இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட ‘800’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆயினும், இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் முரளியை மையமாகக் கொண்ட சர்ச்சைகள் தொடர்கின்றன.
இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான கபில்தேவ், மொஹமட் அசாருதீன், மஹேந்திரசிங் தோனி, பெண்கள் கிரிக்கெட் அணித் தலைவர் மிட்டாலி ராஜ், ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அந்த திரைப்படங்கள் ஏற்படுத்தாத சர்ச்சைகளை முரளியின் ‘800’ திரைப்படம் ஏற்படுத்தி வருகின்றது.
இதற்கு பிரதான காரணமாக இருப்பது முரளியின் சர்ச்சைக்குரிய கருத்துகளாகும். ஆரம்பத்தில் இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. எனினும், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, அரசாங்கத்தின் சார்பாக முரளிதரன் தெரிவித்த கருத்துகள் காரணமாக இலங்கை தமிழர்கள் அவர் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதை முரளி ஒரு சந்தர்ப்பத்தில் தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவமென்று கூறியிருந்தார். இலங்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் ஊடகங்களிலும் ஏனையோர் மத்தியிலும் தமிழில் கதைப்பதை தவிர்த்தே வந்தார். கூடுதலாக அவர் சிங்கள மக்கள் மத்தியிலேயே வலம் வந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக அவரது வேடத்தில் தென்னிந்திய சினிமா கலைஞர்களில் தமிழர்கள் எவரும் நடிக்கக் கூடாதென எதிர்ப்புகள் கிளம்பியதால், விஜய் சேதுபதி அதிலிருந்து விலகினார்.
பின்னர் மதூர் மிட்டல் அவரது வேடத்தை ஏற்று நடிக்க திரைப்படமானது கடந்த 6ஆம் திகதி வெளியானது. எனினும், அதற்கு முன்பதாக வெளிவந்த முன்னோட்ட காட்சியில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வார்த்தை பிரயோகம் இடம்பெறுவது சுட்டிக்காட்டப்பட்டு, மீண்டும் முரளி மீது கண்டனங்கள் கிளம்பின. பின்னர் அதை மாற்றுவதாக படக்குழு அறிவித்தது.
திரைப்பட முன்னோட்ட நிகழ்வுகள் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெற்ற போது, முரளிதரனுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக அதில் கலந்து கொண்டிருந்தனர். எனினும், நிகழ்வுகளில் முரளிதரனிடம் ஊடகங்கள் பல கேள்விகளை முன்வைத்த போது, அதில் பலவற்றுக்கு பதில் கூற அவர் விரும்பியிருக்கவில்லை. பல கேள்விகளை அவர் தவிர்த்திருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக அவரிடம் தமிழக ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது, அதை அரசியல்வாதிகளிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அரசியல் செய்யவில்லையே நான் ஒரு கிரிக்கெட்டர் என்றார்.
யுத்த காலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக கேட்ட போது, அனைத்துத் தரப்பினரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டனரென்று கூறிய அவர், எனக்கு ஒரு பிரச்சினை வந்த போது, அனைவருமே எனக்காக குரல் கொடுத்தனர். ஆகையால், நான் இலங்கையில் யாரையும் சார்ந்து இருக்கவில்லை. நான் அனைவருக்குமான கிரிக்கெட்டர் என்று சமாளித்தார்.
அடுத்தடுத்து இடம்பெற்ற நிகழ்வுகளில் அரசியல் தொடர்பாக கேள்விகள் கேட்க வேண்டாம் என்றார். நீங்கள் யாருக்கு ஆதரவாக இருக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு அவர், நான் தமிழனும் இல்லை சிங்களவனும் இல்லை நான் ஒரு கிரிக்கெட்டர் நான் ஒரு விளையாட்டு வீரன். என்னை அப்படியே விட்டு விடுங்கள் என்று கூறி முடித்து விட்டார்.