உலகளாவிய அரசியல் பரப்பில் மீளவும் ஒரு முள்ளிவாய்க்கால் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலும் மரண ஓலங்களும் ஈழத்தமிழருக்கு முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்துகிறது. காசா ஏறக்குறைய 141 சதுரமைல் பரப்பினைக் கொண்டதாக அமைந்திருப்பதுடன் இஸ்ரேல் (51 கி.மீ) மற்றும் எகிப்தை (11 கி.மீ) எல்லையாக கொண்ட சிறிய நிலப்பரப்பாகும். இதில் ஏறக்குறைய 2.2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வாழ்வதாக தெரியவருகிறது. கடந்த 18 தினங்களாக இஸ்ரேல் மேற்கொண்ட விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் விளைந்த மரணங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் உண்டு. ஆனால் உலகளாவிய ரீதியில் போர் நிறுத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இல்லை. வல்லரசு நாடுகள் ஹமாஸை அழிப்பதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயற்படுவதோடு இஸ்ரேல் மீதான தாக்குதலை தடுப்பதில் கவனம் செலுத்திவருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பொதுச் செயலாளரும் எடுக்கும் அனைத்து நகர்வுகளுக்கும் இஸ்ரேல் மட்டுமன்றி மேற்கு நாடுகள் அனைத்தும் தடுப்பு நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. இக்கட்டுரையும் ஹமாஸ்-இஸ்ரேலியப் போரின் பிந்திய நிலையைத் தேடுவதாக அமையவுள்ளது.
இஸ்ரேலின் கடந்தகாலப் போர்களைப் போன்றே தற்போதைய போரும் நிகழ்த்தப்படுகிறது. அமெரிக்க வல்லரசின் ஒத்துழைப்புடன் மட்டுமல்லாது அனைத்து மேற்குலக நாடுகளும் இப்போரில் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்திவருகின்றன. அமெரிக்க ஜனாதிபதியின் இஸ்ரேலிய விஜயத்தை அடுத்து பிரித்தானிப் பிரதமர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதியின் இஸ்ரேலிய பயணம் அமைந்திருந்தது. இதில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தமை அந்த நாட்டின் அடிப்படை நியதிகளையும் தகர்ப்பதாக அமைந்திருந்தது. 1789 இல் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற சிந்தனைகளின அடிப்படையில் அமைந்த பிரான்ஸ் தலைமை, இஸ்ரேல் நாட்டுக்கு சென்றதோடு பயங்கரவாதம் இரு நாட்டுக்கும் பொதுவான எதிரி எனவும் இஸ்ரேல் தனிமையான நாடு கிடையாது எனவும் இஸ்ரேலுடன் பிரான்ஸ் செயல்படும் எனவும் உலகுக்கு தெரிவித்ததோடு பிரான்ஸின் நாகரிகத்தின் அடிப்படைகளை ஆராஜகத்தின் காலடியில் வைத்ததாகவே அவரது உரையாடலும் செயல்பாடும் அமைந்திருந்தது. இது பிரான்ஸ் நாட்டின் வடிவம் மட்டுமல்ல, உலக நாடுகளின் வடிவமும் கூட. தலைவர்களது ஆளுமைகளும் போலியானவையாகவே உள்ளன. சர்வதேச சட்டங்கள் ஒருபக்கமும், நாடுகள் மீதான மனித உரிமைப் பிரகடனங்கள் இன்னெருபுறமுமாக மேற்குலகம் கீழைத்தேசங்களையும் அதன் தலைவர்களையும் எப்படிக் கையாளுகிறது என்பதை புரிந்து கொள்ளுதல் அவசியம். மேற்குலகத்திற்கு சதாம் ஹுசேன், கடாபி வரிசையில் ஹமாஸ் அமைப்பும் அதன் போராளிகளும் தற்போது பலியிடலுக்காக கிடைத்துள்ளன. இந்த பலியிடலானது அடுத்துவரும் பல தசாப்தங்களுக்கு மீண்டெழ முடியாத இஸ்லாமிய உலகத்தை உருவாக்குவதே மேற்குலகத்தின் திட்டமிடலாகும். அதற்காகவே மக்ரோன் பிரான்ஸ் நியதிகளை புதைகுழியில் போட்டுள்ளார்.
