மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தி, நாட்டின் ஜனநாயக மரபை காக்குமாறு அரசாங்கத்திடம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படவில்லையென்பதுடன், ஏற்கெனவே வேட்புமனுக்கள் கோரப்பட்டு, கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பல கோடி ரூபாவை வேட்புமனுத் தாக்கலுக்கு கட்டியுள்ளன. உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படலாமென்பதுடன், அதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்படுமென்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், மாகாணசபைகளுக்கான தேர்தலும் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலும் எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் நடைபெறுமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மாகாணசபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாகாணசபைகளுக்கான எல்லை மீள்நிர்ணயம் ஏற்றுக்கொள்ளப்படாததால், அது ஒத்திவைக்கப்பட்டதாகவும் மீள்நிர்ணயம் செய்த பின் தேர்தல் நடைபெறுமென்று பேசப்பட்டாலும், எல்லைகளை மீளவும் திருத்துவதற்கான எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கமைய, இலங்கைத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஒற்றையாட்சி முறைக்குள் அதிகாரப் பரவலாக்கத்தினூடாக மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாணசபை முறைமை இல்லாவிட்டாலும், அதுவே இந்த அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாக உள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதியோ, ஏனைய அரசியல் கட்சிகளோ தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள விரும்பின், குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தி, அதற்கான அதிகாரங்களை வழங்கி, மாகாண நிர்வாகம் திறம்பட இயங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
யாழ். விசேட நிருபர்