பரந்து விரிந்த மணல் பரப்பு
கடலலைகளின் கோரத் தவிப்பு
மீனினங்களின் சங்கமிப்பு
கடற்கரைச் சாலையோரத்து
சோலைப் புஷ்பங்கள் போல…
ஒட்டி உறவாடும்
சொந்தங்களும்
உடன்பிறவா சகோதரங்களும்…
நினைத்துப் பார்க்கின்றேன்
நேற்றுப் போல்…
நினைவலைகள் நெஞ்சோடு
நிழலாடுகின்றது…
மறக்க முடியுமா
ஆண்டுகள் உருண்டோடி
பதினாறு வருடங்கள்
எட்டிப் பிடித்து விட்டன
அலையோரச் சொந்தங்களோடு
மணலில் பாய் விரித்து
சிரித்து மகிழ்ந்து
மாமி என்றும்
மச்சி என்றும்
காக்கா என்றும்
தம்பி என்றும் உறவுகள் பேச
கைவிரல்கள் மணல் தனில்
கோலங்கள் போடும்
வான் வெளியில் மேகங்கள்
அடுக்கடுக்காய்
அகன்று செல்ல
பழங்கதைகள்
பரிமாறுவோம்
விண் மீன்கள் எமைப் பார்த்து
கண் சிமிட்ட
வான் மதியும் முழு மதியாய்
எமை நோக்க
கவலைகளும் சஞ்சலங்களும்
பறந்தோடும்
மறக்க முடியவில்லை…
சுனாமி எனும்
கொடிய அரக்கன்
சுவை பார்த்து விட்டது – எம்
சொந்தங்களை உறவுகளை…
அம்மா என்று கதற
அப்பா என்று கதற
மச்சான் என்றும் மாமி என்றும்
கண்ணீர் மழையும்
கடலோடு சங்கமமாகியது
நினைத்துப் பார்க்கின்றேன்
பதினாலாம்
பௌர்ணமி நிலவும் உண்டு
பரந்த மணல்
பரப்பும் உண்டு
விண்மீன்களும் உண்டு
மேகக் கூட்டங்களின்
கோலங்களும் உண்டு
ஆனால் –
அந்த உறவுகள் மட்டும்
இங்கில்லை…
என் நினைவுகள் மட்டும்
மறக்க முடியாத உறவுகள்
613
previous post