடர் முழுவதுமே 11 விக்கெட்டுகளைத் தான் வீழ்த்தி இருந்தார்கள். மற்ற அணிகளை விடவும் இது குறைவானது.
சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு சராசரி 78.85 ஆக இருந்ததோடு ஓவர் ஒன்றுக்கு 6.07 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்கள். எனவே மத்திய ஓவர்களில் எதிரணிகள் பெரிதாக நெருக்கடி இன்றி ஓட்டங்களை சேகரித்தன.
அனுபவம் பெற்ற சக வீரர் ஹசரங்க இல்லாத நிலையில் மஹீஷ் தீக்ஷன ஆதிக்கம் செலுத்தத் தவறினார். துனித் வெள்ளாலகேவுக்கு அந்த இடைவெளியை நிரப்புவது அதிக சுமையாக இருந்தது. எனவே தொடரில் எதிரணிக்கு அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுப்பதில் இலங்கை அணி முன்னிலை பெற்றது. அதாவது இலங்கை அணி ஓவர் ஒன்றுக்கு 6.52 ஓட்டங்கள் வீதம் விட்டுக்கொடுத்திருக்கிறது.
உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் முன்னரே இலங்கை அணியின் திறமை பற்றி சந்தேகங்கள் இருந்தன. அது அரையிறுதிக்கு முன்னேறும் என்பது ஓரளவுக்கு குருட்டு நம்பிக்கையாகவே இருந்தது. என்றாலும் எதிர்பார்த்ததை விடவும் இலங்கை அணியின் ஆட்டம் மோசமாக இருந்தது. கடைசியில் 2025 சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்னேறுவதற்கு தேவையான முதல் எட்டு இடங்களுக்குக் கூட இலங்கை அணியால் முன்னேற முடியவில்லை.
என்றாலும் இலங்கை அணியின் பெரும்பாலான வீரர்கள் இன்னும் இளமையானவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் குறைந்தது ஐந்தாறு ஆண்டுகளுக்காவது சர்வதேச கிரிக்கெட்டில் வயதுப் பிரச்சினை இல்லாமல் ஆட முடியும்.
எனவே, முறையான திட்டமிடலுடன் அணியை வழிநடத்த முடியுமாயின் அடுத்த உலகக் கிண்ணத்திலாவது இலங்கை அணி பற்றி பெருத்த நம்பிக்கையை வைத்திருக்க முடியும்.
எஸ்.பிர்தெளஸ்