பேர்சி அபேசேகர, கிரிக்கெட் தெரிந்த எல்லோருக்கும் பரீட்சயமானவர். மைதானத்தில் கிரிக்கெட் ஆடாவிட்டாலும் அரங்கில் ஒரு கிரிக்கெட் ரசிகராக உலகெங்கும் புகழ்பெற்ற முதலாமவர் இவர்தான். அதாவது கிரிக்கெட்டின் முதலாவது “சியர்லீடர்” என்று குறிப்பிடலாம்.
வயதாக, வயதாக ‘பேர்சி அங்கிள்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட டபிள்யு.டி. பேர்சி கிம்சன் மெண்டிஸ் அபேசேகர இனியும் எம்மிடத்தே இல்லை. எப்போதும் இலங்கை ஆடும் போட்டிகளில் தேசிய கொடியோடு அரங்கில் அங்கும் மிங்கும் சுற்றும் பெர்சியை அண்மைக்காலமாக காணக் கிடைப்பதில்லை.
சுகயீனமுற்றிருந்த அவர் மரணித்ததாக ஒரு மாதத்திற்கு முன்னர் கூட வதந்தி வந்தது. எனினும் இப்போது அது உண்மையாகிவிட்டது. கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி 87 ஆவது வயதில் பெர்சி காலமாகிவிட்டார். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடக்கம், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் வரை அவரின் மரணத்திற்கு அனுதாபச் செய்திகள் குவிந்தன.
இத்தனைக்கும் அவர் ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகர் தான். என்றாலும் இலங்கை கிரிக்கெட் பற்றி பேசும்போது அவரை தவிர்ப்பது நியாயம் சேர்ப்பதாக இருக்காது. இலங்கை கிரிக்கெட்டின் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திலும் ஓர் ஓரமாக அவர் இருந்திருக்கிறார்.
இங்கிலாந்து போகிற வழியில் 1948 ஆம் ஆண்டு சேர் டொன் பிரட்மன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி இலங்கை வந்தது அவுஸ்திரேலியாவுக்கு சாதாரணமாக இருந்தாலும் இலங்கை கிரிக்கெட்டுக்கு முக்கியமான தருணம் அது. அதுதான் பெர்சியின் சர்வதேச கிரிக்கெட்டின் முதல் அனுபவம். அப்போது கொழும்பு ஓவல் (சரா மைதானம்) மைதானத்தில் அவுஸ்திரேலிய அணி ஆடியது.
“எனது இரு சகோதரர்களும் காலியில் இருந்து ரயிலில் (கிரிக்கெட் பார்க்க) அழைத்துச் சென்றார்கள். நாம் புற்தரையில் அமர்தோம். ஏழை மக்கள் அங்குதான் செல்வார்கள். டிக்கெட் 25 சதம் இருந்தது. எல்லா இடமும் கொடிகள் இருந்தன” என்று இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகராக தனது முதல் அனுபவத்தை கூறுயிருந்தார் பெர்சி.
அது தொடக்கம் பெர்சியின் கிரிக்கெட் ஆர்வம் குறையவே இல்லை. புனித அலோசியஸ் கல்லூரி, அக்கியுனாஸ் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் ஏ.எம்.டபிள்யு கிரிக்கெட் அணிக்காக தனது இளமைக் காலத்தில் கிரிக்கெட் ஆடி இருக்கிறார்.
1971இல் மைதானத்திற்குள் அனுமதி இன்றி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்ட பெர்சி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
1979 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இரண்டாவது உலகக் கிண்ண போட்டி நடந்தபோது இலங்கை கிரிக்கெட் ரசிகராக கலந்துகொண்டு இலங்கை தேசியக் கொடியுடன் அரங்கில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அது தொடக்கம் இலங்கை அணியின் வெற்றி, தோல்விகளில் பெர்சி தொடர்ந்து இருந்து வந்தார். இலங்கை கிரிக்கெட்டின் உச்சம் என்று அழைக்கப்படும் 1996 உலகக் கிண்ணத்தை இலங்கை வென்றபோது கூட பெர்சியை பார்க்க முடியும்.
1981 இல் இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை வென்று அப்போதைய இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக இருந்த காமினி திசாநாயக்க நாடு திரும்பியபோது கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவரை வரவேற்றவர்களில் பெர்சி குறிப்பிடத்தக்கவர்.
