கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பல்வேறு இன்னல்களால் அவதிப்படும் மக்களை கடன் பொறியில் சிக்க வைக்கும் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக பரந்த அதிகாரங்களைக் கொண்ட சுயாதீன அதிகாரசபையை அமைப்பதற்கான சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து செயற்படுத்தி, எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் அரை ஆண்டுக்குள் அதிகாரசபையை நிறுவ நிதி அமைச்சு செயற்பட்டு வருகிறது. இந்த அதிகாரசபை நிறுவப்பட்ட பின்னர், ஒரு நபர் உரிமம் இல்லாமல் பணம் கொடுக்கும் வணிகம் மற்றும் நுண்கடன் (Micro Finance) வணிகத்தை நடத்த முடியாதென்பதுடன், அவ்வாறு பதிவு செய்யாமல் பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டால், அவை சட்டவிரோதமான நிறுவனங்களாக கருதப்படும்.
இதுபோன்ற சட்டவிரோத பரிவர்த்தனைகளை நடத்தியதாக நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை மற்றும் ஐம்பது இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும். இலங்கையில் மத்திய வங்கியில் தற்போது ஐந்து நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், 11,000 நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் சட்டவிரோதமாக நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. அந்த நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 30 இலட்சமென்று நுண்நிதி கடன் பாதிக்கப்பட்டவர்களின் தேசிய இயக்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
அவர்களில் சுமார் 295 பேர் இதுவரை தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் அநாதரவாக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருப்பதாகவும், அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சில நுண்நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் ஆண்டு வட்டி சுமார் 70 சதவீதம்வரை உள்ளது. புதிதாக நிறுவப்பட்ட நுண்நிதி கடன் ஒழுங்குமுறை அதிகாரசபைக்கு திறைசேரி, மத்திய வங்கி மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பதவியில் நியமிக்கப்படுவர். மேலும், நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் தலா நான்கு பிரதிநிதிகளை நியமிக்க முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.