கட்சி அரசியலால் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்ளும் கலாசாரத்துக்கு மத்தியில், பொதுவான விடயமொன்றுக்காக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட்டமை அண்மித்த காலத்தில் இடம்பெற்ற பாரியதொரு அரசியல் கலாசார முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிராக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை உடனடியாகக் கொண்டுவந்து அதனை நிறைவேற்றியிருந்தன.
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி அடைந்த தொடர் தோல்விகளையடுத்து அணியின் நிர்வாகம் பற்றிய விமர்சனங்கள் அதிகரித்து, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஊழல் நிறைந்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களையடுத்து இது தொடர்பில் உடனடியாகச் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சி இந்தப் பிரேரணையை முன்மொழிய, ஆளும் கட்சி இதனை வழிமொழிந்திருந்தது.
பிரேரணையை முன்வைத்து விவாதத்தை ஆரம்பித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் முக்கியமான விடயங்களில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இதுவரை கடைப்பிடித்து வந்த நடைமுறையில் இருந்து விலகிய போக்கின் ஆரம்பமாக இது அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆளும் கட்சி தரப்பில் அமைச்சர் நிமல் சிறிபால. டி. சில்வா பிரேரணையை வழிமொழிந்து உரைநிகழ்த்தினார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் அதற்குப் பொறுப்பான நிர்வாகம் நீக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த விடயத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கவில்லை.
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தொடர் தோல்விகளால் இலங்கை அணியின் ஆதரவாளர்கள் மிகவும் ஏமாற்றமடைந்திருந்த நிலையில், இந்தத் தோல்விகளுக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் காரணம் என்று அமைச்சர் ரொஹான் ரணசிங்க பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு எதிராக இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை அமைச்சர் நியமித்திருந்தார். அர்ஜுன ரணதுங்க தலைமையில் இந்த இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட பின்னரே ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் இதுபற்றி அறிந்திருந்தனர்.
இந்த நிலையில் இடைக்கால நிர்வாகத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்த அதேநேரம், அமைச்சரவையும் கூடி இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடியது.
அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகக் குழு பற்றியும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறித்தும் ஆராய்வதற்காக அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
மறுபக்கத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால நிர்வாகத்துக்கு இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக சபை செயற்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான தகவல்களையும், இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளையும் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
அமைச்சரின் பகிரங்கப்படுத்தலைத் தொடர்ந்தே ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை நீக்குவது தொடர்பான பிரேரணையைக் கொண்டுவந்தனர். கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை இது குறித்த முழுநாள் விவாதம் நடைபெற்றதுடன், விவாதத்தின் இறுதியில் ஏகமனதாக இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவேற்கத்தக்க முன்னேற்றம் நாட்டின் ஏனைய பிரச்சினைகளுக்கும் முக்கியம் அளிக்கப்படும் என நம்ப முடிகின்றது.
சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் இவ்வளவு தீர்க்கமான கட்டத்தில் நாடு பிளவுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு திருப்பத்திலும் ஒருவரையொருவர் எதிர்ப்பது, கட்சி அடிப்படையில் பொதுமக்களிடையே பிளவை ஏற்படுத்தும், அதுவும் நமது முன்னேற்றத்தைத் தடுக்கும். இதுவரையில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் வழமையாக பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் எதிர்ப்பது வழக்கம். எனினும், நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சிக்கல் உள்ளிட்ட சவால்களிலிருந்து மீண்டெழுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையே தொடர்ந்தும் வலியுறுத்தப்படுகிறது. கிரிக்கெட் விடயத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தது போன்று நாட்டின் முன்னேற்றத்துக்கும், சவால்களுக்கு முகங்கொடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேநேரம், ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். ஸ்ரீலங்கா கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, வேறு நிறுவனங்களில் முறைகேடு இடம்பெற்றாலும் சரி ஊழல் மோசடி எங்கு இடம்பெற்றாலும் அது தடுக்கப்பட வேண்டும்.
இதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் தேவையாகும். மறுபக்கத்தில் கிரிக்கெட் என்பது இலங்கையைப் பொறுத்த வரையில் மிகவும் பிரபல்யமானதும் அதிகமான மக்களால் விரும்பப்படும் விளையாட்டுமாகும்.
இதற்கு முன்னர் இருந்த இலங்கை கிரிக்கெட் அணிகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய அணியின் செயல்திறன் குறைவாக இருப்பதை ரசிகர்களால் ஏற்றக்கொள்ள முடியாதுள்ளது. அத்துடன், முன்னைய காலத்தில் இருந்தது போன்று அணி வீரர்கள் மத்தியில் கட்டுப்பாடு இல்லையென்ற குற்றச்சாட்டும், கிரிக்கெட் விளையாட்டுக்குக் கிடைக்கும் பணத்தின் அளவு அதிகரித்திருப்பதும் இந்த நிலைமைக்குக் காரணமாகும் என்றும் விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.
அத்துடன், திறமையான வீரர்கள் பலர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றபோதும், தேசிய அணிக்குத் தெரிவுசெய்யப்படும் வீரர்கள் தொடர்பில் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. வெளிப்படைத்தன்மையான முறையில் வீரர்கள் தெரிவு மற்றும் தேசிய மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு அபிவிருத்தி செய்யப்படாமையும் இதற்குக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் வீழ்ச்சியுற்றுள்ள இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்பி அதனை மறுசீரமைப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் சுயலாப நோக்கம் இன்றி பொதுநோக்கத்தில் செயற்பட வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.
பி.ஹர்ஷன்