ஐ.நா.சபையில் நிகழ்ந்த விவாதத்திலும் மேற்கு நாடுகள் தமது இயல்பான தோற்றத்தை வெளிப்படுத்தியிருந்தன. ரஷ்யா, சீனா வீற்றோ அதிகாரம் கொண்ட இரு நாடுகளும் இஸ்ரேல் -– -ஹமாஸ் போரை நிறுத்தக் கொண்டுவந்த தீர்மானத்தை அமெரிக்கா வீற்றோவால் தோற்கடித்தது போல் ஹமாஸ் மீதான தீர்மானத்தை சீனாவும் ரஷ்யாவும் தமது வீற்றோவால் தோற்கடித்துள்ளன. ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்றஸ் உரையாற்றும் போது காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் காரணமில்லாமல் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இக்கருத்தினை கண்டித்த இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இலய் கோஹன் மற்றும் ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதுவர் கிலாட் இர்டான் ஐ.நா.பொதுச் செயலாளர் பதவிவிலக வேண்டும் எனவும் அவரது கருத்துக்கு மன்னிப்பு கோரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். அது மட்டுமன்றி இஸ்ரேலிய தூதுவர் கிலாட் இர்டான் பொதுச் செயலாளரை நோக்கி கடுமையான சொற்பிரயோகத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன் எந்த உலகத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள் எனவும் ஹமாஸை இஸ்ரேல் அழித்தே தீரும் எனவும் ஹமாஸ் ஒரு நவீன நாஸிக்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
நவதாராளவாதிகளின் உள்ளார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் அராஜகவாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே தெரிகிறது. அல்லது நவதாராளவாதம் என்ற சிந்தனையின் வடிவமும் உள்ளடக்கமும் அராஜகத்திற்கானதாகவே தோன்றுகிறது. இஸ்ரேலின் நவ அராஜகவாதத்தின் தோற்றத்தையே தற்போது காணமுடிகிறது. ஹமாஸ் நவ நாஜிக்கள் என்றால், இஸ்ரேலியர்கள் நவ சியோனிஸ்ட்டுகளாகவே உள்ளனர். இதில் இஸ்ரேலியர்கள் மட்டுமல்ல, முழு மேற்குலகத்தவரும் அத்தகைய போக்கினையே பின்பற்றுகின்றனர். ஐ.நா.பொதுச் செயலாளர் குறிப்பிடுவது போல் காஸாவில் தெளிவாக சர்வதேச சட்டம் மீறப்படுகிறது. அது இருதரப்புக்குமுரியதாகவே உள்ளது. ஆனால் கடந்த 56 வருடங்களாக மூச்சுத்திணறும் ஆக்கிரமிப்புக்கு பலஸ்தீன மக்கள் ஆளாகியுள்ளனர் என்ற நியாயப்படுத்தலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் ஹமாஸ் மீதான போரை நியாயப்படுத்தும் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை முழுமையாக அழிக்கும் செயல்பாட்டை மேற்குலகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டு வருகிறது.
இதனை வெளிப்படையாக எதிர்க்கும் ரஷ்யா மற்றும் சீனாவின் நகர்வுகள் ஹமாஸின் போரை வெற்றி கொள்ளக்கூடிய சாத்தியப்பாடுகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தைத் தருகிறது. காரணம் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி, ஹமாஸ்- – இஸ்ரேல் போர் பற்றி இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடிய போது, இஸ்ரேல் தன்னைப் தற்காத்துக் கொள்ள உரிமையிருப்பதாகவும், ஆனால் போரின் போது மனிதாபிமானச் சட்டங்களை பாதுகாப்பதோடு பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாவதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேநேரம் தனது ஆறு போர்க்கப்பல்களை ஏடன் துறைமுகம் நோக்கி 26.10.2023 இல் நகர்த்தியுள்ளதாகவும் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன. இவை அனைத்தும் இப்போரில் சீனா, ஹமாஸ், -பாலஸ்தீன அரசு பக்கம் செயல்படுவதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனாலும் சீனா ஹமாஸின் முழுநீளப் போருக்கான பங்கெடுப்பை சாத்தியப்படுத்துமா என்ற சந்தேகம் வலுவானதாகும். ஊலகளாவிய அரசியலில் அதிகம் போரைத் தவிர்க்க முனையும் சீனா, ஹமாஸுக்கு வேண்டிய ஆயுதங்களை வழங்குமே அன்றி போரில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது போல் செயல்படும் வாய்ப்பு அரிதானதாகவே உள்ளது. ஆனால் ரஷ்யாவுக்குரிய சூழல் சீனாவை விட வேறானதாகவே தெரிகிறது.
