முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை 9.30 க்கு தேசிய மீலாதுன் நபி விழா மன்னார் முசலி தேசிய பாடசாலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான கே. காதர் மஸ்தான், மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் உள்ள முஸ்லிம் வெளிநாட்டுத் தூதரகங்களின் தூதுவர்கள், பிரதேசச் செயலாளர்கள், அரச அதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், எனப் பலர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
****
பொறுமையும் மௌனமும்தான் நபிகளாரின் கூரிய ஆயுதங்கள்
இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்ெகாள்கிறேன்.
அனைத்து மனிதகுலத்திற்கும் அன்பு மற்றும் அமைதியின் செய்தியைப் பரப்பிய இஸ்லாத்தின் தூதரான முஹம்மது நபி அவர்கள், அல்லாஹ்வின் கடைசி இறைதூதராவார்.
அன்றைய சமூகத்தில் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதில் நபிகளார் முகங்கொடுத்த கடினமான அனுபவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல அப்படிப்பட்ட தருணத்திலும் பொறுமையும் மௌனமும் தான் அவரின் கூரிய ஆயுதங்களாக இருந்தன. நம்பிக்ைக மற்றும் மனிதநேயத்திற்காக அவர் செய்த அளவற்ற தியாகத்தின் விளைவாக அவர் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிந்தது.
பரஸ்பர புரிதல் சகோதரத்துவம், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல் நேர்மை என அவர் வாழ்நாள் முழுவதும் காத்து வந்த பண்புகளை, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் நமது வாழ்வில் இலட்சியமாகக் கொள்ளவேண்டும். மேலும், அவரது தத்துவத்தை மேலும் சமூகமயமாக்கவும் நல்லிணக்கத்தை உருவாக்கவும் பணியாற்றுவது அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த மரியாதை என்று நான் நம்புகிறேன்.
நபிகள் நாயகம் காட்டிய விழுமியங்களுக்கு ஏற்ப நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் முறியடித்து 2048 ஆம் ஆண்டளவில் வளர்ந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பாதையை வலுப்படுத்த அனைத்து இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்ெகாள்கிறேன்.
ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
****
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வழிகாட்டல்களை பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்
ஆதி நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை சுமார் 124,000 நபிமார்களை தனது பிரதிநிதிகளாக இவ்வுலகிற்கு இறைவன் அனுப்பியுள்ளான். “ஸலாஹ்” எனும் சொல்லில் இருந்து உருவாகும் “இஸ்லாம்” என்ற மார்க்கத்ததின், வழிகாட்டலை மனித சமுதாயத்திற்கு வழங்கவே நபிமார்களை இறைவன் அனுப்பினான். இஸ்லாம் என்றால் சாந்தி, சமாதானம், ஒற்றுமை என்ற பொருள் தரும். முஸ்லிம்கள் கூறும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பது “உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக” எனப் பொருள்படும்.
உலகின் பல்வேறுபட்ட நாடுகளில் பல்வேறுபட்ட சமூகத்தினருக்கு பல்வேறுபட்ட காலகட்டங்களில் அனுப்பப்பட்ட தூதுவர்களில் இறுதியாக வந்தவர்தான் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஆவார். அனைத்து நபிமார்களும் இறைவனின் கட்டளைகளையும், வழிகாட்டல்களையும் மக்களுக்கு கொண்டு சென்று வேற்றுமையில் ஒற்றுமை கண்டார்கள்.
பிரிவினைகள், பேதமைகள் இன்றி எவ்வாறு சமூகங்கள் ஒற்றுமையாகவும் ஒருமைப்பாட்டுடனும் வாழ வேண்டும் என்பதை எடுத்தியம்புவதே அவர்களின் கடமையாக இருந்தது. அதேபோல் மானுட நேயம், நற்பண்புகள், ஒழுக்க விழுமிய பண்பாட்டியல் நெறிமுறைகள் என்பன அவர்களால் போதிக்கப்பட்டன. அந்த வகையில் பூரணப்படுத்தப்பட்ட புர்கான் எனும் வேதத்தை மானிடருக்கு வழங்கிட வந்த முஹம்மது (ஸல்) அவர்களை பின்பற்றுகின்ற நமக்கும் அதன் பொறுப்புகள் உண்டு.
அதேபோல் பல்லினச் சமூகங்கள் வாழ்கின்ற எமது நாட்டின் ஓர் முக்கிய தளமாக இருக்கின்ற மன்னார் மாவட்டத்தில் இவ்விழாவை நடாத்த வேண்டும் என தொடராக நான் கோரிவந்தேன். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அந்த அவா இந்த 39வது மீலாத் நிகழ்வுடன் நிறைவடைகின்றது. இதற்காக சகல வழிகளிலும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் கரம் தந்து இவ்விழா சிறப்புடன் நிறைவு பெற உதவிய அனைவருக்கும் இறைவனின் அருளும் ஆசியும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.
கே. காதர் மஸ்தான்
மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும்
கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்
****
நீதி மற்றும் ஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப தன்னை அர்ப்பணித்தவர் நபிகளார்
தனது வாழ்க்கையை மனிதநேயம், நீதி மற்றும் ஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப அர்ப்பணித்த நபிகளாரின் பிறந்த நாள் உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
முஹம்மத் நபி அவர்களுக்கு 40 வயதாக இருந்தபோது நபியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் இஸ்லாத்தின் இறுதி நபி என்று அறியப்படுகிறார். இறைகட்டளைகளை பின்பற்றி மக்களை நல்வழிப்படுத்துவது அவரின் போதனையாக இருந்தது.
இலங்கை முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றி நல்லதொரு சமுதாயத்தை கட்டியெழுப்ப இனம், மதம், சாதி அல்லது வேறு எந்த வேறுபாடும் இல்லாமல் முன்னோடியாக செயற்படுவது தேசத்தின் பாக்கியம் எனலாம்.
வருடாந்தம் கொண்டாடப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், அமைதி மற்றும் தியாகத்துடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த புரிந்துணர்வுடன் பணியாற்ற வேண்டும். சகோதரத்துவத்தை அதிகப்படுத்தி நபியவர்களின் போதனைகளால் அறிமுகப்படுத்தப்பட்ட நல்ல சமுதாயத்தை உருவாக்கும் உன்னதப் பணியை நிறைவேற்றுவது தற்போதைய இலங்கை சமூகத்தின் பொறுப்பாகும்.
அதற்கு நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மற்றுமொரு சந்தர்ப்பமாக கொண்டு செயற்படுகின்ற இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எனது இனிய மீலாதுன் நபி நல்வாழ்த்துக்கள்.
விதுர விக்ரமநாயக்க
புத்தசாசன, மத மற்றும் கலாசார
அலுவல்கள் அமைச்சர்