வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை முதலாவதோ அல்லது இறுதியானதோ அல்ல. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பல தசாப்தங்களாகப் பல்வேறு அரசாங்கங்களினால் எவ்வாறு வரவுசெலவுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை நாம் எமது நாட்டின் வரலாற்றில் அறிந்து வந்துள்ளோம்.
ஆனால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் முந்திய அனைத்து வரவுசெலவுத் திட்டங்களிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. ஏனெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தனியார் துறையினருடன் ஆலோசனையை மேற்கொண்டு வரசெலவுத் திட்டத்தை சரியான திசையை நோக்கித் திருப்பியுள்ளார்.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்குரிய வரவுசெலவுத் திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு தனியார் துறை முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை அளித்தார் என்பதை கடந்த வாரம் அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன.
முன்னதாக, 2024 வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறையின் முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் ஜனாதிபதி தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதுடன், அது தொடர்பான பகுதிகளை தனித்தனியாக ஆய்வு செய்தார்.
ஜனாதிபதி கடந்த வாரம் பல்வேறு தனியார்துறை பிரதிநிதிகளைச் சந்தித்து நெருக்கடியிலிருந்து நாட்டின் மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்வதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கள் குறித்து கலந்துரையாடினார். இதில் தனியார்துறை வருவாயை அதிகரிக்கவும், அரசாங்கத்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும் முன்மொழிவுகள் பல முன்வைக்கப்பட்டிருந்தன.
நாளையதினம் (13 ஆம் திகதி) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் தனியார் துறையின் முன்மொழிவுகளை உள்ளடக்குவதற்கு முன்னுரிமை அளிப்பதற்கும், அது தொடர்பான விடயங்களை தனித்தனியாக ஆராயவும் ஜனாதிபதி தனது விருப்பத்தை அறிவித்திருந்தார்.
நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்று நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட சீர்திருத்த வேலைத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி தனியார் துறையினருடன் கலந்துரையாடினார். அரசாங்கத்தின் வருமானம் மற்றும் வினைத்திறனை அதிகரிப்பது, முதலீட்டாளர்களை ஈர்ப்பது, சுற்றுலாத்துறை மற்றும் ஆடைத் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் முன்மொழிவுகளை முன்வைத்தனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது மற்றும் பல்வேறு துறைகளில் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் நோக்கில் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார்துறை நிறுவனங்களின் தலைவர்கள் முன்வைக்கும் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை கவனமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி தனது உறுதிமொழியை வெளிப்படுத்தியிருந்தார். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகள் தனியார் நிறுவனங்களின் தலைவர்களால் பாராட்டப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த சமீபத்திய நடவடிக்கை அவர் அரசியல் முதிர்ச்சிமிக்க, புத்திசாலித்தனம் மிக்க, அனுபவம் வாய்ந்த, தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர் என்பதை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டியுள்ளது.
இலங்கைப் பொருளாதாரத்தின் ஒட்டுண்ணிகளுக்கு அன்றி, இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பவர்களுக்கு இன்றைய அரசாங்கம் முக்கியத்துவம் கொடுப்பதை எவரும் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். நாட்டின் அனைத்து முன்னாள் தலைவர்களும் இதற்கு நேர்மாறாக நடந்து கொண்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான விடயங்களைக் கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் நடவடிக்ைககளை முன்னெடுத்து வருகின்றார்.
பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையில் ஆட்சி புரிந்த முன்னாள் தலைவர்கள் முன்னெடுத்திருக்க வேண்டியதையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது மேற்கொண்டு வருகிறார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் கடந்த பல தசாப்தங்களாக நாட்டின் உண்மையான முதுகெலும்பான தனியார் துறைக்கு உரிய இடத்தை வழங்காததன் விளைவாக இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அனைத்து முன்னாள் தலைவர்களும் ஒட்டுண்ணிகள் கொடுத்த அழுத்தங்களுக்கு அடிபணிந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் கடந்த பல தசாப்தங்களாக நாடு தமக்கு ஆதரவாகச் செயற்படும் ஒரு சில தரப்பினரை மாத்திரம் வளர்ப்பதற்கு ஆட்சியிலிருந்தவர்கள் செயற்பட்டனர்.
