நல்லதொரு இளைஞர் தலைமைத்துவத்தை தோற்றுவிக்கும் நோக்கில் பணியாற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் பொன்விழா மாநாடு 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில்
இலங்கையின் தேசிய அரசியலில் அதி முக்கிய பங்களிப்பு செய்த இஸ்லாமிய இயக்கம் அகில இலங்கை முஸ்லிம் லீக். இலங்கையின் சுதந்திரத்துக்கு இவ் இயக்கம் வழங்கிய பாரிய பங்களிப்பு, இலங்கை வரலாற்றில் முக்கிய பதிவாக இடம் பெற்றுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் லீக்கினது இளைஞர் அமைப்பாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி கலாநிதி ரி. பி. ஜாயா தலைமையில் உருவானது. அப்போது அதன் சேவைகள் கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. சில ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் சபாநாயகர் எம். ஏ. பாக்கிர் மாக்காரின் முயற்சியில் இந்த வாலிப முன்னணியின் புதிய யாப்பு உருவாக்கத்துடன், புதிய அமைப்பில், புதிய உத்வேகத்துடன், முழு நாட்டுக்கும் சேவையாற்றும் வகையில் “அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம்” என்ற பெயரில் புதிய எழுச்சியுடன் மீள் உருவாக்கம் பெற்றது. இதன் முதல் ஸ்தாபக தலைவராக மர்ஹூம் பாக்கிர் மாக்காரும், முதல் செயலாளராக எம். மஸாஹிம் மொஹிடீனும் தெரிவாகி செயல்பட்டனர். அப்போதிருந்து புதிய வேகத்துடன், ‘ஒற்றுமை, சேவை, அபிவிருத்தி’ என்பதை இலக்காக கொண்டு நாடளாவிய ரீதியில் முன்னணிகள் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வந்தன. ஒரு கால கட்டத்தில் இலங்கையில் உள்ள, கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி, சகல முஸ்லிம் ஊர்களிலும் ‘முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள்’ அமைக்கப்பட்டிருந்தன. அப்போது சுமார் 575 வாலிப முன்னணிகள் வெற்றிகரமாக இயங்கி வந்தன.
அன்று முதல் இன்று வரை சம்மேளனமும், வாலிப முன்னணிகளும், சமய, சமுக, பொருளாதார, அரசியல் துறைகளில் பெருமளவான சேவைகளை கிராம மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை மேற்கொண்டு வருகின்றன. வீடைமைப்பு, வெள்ளநிவாரணம், இடர்கால உதவி வழங்கல், பாடசாலை பயிற்சி புத்தகங்கள் பொதிகள் வழங்கல், சுய தொழில் முயற்சிக்கான உதவிகள், தலைமைத்துவ பயிற்சி முகாம்கள் இளைஞர்களின் ஆற்றல் விருத்திக்கான போட்டி நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், ஆற்றல், திறன் அபிவிருத்தி மற்றும் அரசியல் விழிப்புணர்வு திட்டங்கள் போன்ற பல்வேறு துறைசார் பணிகளை சம்மேளனம், அதன் முன்னனிகளுடன் நாடு தழுவிய ரீதியில் வெற்றிகரமாக நிறைவேற்றி வந்திருக்கின்றது. இலங்கையை சூறாவளி பயங்கரமாகத் தாக்கியதில் பெரும் பாதிப்புக்குள்ளாகிய கிழக்கு மாகாணத்தில் சதாம் ஹுசைன் கிராமம் உருவாக அடித்தளம் அமைத்ததும் இச்சம்மேளனம்தான்.
மத்திய மாகாண மாத்தளை மாவட்டம் உட்பட பல பகுதிகளில் கைத்தொழில் பயிற்சி நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டன. எல்லை நிர்ணயம் உட்பட தேசிய விடயங்களில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதில் எப்போதும் முன்னின்று செயல்பட்டது. இப்போதும் செயலாற்றி வருகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சகல விடயங்களிலும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் தவறாது சிறப்பாக செயலாற்றி வருகின்றமை விசேடமாக குறிப்பிடத்தக்கது.
