சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) அங்கத்துவத்திலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபையை இடைநிறுத்துவதற்கு ஐ.சி.சி. சபை தீர்மானித்துள்ளது.
ஓர் அங்கத்தவராக இலங்கை கிரிக்கெட் தனது பொறுப்புகளை தீவிரமாக மீறி இருப்பதாக நேற்று முன்தினம் (10) கூடிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சபை தீர்மானித்துள்ளது. குறிப்பாக, இலங்கை கிரிக்கெட், முகாமைத்துவ விடயங்களில் சுய அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் ஒழுங்குமுறை மற்றும் அல்லது நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருக்கக் கூடாதென்பதை உறுதி செய்ய தவறி இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த இடைநிறுத்தம் தொடர்பான நிபந்தனைகள், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சபையால் உரிய காலத்தில் தீர்மானிக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை கிரிக்கெட்டை கலைத்து, முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால சபையொன்றை நியமித்ததன் தொடர்ச்சியாகவே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த இடைக்கால சபைக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததுடன், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகளை நீக்குவது தொடர்பாக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சபையின் கூட்டம் எதிர்வரும் 18 – 21ஆம் திகதிகளில் அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளதால், இலங்கை விவகாரம் தொடர்பாக கலந்துரையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சபைக் கூட்டம் நிகழ்நிலை (Online) வழியாக நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் அரசியல் தலையீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டிருப்பதுடன், இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.சி.சி. சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.
எனினும், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை கோரி இருப்பதாகத் தெரியவருகிறது. இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக ஷம்மி சில்வாவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சபை தொடர்ந்து அங்கீகரிப்பதுடன், அவர் தற்போது இந்தியாவில் இருப்பதால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியாக இந்த சபைக் கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.
ஒரு பார்வையாளரென்ற மட்டத்தில் இலங்கை கிரிக்கெட்டின் பிரதிநிதியாக அஹமதாபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்திலும் ஷம்மி சில்வா பங்கேற்பாரென்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த இடைநிறுத்தத்தை ஓர் எச்சரிக்கையாக விடுத்துள்ளது. தற்போதைய சூழலில் இந்த நடவடிக்கை இலங்கை கிரிக்கெட்டுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இலங்கை அணியின் உலகக் கிண்ணப் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை (09) நிறைவடைந்ததுடன், எதிர்வரும் டிசம்பர்வரை அதற்கு எந்தக் கிரிக்கெட் போட்டிகளும் இல்லை. அதேபோன்று, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அங்கத்துவ நாடுகளுக்கான வருடாந்த நிதியை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களிலேயே வழங்குகிறது.
எனினும், இதற்கு முன்னரும் இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால சபை அமைக்கப்பட்ட போதும், அது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தடைக்கு உட்படவில்லை.
2014 தொடக்கம் 2015வரை இடைக்கால சபை நிர்வகித்த போது, இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் நிதிகள் மூன்றாம் தரப்பிடம் நிலுவையில் வைக்கப்பட்டதுடன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சபைக் கூட்டங்களில் இலங்கையை பார்வையாளர் அந்தஸ்துக்கு தரமிறக்கப்பட்டிருந்தது. எனினும், அது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அங்கத்துவ நாடாக தொடர்ந்தும் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.
1973ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேசிய விளையாட்டு சட்டத்தின்படி, அனைத்து இலங்கை தேசிய அணிகளையும் அங்கீகரிக்கும் பொறுப்பு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு அரசியல் தலையீட்டினால் சிம்பாவே கிரிக்கெட் சபை இடைநிறுத்தப்பட்ட பின் கடந்த நான்கு ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் இடைநிறுத்தப்பட்ட இரண்டாவது முழு அங்கத்துவ நாடாக இலங்கை கிரிக்கெட் உள்ளது. எவ்வாறாயினும், சிம்பாவேக்கு விதிக்கப்பட்ட தடையில் அந்நாட்டின் அனைத்து கிரிக்கெட் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டதுடன், நிதிகளும் முடக்கப்பட்டன. இலங்கை விடயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னெச்சரிக்கையாகவே செயற்பட்டுள்ளது.