சுற்றாடலை பேணும் செயற்பாட்டின் முக்கிய நகர்வாக, லங்கா சதொச நிறுவனத்துடன் ஹேமாஸ் கைகோர்த்துள்ளது. அதனூடாக சமூகத்தில் அதிகரித்துச் செல்லும் பிளாஸ்ரிக் மாசுக்கு தீர்வு காண்பதுடன், நிலைபேறான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஹேமாஸ் கன்சியுமர் பிரான்ட்ஸ் விற்பனை அணியினால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தினூடாக, லங்கா சதொசவில் ஹேமாஸ் தயாரிப்புகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மீளப் பயன்படுத்தக்கூடிய இலவச பை வழங்கப்படும். முதற் கட்டமாக, சூழலுக்கு நட்பான 40,000 பைகள் நாடு முழுவதிலும் காணப்படும் 440 லங்கா சதொச விற்பனையகங்களில் விநியோகிக்கப்படும்.
விற்பனை நிலையங்களின் வாடிக்கையாளர்கள் சமூகமளிப்புக்கமைய இந்த Eco பைகள் பகிர்ந்தளிக்கப்படுவதுடன், இந்த பைகள் பிரத்தியேகமான குறியீட்டு கட்டமைப்பை கொண்டிருக்கும்.
அதனூடாக தொடர்ச்சியாக இவற்றை பயன்படுத்துகையில், அவற்றை மீளப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு விலைக்கழிவுகள் வழங்கப்படும். அதனூடாக சமூகத்தாரிடையே நிலைபேறான பழக்கங்களை ஊக்குவிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், பொறுப்பு வாய்ந்த பிளாஸ்ரிக் கழிவு அகற்றலை ஊக்குவிக்கும் வகையில், ஹேமாஸ் மற்றும் லங்கா சதொச ஆகியன, சதொச விற்பனை நிலையங்களில் பிரத்தியேகமான பிளாஸ்ரிக் கழிவு சேகரிப்பு பகுதிகளை நிறுவியுள்ளன.