Home » இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பட்ஜட் 2024

by Damith Pushpika
November 19, 2023 6:12 am 0 comment
கிழக்கு மாகாண வீதிகள் அனைத்தையும் செப்பனிடலாம்

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அதன் பல்வேறுபட்ட செயற்றிட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். ஓட்டுமொத்தமாக இந்த வரவு செலவுத் திட்டம், ஒரு சிறப்பான வரவு செலவுத்திட்டமாக காணப்படுகின்றது. மலையக தோட்டத் தொழிலாளர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்படல் வேண்டும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி அதிகரிப்பு, போன்றவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாதுள்ள தோட்டத் தொழிலாளர்களின் வேதனங்களும் அதிகரிக்கப்படல் வேண்டும்.

2024ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டமானது, நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கக்கூடியதாக அமைந்துள்ளதாக நான் பார்க்கின்றேன். குறிப்பாக வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு மிகவும் பயன்மிக்கதொரு வரவு செலவுத்திட்டமாக அமைந்துள்ளது. கல்வி மறுசீரமைப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி வரவேற்கத்தக்கதாகும். வடக்கு, கிழக்கில் கடந்த யுத்த காலத்தில் பாதிப்புற்ற அதிகளவு மக்கள் அங்கவீனர்களாகவுள்ளனர். இந்நிலையில் அங்கவீனர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. நாட்டினுடைய முதுகெலும்பாக காணப்படும் கிராமங்களை அபிவிருத்தி செய்ய கிராமிய வீதி இராஜாங்க அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி 10 பில்லியன் ஆகும். இதனூடாக அதனைத்து கிராமிய வீதிகளையும் செப்பனிட முடியும்.

அ. தயாபரன் சமூக செயற்பாட்டாளர்

அ. தயாபரன்  சமூக செயற்பாட்டாளர்

தேர்தலை மையப்படுத்திய வரவு செலவுத் திட்டம்.

வரவு செலவு திட்டமானது முழுமையாக தேர்தலை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது. இதன் மூலம் எமது பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. இது ஒரு ஏமாற்றுவித்தையே என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியருமான சங்கரன் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த வரவு செலவு திட்டத்தை இன்றைய இலங்கையில் இருக்கின்ற, பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாத, எந்த ஒரு ஆய்வின் அடிப்படையிலும் தயாரிக்கப்படாத ஒரு வரவு செலவு திட்டமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

அடுத்து இந்த நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு அங்கமாகவே இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது. எனவே இது மக்களுக்கான வரவு செலவு திட்டமல்ல.

பேராசிரியர் விஜயசந்திரன்

பேராசிரியர் விஜயசந்திரன்

கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் 2024 பட்ஜட்

மாணவர்களின் பாடத்திட்டத்தில் ஆங்கில அறிவை மேம்படுத்துதல், மாணவர் காப்புறுதி, கல்வியற் கல்லூரிகளை பல்கலைக்கழகத்துக்குத் தரம் உயர்த்துதல், சர்வதேச பல்கலைக் கழகங்களை நிறுவுதல், போன்றன நாட்டுக்கு அவசியமாகத் தேவைப்படுபவையாகும். அங்கவீனர்கள், முதியோர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை, அத்தோடு காணி உறுதிப்பத்திரம் வழங்கவுள்ளமை, மெச்சத்தக்கது. எனவே இந்த வரவு செலவுத்திட்டம் எதிர்பார்க்கின்ற அளவுக்கு வெற்றியளிக்கும்.

தேச கீர்த்தி புஹாரி முகம்மது அப்றாரி  காத்தான்குடி

தேச கீர்த்தி புஹாரி முகம்மது அப்றாரி  காத்தான்குடி

அஸ்வெசும திட்டத்துக்காக பாரிய நிதி ஒதுக்கீடு

மிகவும் இக்கட்டான ஒரு நிலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒரு வரவு செலவு திட்டம் இது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் இருக்கின்ற நன்மைகளை நாம் பார்க்க வேண்டும். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டில் இருந்த நிலைமையை அனைவரும் மறந்துவிட்டார்கள். அவ்வாறான ஒரு நிலைமையில் பலரும் நாட்டை பொறுப்பேற்க மறுத்த பொழுது தனி ஒருவராக துணிச்சலுடன் இந்த நாட்டை பொறுப்பேற்று தனது அனுபவத்தின் மூலமாக இன்று ஓரளவுக்ேகனும் மக்கள் மூச்சுவிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதியோருக்கான கொடுப்பனவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டத்துக்காக பாரியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே குறைகளை தேடாமல் நிறைகளை பேசி அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு நாட்டை கட்டியெழுப்ப முயற்சி செய்ய வேண்டும்.

