எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வரும் நிலையில், பட்ஜட் ஊடாகக் கிடைக்கக் கூடிய நிவாரணங்கள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புக்கள் காணப்படுகின்றன.
நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றிருக்கும் பின்னணியில் பாரிய நிவாரணங்களுக்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானதாக இருப்பதற்கே வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இருந்தபோதும் அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் கடந்த அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவை நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருந்தார். அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற வகையில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும். அதேபோல, தனியார் துறையினரும் தமது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதி முன்வைத்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை நாட்டு மக்களில் பெரும்பாலானோர் சாதகமாகப் பார்க்கின்றனர். கொவிட் தொற்றுநோய், அதன் பின்னரான பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் கடந்த சில வருடங்களாக சம்பள அதிகரிப்பு என்பது கடினமானதொன்றாகவே அரச மற்றும் தனியார் துறைகளால் பார்க்கப்பட்டது.
கொவிட் தொற்றுநோயின் உச்சத்தில் பல வணிகங்களும், தொழில்முயற்சிகளும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன. பல நிறுவனங்கள் ஆட்குறைப்புக்களைச் செய்ததுடன், ஊழியர்களுக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை. தனியார் துறையில் மேலதிக கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன, செலவுச்சுருக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இருந்தபோதும் இக்கட்டான சூழ்நிலையிலும் கூட அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அரசாங்க ஊழியர்கள் அதிர்ஷ்டசாலிகளாகப் பார்க்கப்படுகின்றனர்.அதேவேளை கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி வேளைகளிலும் அரச ஊழியர்களின் மாதாந்தச் சம்பளம் தாமதமின்றியே வழங்கப்பட்டு வந்தது.
இருந்தபோதும், உண்மையில் அரசாங்கத் துறையில் உள்ளவர்களை எடுத்துக் கொண்டால் பொருளாதார நெருக்கடி போன்றவற்றினால் கடினமாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் என்று அவர்களைக் கூற முடியும். ஏனெனில், விலைவாசி அதிகரித்து வாழ்க்கைச் செலவு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள போதும், வருமானத்தில் எவ்வித அதிகரிப்பும் ஏற்படாமை அவர்களுக்குப் பெரும் பாதிப்பாக இருந்தது.
உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் என பலதரப்பட்டவர்களும் தமது அதிகரித்த செலவினங்களை பொருட்களின் விலைகளை அதிகரிப்பதன் ஊடாக ஈடுசெய்து கொண்டனர். இதுபோன்று பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் தமது செலவினங்களுக்கான அதிகரிப்பை ஏதோ ஒருபக்கத்தில் ஈடுசெய்யத் தொடங்கினர். இருந்தபோதும் அரசாங்க ஊழியர்களின் வருமானத்தில் எவ்வித அதிகரிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி சம்பள அதிகரிப்பொன்று பற்றி தற்போது பேசியுள்ளார்.
அதேநேரம், அரசாங்கம் முன்வைக்கவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டமானது மிகவும் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையில் முன்வைக்கப்படும் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியுள்ள நீடிக்கப்பட்ட நிதி உதவியின் இரண்டாவது கட்டத்தைப் பெறுவதற்கான பேச்சுக்கள் நடைபெற்றுவரும் நிலையில், பாரிய மறுசீரமைப்புகள் இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
பொருளாதா ரீதியில் நாட்டைச் சரியான பாதைக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களால் பல்வேறு மறுசீரமைப்புக்களுக்கான முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதாயின் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை முழுமையாகப் பெற்றுக்கொள்வதாயின் அதன் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும். வரி வருவாயை அதிகரித்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்களே அதன் நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சிலவற்றை அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது. குறிப்பாகச் சொல்வதாயின் இலங்கை மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக இயங்கச் செய்வதற்கான சட்டம், ஊழல் மோசடியைத் தடுப்பதற்கான சட்டம் போன்ற சட்டரீதியான மறுசீரமைப்புக்களைக் கூறமுடியும்.
அது மாத்திரமன்றி, சமூகத்தில் பாதிக்கப்படக் கூடியவர்களைப் பாதுகாக்கும் வலையமைப்புக்களையும் பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாக ‘அஸ்வெசும’ போன்ற நலன்புரித் திட்டங்களும் வெளிப்படைத் தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்ல அரசாங்கம் கடுமையான பிரயத்தனங்களை முன்னெடுத்து வரும் அதேநேரத்திலேயே, அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வுக்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில், சம்பள உயர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் எனக் கோரி அரசாங்க ஊழியர்களின் பல்வேறு தொழிற்சங்கங்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அரசாங்கம் சம்பள உயர்வொன்றுக்குத் தயாராகியிருக்கும் நிலையில் தமது போராட்டங்களின் காரணமாகத்தான் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது எனக் காண்பிக்கும் நோக்கிலேயே, இந்தத் தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன என்பது நன்றாகவே தெரிகின்றது.
