‘மருந்துப்பொருட்கள் இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகத் தராதரம் பாராது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார். மருந்துத் தட்டுப்பாட்டு நிலைமையைச் சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எமக்கு வழங்கிய பேட்டியின் போதே அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனைக் கூறினார்.
கே: எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் பெறுமதிசேர் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது மக்களுக்கு எதிர்காலத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தாதா?
பதில்: அரசாங்கத்தினால் எதிர்வுகூறப்பட்ட வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாத காரணத்தினால் இந்த வரிகளை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது. இதன் ஊடாக மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வரிகளை உயர்த்துவது போல், வரி கட்டாதவர்களிடம் இருந்து வரியை வசூலிப்பதற்கு வரி தொடர்பான வலையமைப்பை விஸ்தரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்வடைவதற்கான வாய்ப்புக்களையும் மறுப்பதற்கில்லை.
கே: பெறுமதிசேர் வரி மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது மிகவும் நியாயமற்ற நடவடிக்கை என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டுகின்றனர். இதைப் பற்றி என்ன கூறு விரும்புகின்றீர்கள்?
பதில்: அரசாங்கத்தின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்துவது என்பது அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும். அதேநேரம், வாழ்க்கைச் செலவு காரணமாக நிவாரணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குவது என்பது வேறுபட்ட விடயம். நிதி நிலைமையை வலுப்படுத்துவதன் மூலம் இந்தச் சலுகைகளை வழங்க முடியும். இந்த இரண்டு புள்ளிகளையும் கருத்தில் கொள்வது அவசியம். நிதி நிலைமையை ஸ்திரப்படுத்துதல் என்பது நீண்ட காலத்திற்கு நாட்டை ஸ்திரப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும், சம்பள உயர்வைத் தனியாருக்கும் வழங்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அரசுக்கு சில திறன்கள் இருந்தாலும், ஊதியத்தை உயர்த்துமாறு தனியார் துறையை நேரடியாக வற்புறுத்த முடியாது.
கே: வரி வசூலிக்கும் விடயத்தில் அரசாங்கத்தின் பணிகள் முறையாக நடைபெறவில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகளின் இறுதியில் பொதுமக்களா பாதிக்கப்படுகின்றனர்?
பதில்: இந்த முறை சம்பாதிக்கும் போதான வரி சேர்க்கப்பட்டுள்ளது. அரசாங்க ஊழியர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்களிடமிருந்து அறவிடப்படும் தொகை குறித்தும் மக்களிடம் உள்ள அழுத்தம் குறித்தும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பணத்தை அச்சிட முடியாது மற்றும் வங்கி முறையின் மூலம் பொதுக்கடன்களைப் பெற முடியாத சூழ்நிலையில் நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு இந்த வரிகளை முறையாக ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். இது கடந்த காலத்தில் நடக்கவில்லை. இருப்பினும், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பொருளாதாரம் ஸ்திரமாக இருந்தால், எதிர்காலத்தில் ஓரளவுக்கு நிவாரணம் பெறலாம்.
கே: வரி அறவீடு பலமான நிலையில் இருந்தால் அரசாங்கத்தின் வருமானம் இந்தளவுக்கு சரிந்திருக்காது என்ற விமர்சனம் உள்ளது. இதில் உண்மை உள்ளதா?
பதில்: ஆம், நாம் கடைப்பிடித்த கொள்கையில் தவறு உள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெறுமதிசேர் வரி 15 வீதத்திலிருந்து 8 வீதமாகக் குறைக்கப்பட்டது. அதை நல்ல நம்பிக்கையுடன் தற்போதுள்ள அரசும் செய்தது. எதிர்பார்த்தவாறு வங்கி வட்டி குறைக்கப்பட்டது. ஆனால் கொவிட் நெருக்கடி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமைகளால், வருவாய் வீழ்ச்சியடைந்ததும் அரசாங்கத்தால் எதிர்பார்த்த அளவு நன்மையைப் பெற முடியவில்லை. அதன் மூலம் இந்த நிதிப் பொறி நடந்தது.