சந்திரகுமார் வர்த்தகர்

இதனைவிடச் சிறந்த வரவுசெலவுத் திட்டத்தை எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்க முடியுமா?

கடந்த வருடம் இந்த நேரத்தில் அனைத்துக்கும் தட்டுப்பாடு நிலவியது. ஆனால் இன்று அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது. தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளுக்கு அனைத்தும் கிடைக்கின்றது. விலை அதிகரித்திருந்தாலும் பொருட்கள் கிடைக்கின்றன.

இந்த நிலைமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லோராலும் பேச முடியும் ஆனால் எத்தனை பேரால் செய்து காட்ட முடியும்? எதிர்க்கட்சிகளால் இதனை விடச் சிறந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியுமாயின், அவர்கள் அந்த யோசனைகளை மக்கள் நலன் கருதி அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

இராமநாதன் விவசாயி

ஏற்றுக்ெகாள்ளக்கூடிய வரவுசெலவுத்திட்டம்

இந்த வரவு செலவு திட்டத்தை பொறுத்த அளவில் ஓரளவு நமக்கு நன்மை கிடைத்துள்ளதாகவே நான் கருதுகின்றேன். குறிப்பாக கல்வி அபிவிருத்தி தொடர்பாக அதிகம் பேசப்பட்டுள்ளது. விசேடமாக உயர் கல்வி தொடர்பில் பல முக்கிய முன்மொழிவுகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.

நாம் எதிர்பார்க்கின்ற அனைத்தையும் ஒரே இரவில் பெற்றுக் கொள்ள முடியாது. இன்றைய நிலைமையில் இந்த வரவு செலவு திட்டமானது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருக்கின்றது.

சின்னத்தம்பி
ஆசிரியர்

சுபீட்சமான எதிர்காலத்துக்கு கட்டியம் கூறும் பட்ஜட்

வரவு செலவுத் திட்டமானது காலத்துக்குப் பொருத்தமான ஒரு திட்டமாகவே இருக்கின்றது. இன்று நாம் இப்படியாவது இருக்கின்றோமே என்பதை நினைத்து சந்தோசப்பட வேண்டும். அன்றைய நிலைமை நீடித்திருந்தால் இன்று எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள் என்பதை கூற முடியாது. நாம் ஏதோ ஒரு வகையில் முன்னோக்கிச் செல்கின்றோம். எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் முன்னோக்கி செல்வோம். அனைத்தும் நம்பிக்கையே.

சீதாலட்சுமி  
அரசசார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்

கடந்தகால வரவுசெலவுத் திட்டங்கள் ஏமாற்றத்தையே தந்துள்ளன

வரவு – செலவு வருடாந்த நிதியறிக்கை யோசனைகளை நான் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. பெரும்பாலான ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் நிதிநிலை அறிக்கைகள் வெறும் கண்துடைப்பாகவே முன் வைக்கப்படுகின்றன.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய ஏழைகள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் முன்மொழியப்படும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றி வைக்கப்படுவதில்லை என்பதே நடைமுறை உண்மை.

இலங்கையில் நடப்பாண்டில் 77 முன்மொழிவுகளில் தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும் 16 வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவே இல்லை என்றும் நான் செய்தியொன்றில் படித்தேன்.

மக்களும் சாராய, சமையல் வாயு, எண்ணெய் விலை, பால்மா, சம்பளம், வட்டி வீதம் போன்ற அவர்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியவற்றைத்தான் நினைவில் வைத்திருப்பார்களே தவிர ஏனையவற்றை மறந்து விடுவார்கள். இது அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.

முன்னர் சீனி, மா, சிகரெட், சாராயம், பஸ் கட்டணம், எண்ணெய் என்பனவற்றின் விலைகள் வருடத்துக்கு ஒரு முறைதான் பட்ஜட்டில் அதிகரிக்கும் அல்லது குறைக்கப்படும்.