இது அடிப்படையற்ற செயற்பாடு என ஜனாதிபதியும் கூறியிருந்தார். உண்மையில் அரசாங்கம் எவ்வாறானதொரு பொருளாதாரச் சூழ்நிலையின் மத்தியில் சம்பள உயர்வொன்றை வழங்குவதற்குத் தயாராக உள்ளது என்பதை அரசாங்க ஊழியர்கள் மனதில் கொள்வது அவசியமாகும். நெருக்கடிக்கு உள்ளான பொருளாதாரம் முழுமையாக மீட்சி பெறாத போதிலும், அரச ஊழியர்களது கோரிக்கைக்கு உடனடியாகவே சாதகமான பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, தொழிற்சங்கங்கள் நாட்டின் முன்னேற்றத்தில் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது சொந்த விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றிக் கொள்வது நியாயமானது அல்ல. விசேடமாக நெருக்கடி காலத்தில் நாட்டில் உள்ள சகல தரப்பு மக்களும் ஏதாவது அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தே இருக்கின்றனர்.
இந்த நிலையில் அவர்களை மேலும் சிக்கல்களுக்குள் தள்ளும் வகையில் தொழிற்சங்கங்கள் நடந்து கொள்வது நியாமானது அல்ல. ஒரு சில தொழிற்சங்கங்கள் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்துக் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை. இதற்குச் சிறந்த உதாரணமாக உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளில் ஈடுபடாது ஆசிரியர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பைக் குறிப்பிட முடியும்.
அவர்களின் இந்த தொழிற்சங்கப் போராட்டத்தால் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் கல்வியும் காலதாமதமாகியுள்ளது. கொவிட் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட கல்விச் செயற்பாடுகளை குறிப்பாக பாடசாலைக் கல்வியை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவர முடியாமலிருக்கிறது. பொருளாதார நெருக்கடியும் இதற்குக் கரணமாகியிருந்தாலும், தொழிற்சங்கப் போராட்டமும் காலதாமதத்துக்கு வழிகோலியிருந்தது. எனவே, இதுபோன்று மக்களை மீண்டும் மீண்டும் சுமைக்குள் தள்ளும் செயற்பாடுகளை தொழிற்சங்கங்கள் இனிமேலாவது கைவிட வேண்டும்.
அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட நடவடிக்ைககள் பாராட்டத்தக்கவையாகும். அவர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராகப் பதவி வகித்த போது அரச ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டின் பொருளாதார நிலைமை கடந்த காலங்களைப் போன்ற நிலையில் இல்லாத சூழலிலும் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அரச ஊழியர்களின் நலன்களில் எவ்வளவு தூரம் அக்கறையோடு செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.
அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வைப் போன்று தனியார் துறையினரின் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டிய அவசியம் காணப்படுகிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான எவ்வித கடப்பாடுகளையும் அரசு கொண்டிருக்கவில்லை. இது தொடர்பில் சட்ட ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லை. இருந்தபோதும் கடந்த காலங்களிலும் தனியார் துறையின் சம்பள அதிகரிப்புக் குறித்த கோரிக்கைகள் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருந்தது. மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருக்கும்போதும் தனியார் துறையின் சம்பள உயர்வையும் வலியுறுத்தப் போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இது பற்றித் தனியார் துறையினரும் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார நெருக்கடி என்பது ஒட்டுமொத்த சமூகங்களையும் பாதித்திருப்பதால் இவ்விடயத்தை மனிதாபிமான நோக்கத்தில் அணுகுவது சிறந்ததாகும்.
நாட்டை முன்னேற்றிச் செல்வதில் தனியார் துறையினரின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்தியிருந்தார். தனியார் துறை நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கான முன்னோடிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீட்சி பெற்று, வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை நோக்காகக் கொண்ட மறுசீரமைப்பு வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அரச வருமானம் மற்றும் செயல்திறனைப் பலப்படுத்தல், முதலீட்டாளர்களை ஈர்த்தல், சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் ஊக்குவிக்கும் யோசனைகளை தனியார் நிறுவன பிரதானிகள் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தனர். தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட பின்னர் முன்னெடுக்கும் திட்டங்கள், பல்வேறு துறைகளிலுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஆகியன குறித்தும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தனியார் துறையினர் முன்வைத்த யோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், எதிர்வரும் நாட்களில் ஒவ்வொரு துறை தொடர்பிலும் தனித்தனியே கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு தனியார் துறை நிறுவன பிரதானிகள் பாராட்டுத் தெரிவித்தனர். இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய தனியார் துறையின் சம்பள அதிகரிப்புக் குறித்தும் அவர்கள் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகப் பார்க்கப்படுகிறது.