இலங்கையைப் பொறுத்த வரையில் 2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாகும் என்பது ஓரளவு உறுதியாகியிருக்கும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத்தேர்தலா முதலில் வரும் என்பதே இன்னமும் அறியப்படாதுள்ளது.
இருந்தபோதும் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தைச் சந்திப்பதற்கான முன்னாயத்தங்களை ஏற்கனவே ஆரம்பித்து விட்டன. கூட்டணி அமைப்பது, தொகுதி ரீதியாக கட்சிகளைப் பலப்படுத்துவது என முன்னாயத்தப் பணிகளில் கட்சிகள் இறங்கி விட்டன.
தேர்தலை நோக்காகக் கொண்டு அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் கூற்றுக்களும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தமிழ் அரசியல் தரப்பில் சிரேஷ்ட தலைவராகக் கருதப்படும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்தொன்று தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
பல தசாப்த கால அரசியல் அனுபவம் கொண்ட இரா.சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கருத்தே இவ்வாறு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகமொன்றில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கருத்துத் தெரிவித்தபோது, சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தியிருந்தார்.
“சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு வருகை தரமுடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனை கொண்டிருக்கின்றோம். விசேடமாக நான் அந்த விடயத்தில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன்.
அந்த வகையில் நான் ஒருவிடயத்தினை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாகத் தெரிவிக்க விரும்புகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரால் பாராளுமன்றத்துக்குச் சமுகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் நான் சம்பந்தனிடத்திலேயே நேரடியாக பதவி விலகுமாறு கோரினேன். அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார்.
அத்துடன், அவர் அதற்கான காரணத்தினையும் தெளிவுபடுத்தினார். ‘2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் எனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள்’ என இரா. சம்பந்தன் கூறியிருந்தார்”.
இவ்வாறு சுமந்திரன் எம்.பி அந்த ஊடகக் கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார்.
சுமந்திரன் எம்.பியின் இந்தக் கருத்து தமிழ் அரசியல் அரங்கத்தில் பேசுபொருளாகியுள்ளது. இரா.சம்பந்தன் முதுமை நிலையை அடைந்திருப்பதால் செயற்பாட்டு அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியாது என்பது யதார்த்தமான உண்மையாக இருந்தாலும், தமிழ் அரசியலில் அவருடைய வகிபாகம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு சில தசாப்தங்கள் பின்னோக்கிச் சென்றால் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற அரசியல் கட்சியை உருவாக்க எல்.ரி.ரி.ஈயினர் பின்புலத்தில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன் போது அக்கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தனை நியமித்திருந்தனர். அந்தக் காலகட்டத்தில் ஆனந்தசங்கரி உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்கள் இருந்தாலும் சம்பந்தன் மாத்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருந்ததுடன், ஆனந்தசங்கரி ஓரங்கட்டப்பட்டார்.
பல்வேறு தமிழ்க் கட்சிகள் குறிப்பாக முன்னாள் ஆயுதக் குழுக்களாக இருந்து பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட கட்சிகளைக் கொண்டதாகவே கூட்டமைப்பு உதயமானது. எல்.ரி.ரி.ஈயினர் பலமாக இருந்த காலத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவைப் பெருமளவில் வழங்கியிருந்தனர்.
அதன் பின்னர், படிப்படியாக தமிழ்க் கூட்டமைப்பின் மீதான மக்கள் நம்பிக்கை குறையத் தொடங்கியது என்று கூறலாம். குறிப்பாக யுத்தம் முடிவடைந்த பின்னர் மக்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுக்கும் முடிவுகளுடன் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகள் இணங்கிப் போகும் நிலைமை குறையத் தொடங்கியது.
கூட்டமைப்பின் தலைவர்கள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் நிலவி வருவதுடன், கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் நடவடிக்கையிலும் இதுவரை வெற்றிகாண முடியாதுள்ளது. அது மாத்திரமன்றி, கடந்த சில சந்தர்ப்பங்களில் தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியான வழியிலும், ஏனைய பங்காளிக் கட்சிகள் தனியான வழியிலும் பயணிப்பதையும் காணக் கூடியதாகவிருந்தது.
குறிப்பாக இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விடயத்தில் தமிழரசுக் கட்சி தனியாகச் செயற்பட்டமையும் நாம் அனைவரும் அறிந்த விடயம். இருந்தபோதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அதனை ஒற்றுமையாக தக்கவைத்துக் கொள்வதில் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் வகிபாகம் சிறப்பானதாகும்.
அது மாத்திரமன்றி, சர்வதேச மட்டத்தில் இரா.சம்பந்தனுக்குக் காணப்படும் அங்கீகாரம் பெரியதாகும். இலங்கைக்கு வரும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையே சந்திக்கின்றனர். அத்துடன், தமிழ்க் கூட்டமைப்பைப் பிரியாமல் இணைக்கும் பாலமாகவும் சம்பந்தன் காணப்படுகின்றார்.
அவருக்குக் காணப்படும் கௌரவம் காரணமாக தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முரண்பாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு, இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறான பின்னணியில் இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து அவ்விடத்துக்கு வேறொருவர் கொண்டுவரப்படுவாராயின், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால ஒற்றுமை குறித்த சந்தேகம் காணப்படுகிறது.
இது இவ்விதமிருக்க, இரா சம்பந்தன் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால், அவரது இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை’ என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆதரவாகக் கருத்துக் கூறியுள்ளார்.
‘சம்பந்தன் பதவி விலகத் தேவையுமில்லை, அவரைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. சம்பந்தனின் பாராளுமன்றக் காலம் 2025 வரை என்று இருந்தாலும் பாராளுமன்றம் அதற்கு முன்னர் கலைக்கப்படக் கூடிய சந்தர்ப்பங்களே அதிகம்.
வடக்கு – கிழக்குத் தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் பாராளுமன்றத்தில் தமது குரலையும், உடலையும் வெளிக்காட்டுவதுதான் அவர்களின் கடமையென்று நினைப்பது தவறு. தமிழ் மக்களின் வருங்காலம், பாராளுமன்றத்தின் பெரும்பான்மை விருப்புடன் சுமுகமாக நிர்ணயிக்கப்படப் போவதில்லை. ஊரறிய, உலகறிய எமது அவலங்களை வெளிநாடுகளுக்குத் தெரியப்படுத்தினால்தான் ஏதாவது நடக்கும். தமிழ் மக்களின் தற்போதைய நிலையை சர்வதேசம் அறிந்து கொள்வதற்கு வெளிநாட்டுத் தூதரகங்களை நாடிய முக்கிய நபர் எமது இரா.சம்பந்தனே’ என விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
மறுபக்கத்தில், இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோணத்தில் பார்க்கும்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் இளமையான துடிப்புள்ள சிந்தனை உள்ளவர்களாக மாற வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
அதேநேரம், எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து நடத்தப்படும் காய்நகர்த்தலாகவும் இதனை அரசியல் அவதானிகள் நோக்குகின்றனர்.
பி.ஹர்ஷன்