யானை மிதித்த
சோளக் காடானதே
எங்கள் பூர்வீகம்..
கறுப்பு ஜூலையும்
கறைபடிந்த
ஒக்டோபரும்
எங்கள் கலன்டரின்
கறுப்புப் புள்ளிகள்
எங்கள் தொப்புள்
கொடிகள்
இன்னுமொருமுறை
துண்டாடப்பட்ட நாள்
கண்விழிக்கு முன்னே
எங்கள் தெருக்கள்
களவாடப்பட்ட நாள்
எங்கள் பாட்டனும்
பூட்டனும்
விதைக்கப்பட்ட பூமி
சிறைபிடிக்கப்பட்ட
சோக வரலாற்றின்
முதற் பாகம்…..
எங்கள் இதயங்களை
கழற்றி வைத்து விட்டு
கண்ணீர் ஆற்றில்
மிதந்து கரைசேர்ந்த
பாவம் ஆறிய
அப்பாவிகள் நாங்கள்….
தரையில்
தத்தளித்த சனங்களை
கடல் அலைகள்
அரவணைத்தது
காகங்கள் கூட
சோகத்தில்
மாலையில்
கரைந்தன….
ஒவ்வொரு வீடும்
சவங்கள் இல்லா
மரண வீடானது
கிரோசிமா நாகசாகிக்கு பின்
ஓர் அணுகுண்டின்
உஷ்ணம்
எங்கள் மூச்சில் படிந்தது
தென்னை மரங்களும்
பனைமரங்களும்
ஓலையில் சாசனம்
எழுதின
கால்கள் இருந்தால்
உங்களோடு நாங்களும்
கரைசேர்வோம் என…
அன்று ஒலித்த
பாடசாலை மணி
கடைசியாய்
கேட்ட பள்ளி
பாங்கு எல்லாம்
அந்த மரண ஊர்வலத்தின்
இறுதிச் சடங்குகள்…
தூரத்துப் பயண
ஜன்னல் ஒரக் காட்சிகளாய்
நான் நடை பழகிய
திண்ணை
சைக்கள் ஒட்டிய சாலை
பின்னேர காசில்
அங்காடி தின்ற தெரு
நிலக்கடலை விற்கும் ஆச்சா…
என் வீட்டுப் படலையை
இழுத்து விட்ட
என் தாயின்
கண்களில் இறுதியாய்
சொட்டிய கண்ணீர்….
கவலையை
மறைக்க முயன்று
தோற்றுப்போன என்
தந்தை….
வெள்ளத்தில்
அடிபட்ட சறுகுகளாய்
நாங்கள்
கரையொதுங்கியது என்னவோ
பாலைவனத்தில்…..
சத்தியாமாய்
தெரியவில்லை
இன்றுவரை எமக்கு
நாம் செய்த
குற்றம் என்னவென்று….
என் நாட்குறிப்பில் ஒக்டோபர் 1990
439
previous post