நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதிகரித்துள்ள பணவீக்கம் காரணமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சியடைந்து, அன்றாட செலவுகள் எதிர்கொள்ள முடியாத நிலைக்குச் சென்றுள்ளன.
இவை போன்ற காரணிகள் பலரை சமூகச் சீரழிவு நடவடிக்கைகளுக்குள் தள்ளிவிட்டுள்ளன. விசேடமாக போதைப்பொருள் பயன்பாடு பற்றிய சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. போதைப்பொருள் பாவனை ஒருபக்கம் இருக்க, நாட்டில் காணப்படும் நெருக்கடி சூழ்நிலையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகள் இலங்கையை தமக்கான வியாபார மார்க்கமாக ஈடுபடுத்தி வருவது தெரியவந்துள்ளது.
அண்மைக் காலத்தில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன.
இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்ைகயின் ஊடாக பெருந்தொகை போதைப்பொருள் அண்மையில் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, இலங்கையின் கடற்கரை பாதுகாப்புக் கப்பல்களைப் பயன்படுத்தி இந்த முறியடிப்பு மேற்கொள்ளப்பட்டது.
காலியின் மேற்குப் பகுதியில் 91 கடல் மைல் (168 கி.மீ) தொலைவில் ஆழ்கடல் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது 200 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. கடந்த நாட்களில் இவ்வாறான பாரிய தொகையான போதைப்பொருள் இரண்டாவது தடவையாக மீட்கப்பட்டுள்ளது.
முதல் தடவையும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் தகவலுக்கமையவே சுற்றிவளைப்புச் செய்யப்பட்டது. அரச புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய கடற்படையினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கொழும்பு துறைமுகத்துக்கு எடுத்துவரப்பட்டது.
இலங்கையை போதைப்பொருள் கடத்தலுக்கான கேந்திர நிலையமாகப் பயன்படுத்துவதற்கு கடத்தல் கும்பல்கள் பல்வேறு தடவை முயற்சித்துள்ளன. கடந்த காலங்களிலும் இவ்வாறன முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. நாட்டுக்குள் அல்லது நாட்டின் வழியாகக் கடத்தப்படும் போதைப்பொருட்களில் 65 வீதமானவையே கைப்பற்றப்படுகின்றன. எஞ்சியவற்றைக் கைப்பற்றுவதற்கோ அல்லது தடுப்பதற்கோ வலுவான கட்டமைப்பொன்று இல்லையென்றே கூற வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணியாள் தொகுதியின் பிரதானியுமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
கொழும்புத் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களை கடற்படை உயர் அதிகாரிகளுடன் பார்வையிடச் சென்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்வாறான நிறுவனமொன்றை உருவாக்குவதன் ஊடாக முப்படையினர் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் இணைத்து சுற்றிவளைப்புகளுக்கு அவசியமான திட்டங்களை வகுப்பதற்கான இயலுமை கிட்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கடத்திவரப்படுவதைத் தடுக்கும் நோக்கில் சட்ட ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. இருந்தபோதும் அவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.
விசேடமாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸாரின் பங்கு அளப்பரியது என்பதுடன், அவர்களின் ஒத்துழைப்பு அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதும் பாரிய அளவில் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்களை இலக்கு வைக்காது, மிகவும் குறைந்தளவு போதைப் பொருட்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சாதாரண மக்களைக் கைது செய்வதிலேயே பொலிஸார் முனைப்புக் காட்டுவதாகப் பொதுவான குற்றச்சாட்டொன்று காணப்படுகிறது.
போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களைப் பிணையில் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் இல்லையென்பதால், போதைப்பொருள் பாவனையுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களைப் பிணையில் விடுவிக்க முடியாது. எனவே, அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்.
இதனால் சிறைச்சாலைகளில் குறிப்பாக தடுப்புக்காவலில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, சிறைச்சாலைகளில் நெருக்கடியும் அதிகமாகக் காணப்படுகிறது. போதைப்பொருள் பாவனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
அது மாத்திரமன்றி, போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்திவரும் பாரிய வியாபாரிகளைச் சுற்றிவளைத்து அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் என்ற விடயம் பாராளுமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாரிய போதைப்பொருள் வியாபாரிகள் பல்வேறு தரப்பினருக்கு இலஞ்சம் கொடுப்பதாகவும் பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
எனவே, சாகல ரத்னாயக்க குறிப்பிட்டது போன்று சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைத்தையம் உள்ளடக்கிய தனியான அலுவலகமொன்றை அமைத்து அதன் ஊடாகப் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிக்க வேண்டும். போதைப்பொருள் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டே பாதாள உலகக் குழுக்களும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.
அண்மைக் காலமாக அதிகரித்துள்ள படுகொலைகளுக்கும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் தொடர்புகள் இருப்பதாகத் துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே போதைப்பொருள் பாவனையும், போதைப்பொருள் கடத்தல் வர்த்தகமும் முற்றாக ஒழிக்கப்படுவதற்கு அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும். இல்லாவிட்டால் நாட்டின் எதிர்கால சந்ததியினர் மோசமான பேரழிவொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.
நாட்டுக்குள் கடத்திவரப்படும் போதைப்பொருட்களில் பெரும்பாலானவை இளம் சமுதாயத்தினரை இலக்கு வைத்தே வியாபாரம் செய்யப்படுகின்றது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் செயற்படும் சட்டவிரோதக் கும்பல்களும் நம்மத்தியில் வாழ்ந்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பெற்றோர் உள்ளிட்ட சகல தரப்பினரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அதேபோன்று, போதைப்பொருள் பயன்பட்டின் காரணமாக கொள்ளை, கொலை, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட சமூகவிரோத செயல்களும் அதிகரித்துள்ளன. இந்த நிலைமைய மாற்றி நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல அனைத்துத் தரப்பினரும் கூட்டுப்பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.
பி.ஹர்ஷன்