இதனால் ஒட்டுமொத்த தனியார்துறையின் உழைப்பும் வீண்விரயமாகும் அளவுக்குச் சென்றிருந்தது. தனியார்துறை வணிக சமூகத்தின் பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதைப் பயன்படுத்தி தனியார் துறையின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மறுபக்கத்தில், முன்னைய ஆட்சியாளர்கள் அரசாங்கத்துறையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக, தமது அரசியல் இருப்பினை தக்க வைப்பதற்காக தேவையற்ற விதத்தில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர். அது மாத்திரமன்றி, அரசாங்கத் துறையில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பணியாற்றாது, தமது சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைமையையும் காணக்கூடியதாக இருந்தது.
அரசாங்கத் துறையின் பல்வேறு பிரிவுகளில் ஊழல் மோசடிகளும் நிறைந்திருந்தன. இதனை அன்றைய அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருந்த நிலைமையும் நாடு இவ்வாறு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்க வழிவகுத்தது எனலாம்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கடமையாற்றிய பிரபல பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜனக குமாரசிங்க மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பல்வேறு பிரபலமான பொருளாதார நிபுணர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுப்படி, தனியார் துறையில் இலங்கை பணியாளர்கள் முன்னேற்றமடைந்து மேல்நோக்கி தள்ளப்பட்டனர் என்பதே உண்மையாகும்.
இலங்கையின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இலங்கை அரச துறையானது தனியார்துறையை கீழ்நோக்கி இழுத்து பலவீனப்படுத்துகிறது என்ற கருத்து பரவலாக நிலவுகின்றது.
சில காலத்திற்கு முன்னர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஒளிபரப்பான நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அனைத்து புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிபரங்களுடனும் அவர்கள் இதனை நிரூபித்திருந்தனர். எனவே இந்த அறிக்கையின் துல்லியம் பற்றி எந்த வாதமும் இல்லை.
அரசுத் துறையும் தனியார் துறையும் எப்படிச் செயல்படுகின்றன என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களினால் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் நாளையதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் என்ற ரீதியில் இரண்டாவது வரவுசெலவுத்திட்டத்தை முன்வைக்கவுள்ளார்.
16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைப்பார் என எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் வெற்றியின் ஊடாக எதிர்காலத்தில் மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருளின் விலைகளை குறைத்து, மக்களுக்கு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்க முடியும் எனவும், இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களுக்கு நாடு முகங்கொடுத்திருக்கும் நிலையில் முன்வைக்கப்படவிருக்கும் வரவுசெலவுத் திட்டம் மறுசீரமைப்புக்களுக்கும், கொள்கை ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்களுக்கும் முன்னுரிமை அளிப்பதாக இருக்கும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாகும்.
இதன் ஓர் அங்கமாகவே தனியார் துறையின் தலைவர்களை அழைத்து ஜனாதிபதி ஆலோசனை நடத்தியிருந்தார். நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கைளை எடுக்கும்போது தனியார் துறையின் பங்களிப்பு மிக மிக அவசியம் என்பதை ஜனாதிபதி உணர்ந்து செயற்படுகின்றார் என்பதை இது பறைசாற்றுகிறது.
மானியங்களையும், நிவாரணங்களையும் வழங்கும் வரவுசெலவுத் திட்டமாக இது அமையாவிட்டாலும், கடந்த சில வருடங்களாக சம்பள உயர்வு எதனையும் பெற்றுக் கொள்ளாத அராசங்கத் துறையினரின் சம்பள உயர்வு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பது மிகவும் சாதகமானதொரு விடயமாகும். அரசாங்கத்துறை மாத்திரமன்றி தனியார் துறையினரின் சம்பள உயர்வையும் அரசாங்கம் கோரியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.