இப்போது விலைகளும் சுமைகளும் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்ற நிலையிலும் தொடர்ச்சியான ‘அபிவிருத்தி’ வரவு – செலவு திட்டங்களினால் ஆன பிரயோஜனம் ஏதும் இல்லை என்ற நிலையிலும் இந்த வரவு செலவு திட்டங்கள் நம்மை ஆர்வம் கொள்ளச் செய்வதில்லை.

மக்களின் அத்தியாவசிய பண்டங்கள், சேவைகள் மீதுதான் தொடர்ச்சியான வரி அதிகரிப்புகள் இவ் வரவு செலவு திட்டங்களின் ஊடாக செய்யப்படுகின்றன. செல்வந்தர்களிடம் வரி அறவிடுவதில் கறாராக இருப்பதில்லை. இந்த அதிகரித்த வரி வருமானங்களுக்கு என்னவாகிறது. அவை முறையாக கையாளப்படுகின்றதா என்பது பற்றி எந்தத் தகவல்களும் வழங்கப்படுவதில்லை.

சில சமயம் சுகாதாரம், கல்வித் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் வெட்டு விழுவதை அவதானித்திருக்கிறேன். அதே சமயம் பாதுகாப்பு அமைச்சுக்கு வருடா வருடம் நிதி ஒதுக்கீடு அதிகரித்து வருவது ஏன் என்ற கேள்வி எழுகிறது அல்லவா.

கடந்த நிதி அறிக்கையில் பாதுகாப்பு செலவீனங்களின் அதிகரிப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, ஏப்ரல் குண்டுவெடிப்பு காரணமாகக் காட்டப்பட்டது. மேலும் இந்து சமுத்திர, இந்தோ பசுபிக் அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ வியூக சூழல்கள் காரணமாக இலங்கை இராணுவ ரீதியாக எப்போதும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றொரு காரணமும் முன்வைக்கப்பட்டது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது இலங்கை தேசிய அரசியலும் சரி பொருளாதாரமும் சரி குழம்பிக் கிடக்கிறது. இதில் இந்த நிதியறிக்கை நல்லதா, கெட்டதா என்று கேட்டால் என்ன பதிலைத்தான் சொல்ல முடியும்?

அருள் மகேஸ்வரன்,
ஓய்வு பெற்ற தபால் அதிபர்,
வவுனியா.

கடனாளிகளாகவே வாழும் அரச ஊழியர்களுக்கு நிவாரணமளிக்கும் பட்ஜட்

அரச ஊழியர்கள் கடனாளிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

ஜனாதிபதி 2024ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்திருக்கும் இந்நிலையில் நாட்டின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு சர்வதேசத்தினால் ஏற்கப்பட்ட புதிய பொருளாதார முறைமைக்கும் அடித்தளமிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

2024இல் நாட்டை பொருளாதார ரீதியில் வலுவானதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு, பொருளாதார ரீதியில் பாதிப்புற்ற குடும்பங்களின் வாழ்வாதாரம், சிறிய மற்றும் மத்தியதர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல், போன்றவற்றுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளமையானது வரவேற்கத்தக்கதாகும்.

கோபாலன் பிரசாத்அரச உத்தியோகஸ்தர்

கோபாலன் பிரசாத்
அரச உத்தியோகஸ்தர்

 

இதைவிடச் சிறப்பான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பது கடினம்

மலையக மக்களுக்கு காணி வழங்கி வீடுகள் அமைப்பதற்கு முதல் கட்டமாக 400 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி. தொண்ணூறுகளில் என்று நினைக்கிறேன், லயன்கள் அதில் வசிப்பவர்களுக்கே உரிமையாகும் என ரணில் விக்கிரமசிங்கவும் சௌமியமூர்த்தி தொண்டமானும் அறிவித்திருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது.

பின்னர் அவரே 2015 இல் தோட்டங்களை கிராமமாக்க ஒரு அமைச்சையும் உருவாக்கினார். மலையக அதிகார சபை அமைக்கப்படுவதற்கு பின்னணியில் இருந்தார். நுவரெலியாவில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக இருந்தார்.

ஆனால் மலையகக் கட்சிகளுக்கு இடையிலான இழுபறிகளால் இம்மக்கள் இவற்றின் முழுமையான பலன்களை பெற முடியவில்லை.

