டேவிட் பீரிஸ் குழுமத்தின் நிதிச் சேவைப் பிரிவின் முன்னணி நிறுவனமான அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் (AFL) நிறுவனம் கடன்கொடுத்தல் சந்தையில் தனது நடுத்தர மற்றும் நிலையான இருப்பைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கை தரப்படுத்தல் முகவரமைப்பின் ஆரம்ப தரப்படுத்தலில் A பிரிவில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது இரு சக்கரவண்டிகள், முச்சக்கரவண்டிகள், கார், மோட்டார் ட்ரக்ஸ் மற்றும் ஏனைய வாகனங்களுக்கான லீசிங் வசதிகள், செயற்பாட்டு மூலதன நிதியளிப்பு, முகவர் நிதியளிப்பு, வாகனக் கடன் போன்ற பரந்துபட்ட சேவைகளை வழங்கி வருவதுடன், நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர் கட்டமைப்புக்கு (தனிப்பட்ட மற்றும் கூட்டாண்மை) தொடர்ந்தும் சேவையாற்றி வருகிறது. டேவிட் பீரிஸ் குழுமத்தின் உப நிறுவனம் என்ற ரீதியில், வாகன வியாபாரத்தில் தாய் நிறுவனம் கொண்டுள்ள ஈடுபாடு மற்றும் அதன் ஆரோக்கியமான நிதி நிலைமை இந்தத் தரப்படுத்தலுக்கு வழிகோலியுள்ளது.
அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் நிறுவனம் 55 கிளைகளைக் கொண்டிருப்பதுடன், இதற்கு மேலதிகமாக டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நாடளாவிய ரீதியில் காணப்படும் விநியோக வலையமைப்பின் ஊடாக வாடிக்கையாளர்களைச் சென்றடைய முடிந்தது என இலங்கை தரப்படுத்தல் முகவரமைப்பு தெரிவித்துள்ளது. வாகனங்களுக்கான இறக்குமதித் தடை மற்றும் பொருளாதாரக் கொந்தளிப்புக் காரணமாக கடன்வழங்கலில் வீழ்ச்சி ஏற்பட்டமையால் நிறுவனம் கணிசமான சவால்களுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், ஒதுக்கீட்டுக்கான நாட்களை 180 இலிருந்து 90 ஆக மாற்ற வேண்டி ஏற்பட்டது.