லோட்ஸ் மைதானத்தில் கொடிகளுக்கு அனுமதியில்லை என்ற நிலையில் 1984 இல் அவரது சிங்கக் கொடி எம்.சி.சியால் பறிமுதல் செய்யப்பட்டது. 1985 இல் கொழும்பில் இலங்கை முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றபோது அரங்கில் இருந்து கொண்டாடியவர்களில் பெர்சியும் ஒருவர்.
1996 ஆம் ஆண்டுக்குப் பின்னரான இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலத்தின் உச்சத்தையே அவர் நேரடியாகப் பார்த்தார். அர்ஜுன ரணதுங்க தொடக்கம் அரவிந்த டி சில்வா, சனத் ஜனசூரிய வரையும், 2010இன் நடுப்பகுதியில் ஒருசில ஆண்டுகளில் மஹேல ஜனவர்தன, குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஓய்வு பெறும்போதும் தேசிய கொடியுடன் அவர் அருகில் இருந்தார்.
“எனது முதல் போட்டி தொடக்கம் கடைசி ஆட்டம் வரை அங்கிள் பெர்சி தொடர்ச்சியாக இருந்தார். இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஆடை அணிந்தவர்களுக்கு நிகராக அவர் இலங்கை கிரிக்கெட்டுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறார். அவரது ஆற்றல், அவரது ஆர்வம், அறிவு மற்றும் உற்சாகத்தை உண்மையில் நாம் இழந்துவிட்டோம். அங்கிள் பெர்சியின் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று சங்கக்கார அவரது மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்து எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிடுகிறார்.
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மாத்திரம் அல்ல சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் பெர்சி என்றால் அலாதி அன்பு. நியூசிலாந்து முன்னாள் அணித் தலைவர் மார்டீன் குரோ தனது இரு ஆட்டநாயகன் விருதுகளை பெர்சிக்கு வழங்கினார். கிரிக்கெட் மீதான பெர்சியின் காதல் மற்றும் பக்திக்காக இதனை அர்ப்பனிப்பதாகக் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவில் மைதானத்திற்குள் வந்ததற்காக பெர்சி தடுக்கப்பட்டபோது அவருக்காக அடம் கில்கிறிஸ்ட் மற்றும் ரிக்கி பொண்டிங் வாதாடியதை பார்க்க முடிந்தது.
தனது முதலாவது தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று சதங்களை பெற்று பெரும் நம்பிக்கையோடு இலங்கை வந்த மொஹமட் அஸாருதீன் இலங்கைக்கு எதிராக சாதிக்கத் தவறிவிட்டார். அப்போது பெர்சி தனக்கு வசியம் செய்துவிட்டதாக நகைச்சுவையாகக் கூறினார் அஸாருதீன்.
விராட் கொஹ்லி ஒருமுறை அவரை இந்திய அணியின் உடைமாற்றும் அறைக்கு அழைத்துச் சென்றார். சுகவீனமுற்றிருந்த பெர்சியை அண்மையில் இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா அவரது வீட்டுக்கே சென்று பார்வையிட்டார்.
அரங்கில் சுற்றித் திரியும் பெர்சியை ஒருமுறை இலங்கை கிரிக்கெட் சபையில் இணையும்படி நிர்வாகம் அழைப்பு விடுத்தது. என்றாலும் அதனை அவர் நிராகரித்துவிட்டார். “முழு உலகிலும் எனக்குப் பிடிக்காத மூன்று விடயங்கள் உள்ளன. ஒன்று அரசியல், மற்றது கிரிக்கெட் நிர்வாகம், மூன்றாவது குடும்பக் கட்டுப்பாடு” என்றார் பெர்சி.
பெர்சியின் கிரிக்கெட் மீதான காதல் நிகரற்றது. இப்போதெல்லாம் பெரும்பாலான கிரிக்கெட் அணிகளுக்கு பெர்சி போன்று கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் பெர்சிதான் அதற்கு முன்னோடி. இப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகரான சூபி அப்துல் ஜலீல் பிரபலமானவர். அவரைக் கேட்டால் தானும் பெர்சியாக மாற விரும்புவதாகக் கூறுகிறார்.
என்றாலும் பெர்சியின் கிரிக்கெட் மற்றும் இலங்கை கிரிக்கெட் மீதான அன்பு ஒப்பிட முடியாதது. கடைசி காலத்தில் அவர் தனது பேரக் குழுந்தைக்கு சேர் கார்பில் சோர்பஸை நினைவுபடுத்தும் வகையில் கார்பில் என்றும் சச்சின் டெண்டுல்காரை நினைவுபடுத்தும் வகையில் சசின்க என்றும் வைத்திருப்பது நல்ல உதாரணம்.
எஸ்.பிர்தெளஸ்