கே: புதிய சுகாதார அமைச்சராக நீங்கள் ஒரு பாரிய சவாலுக்கு முகங்கொடுக்கத் தயாராகி வருகின்றீர்கள். இதைப்பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: சுகாதார அமைச்சு என்பது பல நிலையான அமைப்புக்களைக் கொண்ட அமைச்சாகும். வரலாறு முழுவதிலும் மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுகாதாரத்துறையில் நாம் முற்போக்கான நிலையில் காணப்படுகின்றோம். கடந்த காலங்களில் நிதிப்பற்றாக்குறை காரணமாக மருந்துகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பில் வழங்கப்பட்ட கட்டளைகள் மற்றும் அவற்றின் ஊடாக அனுப்பப்பட்ட பொருட்களின் தரம் தொடர்பில் நெருக்கடி ஏற்பட்டது. அது தொடர்பான தொழில்முறை துறைகளில் பல சிக்கல்கள் உள்ளன. அவை முறையாகத் தீர்க்கப்பட வேண்டும்.
கே: கடந்த காலங்களில் நிதித்துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் சுகாதாரத்துறையில் பிரச்சினைகள் ஏற்பட்டதா? அல்லது உத்தியோகபூர்வ முறைகேடுகள் காரணமா?
பதில்: இந்த இரண்டு விடயங்களும் இதில் காணப்படுகின்றன. அவை நிதிப்பிரச்சினைகள் மற்றும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகள் என்பனவாகும். இதனால் மக்களின் விடயங்கள் பாதிக்கப்பட்டன.
கே: கடந்த காலங்களில் தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தற்போது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்குவீர்களா?
பதில்: தற்போது, இரண்டு விசாரணைகள் நடந்து வருகின்றன. ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணை, மற்றையது அமைச்சினால் நடத்தப்பட்ட உள்ளக விசாரணை. இமினோகுளோபின் என்ற மருந்து தொடர்பாக இந்தப் பிரச்சினைகள் எழுந்தன. இது தொடர்பான அறிக்கையிடலுக்கு அமைய தயாரிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் போலியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை சம்பந்தப்பட்ட நபரால் தயாரிக்கப்பட்டதா அல்லது அமைச்சில் உள்ள சிலரின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டுக்கொண்டுள்ளோம்.
கே: இதன் மூலம் அநீதிக்கு ஆளானவர்களுக்கும், கடந்த காலங்களில் உயிரிழந்தவர்களுக்கும் எப்படி நீதி கிடைக்கும்?
பதில்: இமினோகுளோபின் மருந்திலிருந்து மூன்று எதிர்வினைகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கண் மருத்துவமனையில் நடந்தது என்னவென்றால், பக்டீரியா மூலம் மருந்து அதன் பாதுகாப்பு நிலையை இழந்துவிட்டது. இது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் காணப்படுகின்றன. அவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியும்.
கே: தற்போது மருத்துவமனைக் கட்டமைப்பில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. விசேடமாக மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுப்பதற்கு ஏவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பதில்: உடனடி அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் 14 மருந்து வகைகள் உள்ளன. இவற்றுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. இருந்தாலும் வேறு மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கொள்முதல் செயல்முறையை வலுப்படுத்துவது அவசியம். சமீபத்திய நிதி உதவியின் மூலம் முறையாக பணம் செலுத்துவது சாத்தியமாகியுள்ளது. கடந்த காலங்களில் பணம் செலுத்தாததால் விநியோகச் சங்கிலியில் சரிவு ஏற்பட்டது. மீண்டும், இலங்கையில் உள்ள முதல்தர விநியோகஸ்தர்களைப் பதிவு செய்து அந்த மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவரை நாம் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
கே: மருந்துகள் வாங்கும் போது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை கடந்த காலங்களில் நிலவியது. எதிர்காலத்தில் மருந்துகளின் விலையை குறைக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லையா?
பதில்: இதனை உறுதியாகச் சொல்ல முடியாது. அது தொடர்பான சமன்பாடு உள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் விலையை அடிப்படையாகக் கொண்ட விலைச் சூத்திரத்துக்கு அமைய மருந்துப் பொருட்களின் விலைகளில் மாறுபாடு ஏற்படும். சாத்தியமான சலுகைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
கே: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இது எதிர்காலத்தில் மருத்துவமனைக் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
பதில்: அவர்களின் பிரச்சினைகளில் பெரும்பாலானவை நிதி மற்றும் சம்பளம் தொடர்பானவை. தொழில்சார் ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். நாட்டின் நிதி நிலைமை சவாலுக்குரியதாக இருந்தாலும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.