ஜனாதிபதி, காணி உரித்துடன் காணி வழங்கப்படும் என்றும் வீடுகள் அமைக்கப்படும் என்றும், தேசிய நீரோட்டத்துடன் சம அந்தஸ்துடன் பெருந்தோட்ட சமூகம் இணைத்துக் கொள்ளப்படும் என்றும் ‘நாம் 200’ விழாவில் தெரிவித்திருந்தார்.

எனினும் இவை தேர்தல் வாக்குறுதிகள், ஜனாதிபதி விரும்பினாலும் இனவாதிகள் செய்ய விடுவார்களா, இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான திறன் மலையகக் கட்சிகளிடம் உள்ளதா என்ற கேள்விகள் படித்த இளைஞர் சமூகத்திடம் எழுவது இயற்கையே.

எனவே இவை தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அனேகமாக ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் காணி உறுதி வழங்கப்படுவதை நாம் அவரிடம் வற்புறுத்த முடியும்.

மேலும் அவர் தினச் சம்பள முறையில் இருந்து தொழிலாளர்களை விடுவித்து சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். மலையகக் கட்சிகளும் சிவில் சமூகமும் இதை எப்படி சாத்தியமாக்கலாம் என்பது பற்றி பேச வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த வரவு – செலவு பற்றி கருத்து தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க, கடனும் விற்பனையுமான பட்ஜட் என்று விமர்சனம் செய்திருப்பதாக ஒரு செய்தியைப் படித்தேன். அரசே நிறுவனங்களை வைத்துக் கொள்ள வேண்டும். தனியார் முதலீட்டாளர்களிடம் கொடுக்கக் கூடாது என்ற கூற்று தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது.

அரசிடமிருந்த ஸ்ரீ லங்கன் விமான நிலையம் எமிரேட்சிடம் வழங்கப்பட்டதும் அது இலாபமீட்டியது. அநியாயமாக அது அரசின் பொறுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும் இப்போது கோடிக் கணக்கில் நஷ்டம். டெலிகொம் நிறுவனம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டால் என்ன நடக்கும்?

எனவே நஷ்டமடையும் அரச நிறுவனங்களை தனியாரிடம் கையளித்து லாபமீட்டுவது நல்லதே. எங்கள் சுமையும் குறையும். இது பாராட்டுக்குரிய பட்ஜட் என்று சொல்ல மாட்டேன். இதைவிட சிறப்பாக சமர்ப்பிக்க முடியாது.

சரோஜா சந்திரன்,
தோட்டத்துறை,
பொகவந்தலாவை

மலையக மக்களை புறக்கணித்த வரவுசெலவுத் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமானது முழுமையாக மலையக மக்களை புறக்கணித்த ஒரு வரவு செலவுத் திட்டமாகவே அமைந்துள்ளது என மலையக மக்கள் முன்னணியின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.

வெறுமனே மலையக மக்களை ஏமாற்றுவதற்காக வீடமைப்பிற்கு நிதியை ஒதுக்கியுள்ளனர். எந்த ஒரு விடயமும் நடைமுறைக்கு சாத்தியமானதல்ல. ஏனெனில் இன்று வரவு செலவுத் திட்டம் என்பதே வெறும் கண்துடைப்பாகும். இவர்கள் அனைவரும் எங்களுடைய மக்களை வெறுமனே வெளிநாட்டு செலவாணியை சம்பாதித்து கொடுக்கின்ற இயந்திரமாகவே பார்க்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சினைகளை மனிதாபிமான அடிப்படையில் பார்ப்பதாகத் தெரியவில்லை. இந்த நாட்டின் முதுகெலும்பாக, கொரோனா காலத்திலும் தங்களை அர்ப்பணித்து இந்த நாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றவர்கள் அவர்கள்.

ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான நியாயமும் கிடைக்கவில்லை. அரச ஊழியர்களைப் பற்றி சிந்திக்கின்ற இந்த அரசாங்கம், ஏன் மலையக மக்களைப்பற்றி சிந்திக்கவில்லை? அரசாங்கத்தின் எந்த ஒரு திட்டத்திலும் எங்களுடைய மக்கள் உள்வாங்கப்படவில்லை. திட்டமிட்ட அடிப்படையில் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள். இது தொடர்பாக அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற அமைச்சர்கள் கவனம் செலுத்துவார்களா?

