பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட தொழிலாளர் சமூகம் இலங்கையின் மலையகத்தில் குடியேற்றப்பட்டு இரு நூற்றாண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்திய வம்சாவளி சமூகத்தின் இரு நூற்றாண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல்வேறு அமைப்புகளும் தற்போது நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன.
மலையக இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாபெரும் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உட்பட பல்வேறு அமைப்புகள் இது தொடர்பான நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கிலும் இவ்வாறான வைபவங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இ.தொ.கா ஓரிரு தினங்களுக்கு முன்னர் பிரமாண்டமான வைபவமொன்றை நடத்தியிருந்தது.
இலங்கையில் காலடி பதித்த இந்திய மக்கள் சமூகம் இருநூற்றாண்டு காலத்தைக் கடந்திருக்கும் இந்நிலையில், வாழ்க்கைத்தரத்தில் மற்றைய மக்கள் சமூகங்களுக்கு நிகராக முன்னேற்றமடைந்திருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறாக இல்லையென்பது வெளிப்படையான உண்மை!
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ‘லயன்’ காம்பிராக்களுக்குள்ளேயே வாழ்கின்ற குடும்பங்கள் மலையகத்தில் இன்றும் உள்ளதுதான் அதற்கான சான்று ஆகும். மலையக மக்களுக்கான வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்வாய்ப்பு, அடிப்படை வசதிகள் ஆங்காங்கே ஏற்படுத்தப்படுகின்ற போதிலும், அங்கு வாழ்கின்ற மக்களில் பெரும்பாலானோரின் வாழ்க்கை அவலங்கள் இன்றும் தொடரவே செய்கின்றன.
இலங்கையில் வாழ்கின்ற ஏனைய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதைப் போன்று மலையக இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கைத்தரம் வளர்ச்சியடையாததற்கு காரணங்கள் எவையென்பதை, வரலாற்றை நன்றாக ஆராய்ந்தால் எவரும் புரிந்து கொள்ளலாம். ஆனால் வரலாற்றுத் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.
பொதுவாக பண்டைக்காலத்தில் இருந்து வரலாற்றை ஆராய்ந்து பார்த்தோமானால், தமிழினத்திற்குள் ஒற்றுமையென்பதே இருந்ததில்லையென்ற உண்மையைக் கண்டறிவது இலகுவானது. பண்டைய தென்னிந்திய தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்திலிருந்து இன்றைய ஜனநாயக ஆட்சிக்காலத்திலும் கூட இனஒற்றுமையென்பதை தமிழினத்துக்குள் காண முடியாதிருக்கின்றது.
தமிழினத்துக்குள் ஒரு சமூகம் நன்கு வளர்ச்சியடைந்திருப்பதற்கும், மற்றொரு சமூகம் இன்னும் தாழ்ந்த நிலையில் வாழ்வதற்கும் இனஒற்றுமையின்மையே அடிப்படைக் காரணம். இனஒற்றுமையைப் பேணாத எந்தவொரு சமூகமும் கல்வியிலோ அன்றி பொருளாதாரத்திலோ வளர்ச்சியடைவதற்கு வாய்ப்பே கிடையாது.
தமிழ்ச் சமூகமானது தனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொண்ட இனம், மதம், குலம், பிரதேசம் என்ற போலியான வரம்புகளை விட்டு வெளியே வருவது முதலில் முக்கியம். தமிழ்ச் சமூகமானது வேற்றுமைகளுக்குள் துண்டாடப்படலாகாது. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்குள் மலையக மக்களும் உள்வாங்கப்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டிய பொறுப்பு மலையகம், வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கும் வாழ்கின்ற அனைத்து தமிழ் முக்கியஸ்தர்களுக்கும் உள்ளது.