மர்ஹூம்களான எம். ஏ. பாக்கிர் மாக்கார், ஏ. எம். எம். நஸீர், எச். எம். சரீப், பரீத் மீராலெவ்வை, எம். எம். மசாஹீம் முகைதீன், எம். ஈ. எச். மஹ்ரூப், றிஸ்வி சின்னலெவ்வை, ஜாபிர் ஏ. காதர், எம். பி. எஸ். அஸ்ஹர், எஸ். கே. ஆப்தீன், எம். எம். ராசிக், எம். எம். ஜிப்ரி, எச். எம். பாயிஸ், ஏ. எச். எம். அஸ்வர், ஏ.சீ ஏ. கபூர், அஸ்வர் ஹாஷிம் உட்பட எச். எம். நசீர், புத்தளம் நமாஸ் வரை காலஞ் சென்றவர்கள் உட்பட இன்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரை பெயர்களை பட்டியலிட முடியாத அளவுக்கு அனேகமானோர் வாலிப முன்னணிகளினதும், சம்மேளனத்தினதும் சேவைகளுக்கும், முன்னேற்றத்துக்கும் பாரிய பங்களிப்புகளை வழங்கியுள்ளமை எவராலும் மறக்க முடியாததாகும். இலங்கையின் பொதுவான ஏனைய இஸ்லாமிய இயக்கங்கள் போலன்றி இச்சம்மேளனம் அரசியல் பங்களிப்புக்கும், அரசியல் ஈடுபாட்டுக்கும், அரசியல் தலைமைத்துவ பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளித்து வருகின்றது. இதன் காரணமாக கிராம மட்டத்தில் சமூக சேவைப் பணிகளில் ஆர்வத்தோடு செயலாற்றி வந்த இளைஞர்களும் அரசியலில் ஈடுபடும் விருப்பம் கொண்டவர்களும் வாலிப முன்னணிகளில் இணைந்து ஆர்வத்தோடும் உத்வேகத்தோடும் சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டார்கள். இச்சம்மேளனத்தின் காத்திரமான வேகமான செயற்பாடுகள் காரணமாக, 1980களின் பிற்பகுதியில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தை ஒரு அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்னணியின் உறுப்பினர்களால் பரவலாக முன்வைக்கப்பட்டது. எனினும் சிங்களவர்கள், தமிழர்கள் மத்தியில் இரண்டற கலந்து, நாடெங்கிலும் பரந்து கிராமங்களில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கென தனியானதொரு கட்சி ஆரம்பிக்கப்பட்டால் அது இன நல்லுறவை பாதிக்கும்’ என்று கூறிய பாக்கிர் மாக்கார், அதற்கான அனுமதியை வழங்கவில்லை கிழக்கு மாகாணத்தில் மட்டும் இயங்கும் வகையில் இதனை அரசியல் கட்சியாக அமைப்பதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும், அதற்கும் அவர் அங்கீகாரம் அளிக்கவில்லை. இதன் பின்னரே ‘முஸ்லிம் காங்கிரஸ்’ கட்சி, எம்.எச்.எம். அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் அரசியலில் ஆர்வம் கொண்டு சிறந்த தலைமைத்துவ பயிற்சியை பெற்றிருந்த அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தினது முக்கிய உறுப்பினர்கள் அரசியலில் ஈடுபடும் ஆர்வத்தில் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டனர். பலர் வெற்றியும் பெற்றனர். அரசியலில் ஈடுபடுவோருக்கும், அரசியலில் ஆர்வம் கொண்டோருக்கும் சம்மேளனம் முக்கிய இடமளித்தாலும், எந்த ஒரு கட்சிக்கும் சார்பான ஒரு அமைப்பாக இது இயங்கவில்லை என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
சம்மேளனத்தின் ஆரம்ப கால கட்டத்தில், பல்கலைக்கழகங்களில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தீவிரமாக செயலாற்றிய இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் செயல்பட்ட என். எம். சஹீத், ஜே.வி.பி. உட்பட்ட இடதுசாரி கட்சிகளோடு செயல்பட்ட என். எம். அமீன் போன்ற வெவ்வேறு அணிகளில் இருந்தவர்களை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஒன்று சேர்த்து, ஒரே அமைப்பிலிருந்து சமூகத்துக்காக செயப்படவைத்தமை பாக்கிர் மாக்காரின் தூர நோக்கு கொண்ட எண்ணக்கருவின் வெற்றிக்கு சிறந்த சான்றாகும். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனமானது, ஒற்றுமை, சேவை, அபிவிருத்தி எனும் அதன் மேலான கொள்கைகளால் வழி நடத்தப்பட்டு, குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கும், பொதுவாக பரந்த அளவில் நாட்டுக்கும் தனது சிறந்த சேவைகளை வழங்குவதில் நிலைத்திருக்க வேண்டும் என்றும், வெற்றிப்பாதையில் அதன் நற்பணிகள் தொடர வேண்டும் என்றும் வாழ்த்துகிறோம்.
சிரேஷ்ட சட்டத்தரணி கலாபூஷணம் ரஷீத் எம். இம்தியாஸ் முன்னாள் தேசிய தலைவர், அகில இலங்கை முஸ்லிம் லீக்- வாலிப முன்னணிகளின் சம்மேளனம்