ஆர். ராஜாராம்மத்திய மாகாணசபை
முன்னாள் உறுப்பினர்

ஆர். ராஜாராம்
மத்திய மாகாணசபை
முன்னாள் உறுப்பினர்

வரவேற்க வேண்டியவை அதிகம் உள்ள பட்ஜட்

நேரடியாகப் பார்த்தால் மக்களுக்கு பாதிப்பு இருப்பது போலத் தெரியவில்லை. ஆனால் ‘வெட்’ வரி அதிகரிப்பு நல்லாட்சி அரசில் பத்தாயிரம் ரூபாவும் எட்டு ஆண்டுகளின் பின்னர் தற்போது பத்தாயிரமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தனியார் துறை ஊழியர்களுக்கு எந்த சம்பள அதிகரிப்பும் இல்லை.

இந்த சம்பள அதிகரிப்புகள், துஷ்பிரயோகங்கள், பலவீனமான பொருளாதார முடிவுகள் காரணமாக தனியார்துறை ஊழியர்கள் தான் அதிக சுமைகளை சுமக்க வேண்டியிருக்கிறது. தனியார்த் துறைக்காரன் என்ற அளவில் இதை சொல்ல வேண்டியிருக்கிறது. இன்றைய சூழலில் எந்தவொரு கொம்பனாலும் சிறப்பான ஒரு வரவு செலவு அறிக்கையைத் தர முடியாது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? அப்படிப் பார்க்கும் போது பாதிப்பு ஏற்படுத்துவதாக இல்லை. ஏற்கனவே துண்டு விழும் தொகை 2851 பில்லியன்களாக இருப்பதால் வரி விதிப்புகள் அதிகரிக்கவே செய்யும்.

நான்கு புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவது நல்ல செய்தி. நுவரெலியாவிலும் பல்கலைக்கழகமொன்றை நிறுவும் யோசனை இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் விபரங்கள் தரவில்லை. மலையகத்துக்கு ஒரு பல்கலைக்கழகம் என்ற கோரிக்கை இருப்பதால் இது அதனுடன் தொடர்புபட்டதா என்று தெரியவில்லை. இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது கொழும்பு நகர குடியிருப்பாளர்கள் செலுத்திவந்த மூவாயிரம் ரூபா வீட்டுக்கான கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டிருப்பதை சொல்லலாம்.

போக்குவரத்து டிஜிட்டல் மயப்படுத்தப்படுவது கட்டாயம். முன்னர் முன் கொடுப்பனவு அட்டை பஸ்களில் புழக்கத்தில் இருந்து பின்னர் மறைந்து போயிற்று. அது மீண்டும் புழக்கத்துக்கு வந்தால் கண்டக்டர்களுக்கும் பயணிகளுக்கும் இடையில் மிகுதிப் பணம் தொடர்பான சச்சரவுகள் நீங்கும் என எதிர்பார்க்கலாம்.

இலங்கையில் காணப்படும் பிரச்சினையே எந்த சட்டமும், விதிமுறைகளும் தொடர்ச்சியாக கைக் கொள்ளப்படாதது தான். வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு ஊக்குவிப்பாக 500 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம். அது எந்த அடிப்படையிலானது என்று தெரியவில்லை. எனினும் வரவேற்கத்தக்கது. மலையகத் தொழிலாளர்களைப் போலத்தான் மீனவர் வாழ்க்கையும் ஊசலாட்டமானதே!

அன்று பிரிட்டனுக்கு கடன் கொடுத்த இலங்கை, கல்லோயா திட்டத்தை சொந்த நிதியில் செயல்படுத்திய இலங்கை இன்று பிச்சை எடுக்கிறது என்ற ஜனாதிபதியின் கூற்று கவனத்துக்கு உரியது.

ஆனால் எமக்கல்ல; அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்தார்கள் என்பதால் அவர்களே இதுபற்றி சிந்திக்க வேண்டும். வடக்கு, கிழக்கு வீடமைப்புக்கு 200 கோடி, சிறிய நடுத்தர வர்த்தகர்களுக்கு இலகு வட்டிக்கடன், யாழ்ப்பாணத்தில் முதலீட்டு வலயம் என்பன முற்போக்கான முன்மொழிவுகள். ஆனால் இவை செயல்படுத்தப்படுமா, போதிய பணம் உள்ளதா என்ற கேள்வியும் உள்ளது.

ரஸ்மிகா சுலோச்சனா, வங்கி ஊழியர், பதுளை

தொகுப்பு: அ.சத்யா, நுவரெலியா தினகரன் நிருபர் எஸ் தியாகு, வ.சக்திவேல்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division