ஏறக்குறைய உக்ரைன் போரை ஓரண்டுக்கு மேலாக அமெரிக்காவும் அதன் நேட்டோ அணியினரும் ரஷ்யாவுக்கு எதிராக நடாத்தியதன் பதிலை கொடுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதனால் ஹமாஸ்- –இஸ்ரேலியப் போரை நீடிக்க எத்தகைய உத்திகளையும் ரஷ்ய தரப்பு மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இத்தகைய போர்க் களத்தை திறப்பதில் ரஷ்யா பின்புலத்தில் இருந்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கான வாய்ப்பு என்பதைவிட நெதன்யாகு தனது ஊழலையும் ஆட்சியின் நீடிப்பையும் நகர்வையும் தக்கவைப்பதற்கும் அமெரிக்க மற்றும் மேற்குலகத்தின் நலன்களைப் பாதுகாக்கவும் முயன்றதன் விளைவே இத்தகைய போர்க்களம் எனவும் விவாதங்கள் உண்டு. ஆனால் இக்களத்தை ரஷ்யா பயன்படுத்துவதில் முதல்தரமான சக்தியாக விளங்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்றே தெரிகிறது. அது மட்டுமல்லாது சிரியாவில் ரஷ்யாவின் கடற்படைத்தளமான Tartus மற்றும் Khmeinmim விமான தளத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவையுடன் செயல்படுகிறது. அதனால் அதிகளவான ஆயுத தளபாடங்களையும் போர்க் கப்பல்களையும் அப்பகுதி நோக்கி நகர்த்த முனைகிறது.
இதில் அனைத்து வல்லரசுகளும் போரை மேற்காசியாவுக்குள் மட்டுப்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றன. இது ரஷ்யாவுக்கு மேற்குலகத்தை கையாள கிடைத்த வாய்ப்பாகவே தெரிகிறது. அதனால் போரில் மேற்குலகம் எதிர் கீழைத்தேசம் என்ற மோதல் நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இப்போரை அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் தொடர்ந்து உலகளாவிய ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்வதில் கவனம் கொண்டுள்ளது. அதற்கான திறவுகோலாகவே இப்போரை அமெரிக்காவும் மேற்குலகமும் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இதில் அதிக பாதிப்பு காஸா மக்களுக்கு மட்டுமன்றி இஸ்ரேலியர்களுக்கும் உரியதாகும்.
தற்போது ஹிஸ்புல்லாத் தரப்பும் ஏனைய ஜிகாத் அணிகளும் ஹமாஸ் அமைப்புடன் இணைந்து தாக்குதலை மேற்கொள்வதாக லெபனானில் நிகழ்ந்த சந்திப்பில் தீர்மானித்துள்ளன. இப்போரில் அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் ஈடுபடுத்திக் கொள்வதில் மேற்குலகமும் மற்றும் இஸ்ரேலும் ஆர்வமாக உள்ளது. குறிப்பாக சிரியா, ஜோர்தான், லெபனான் மற்றும் ஈரான் என்பவற்றை போருக்குள் இழுத்துவிடுவதில் இஸ்ரேல் முனைப்புக் காட்டி வருகிறது.
இது இஸ்லாமிய நாடுகளது பொருளாதார இராணுவ வலிமையை முழுமையாக அழிப்பதற்கான நகர்வாகவே தெரிகிறது. இது ஹமாஸ் அமைப்பை அழிப்பதற்கான போர் என இஸ்ரேலியத் தரப்பு குறிப்பிட்டாலும் நடைமுறையில் இஸ்லாமிய நாடுகளின் எழுச்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கானதாகவே உள்ளது.
இதேநேரம் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் பிற்போடுவதில் அமெரிக்காவின் பங்கு இருக்கும் அளவுக்கு காஸாவின் தரையமைப்பும் ஹமாஸின் உத்திகளும் இன்னோர் காரணமாகும். மறுபக்கத்தில் இஸ்ரேலியப் போரை அமெரிக்கா நிகழ்த்துவதாகவும் பிரதமர் நெதன்யாகுவை பதவியிலிருந்து விலகுமாறும் இஸ்ரேலின் இராணுவத் தோல்விக்கும் புலனாய்வுத் தோல்விக்கும் அடிப்படையில் நெதன்யாகுவே காரணம் எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இப்போர் அமெரிக்கா எதிர் ஹமாஸ் போராக மாறியுள்ளதாகவே இராணுவ புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த காலங்களிலும் பாலஸ்தீனத்திற்கு எதிரான போரை அமெரிக்காவே வெற்றி கொண்டதாக பதிவுகள் உண்டு. எனவே இஸ்ரேல்-_ ஹமாஸ் போர் பிராந்திய மட்டத்தை கடந்த போராக மாறுவதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருந்தாலும் அதனை உலக வல்லரசுகள் தடுப்பதற்கு முனைகின்றனர். தரைவழிப் போர் அதிகளவான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதே தற்போதுள்ள போரியல் முடிவாக உள்ளது.