Home » மெய்வல்லுனர் போட்டிகளில் புதிய நம்பிக்கை

மெய்வல்லுனர் போட்டிகளில் புதிய நம்பிக்கை

by Damith Pushpika
October 8, 2023 6:11 am 0 comment

ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் 17 ஆண்டுகளின் பின் மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கங்களை வெல்ல இலங்கை வீர, வீராங்கனைகளால் முடிந்துள்ளது.

சீனாவின் ஹான்சோ நகரில் இன்று (8) நிறைவடையும் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை மெய்வல்லுனர் அணி கடந்த மூன்று விளையாட்டு விழாக்களிலும் (2010, 2014 மற்றும் 2018) எந்த ஒரு பதக்கமும் வெல்லாத நிலையிலேயே கலந்து கொண்டது.

இந்நிலையில் இந்த பதக்கம் இல்லாத வறட்சியை போக்கி முதலாவது பதக்கத்தை ஈட்டி எறிதல் வீராங்கனை நதீஷா தில்ஹானி லேகம்கே வென்றார். இதன்போது 61.57 மீற்றர் தூரம் வீசிய அவர் இலங்கை சாதனையை படைத்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து இலங்கையால் ஒரு மணி நேரத்திற்குள் மூன்று பதக்கங்களை வெல்ல முடிந்தது. கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் 18 வயதேயான தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கத்தை வென்றதோடு தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் 400 மீற்றர் அஞ்சலோட்ட அணிகள் வெண்கலப் பதக்கத்தை வென்றன.

தருஷி 400 மீற்றர் அஞ்சலோட்ட அணியிலும் இடம்பிடித்ததன் மூலம் இரண்டு பதக்கங்களை வென்றார். 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2:02.20 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து முதலிடம் பிடித்த தருஷியின் தங்கப் பதக்கமானது இலங்கை ஆசிய விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுனர் போட்டியில் 21 ஆண்டுகளில் பெற்ற முதல் தங்கப் பதக்கமாக இருந்தது.

முன்னதாக 2002 ஆம் ஆண்டு தென் கொரியாவின் புஷானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் சுசந்திகா ஜயசிங்க மற்றும் தமயந்தி தர்ஷ கடைசியாக தங்கப் பதக்கங்களை வென்றிருந்தனர். தருஷியின் தங்கம் ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இலங்கை பெற்ற 12 ஆவது தங்கப் பதக்கமாகவும் இருந்தது.

பெண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி 3:30.88 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்தது இலங்கை சாதனையாகவும் இருந்தது. இந்த அணியில் தருஷியுடன் நதீஷா ராமனாயக்க, ஜயேஷி உத்தரா மற்றும் சயுரு மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

400 மீற்றர் அஞ்சலோட்டத்தின் ஆண்கள் பிரிவிலும் வெண்கலம் வென்ற இலங்கை அணி 3:02.55 நிமிடங்களில் அந்தப் போட்டியை நிறைவு செய்திருந்தது. இந்த அணிக்கு ராஜித்த ராஜகருணா, பபசர நிக்கு, அருண தர்ஷனவுடன் காலிங்க குமாரவும் இடம்பெற்றிருந்தனர். ஆசிய விளையாட்டு விழாவின் 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை பதக்கம் ஒன்றை வென்றது 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்கத்தை பறிகொடுத்த தவறு

மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு மற்றொரு வெள்ளிப் பதக்கம் கிடைக்க விருந்தபோதும் இழைக்கப்பட்ட தவறினால் அது பறிபோனது. 400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை இரண்டாவது இடத்துடன் போட்டியை நிறைவு செய்திருந்தது. எவ்வாறாயினும் இலங்கை அணி தடியை மாற்றும்போது தவறு இழைத்திருப்பது கண்டறிப்பட்டது.

அருண தர்ஷன மற்றும் நதீஷா ராமநாயக்க இடையே தடி மாற்றப்படும்போது விதி மீறல் நிகழ்ந்தது. அதாவது அருண கோட்டினை மீறி கால்வைத்தது பாதகமாக மாறியது.

பெண்கள் கிரிக்கெட்டில் பதக்கம்

மெய்வல்லுனர் போட்டிகள் தவிர்த்து இலங்கைக்கு மகளிர் கிரிக்கெட் அணி வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்று கொடுத்தது. டி20 வடிவத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி தங்கப் பதக்கத்திற்காக இந்தியாவை எதிர்கொண்டது. என்றாலும் அந்தப் போட்டியில் தோற்றதன் காரணமாக இலங்கைக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.

என்றாலும் இலங்கை அணிக்கு மற்றொரு பதக்க எதிர்பார்ப்பாக இருந்த ஆடவர் கிரிக்கெட் போட்டி பெரும் ஏமாற்றத்துடன் முடிந்தது. இலங்கை நேரடியாக காலிறுதி போட்டியிலேயே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியது. என்றாலும் அந்தப் போட்டியில் சஹன் ஆரச்சிகே தலைமையிலான இலங்கை அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது.

கிரிக்கெட் தவிர இம்முறை விளையாட்டுப் போட்டியில் அணி விளையாட்டுகளாக ரக்பி, கடற்கரை கரப்பந்தாட்டம், ஈ ஸ்போட்ஸ், கொல்ப், படகு ஓட்டம் மற்றும் ஸ்கொஷ் போட்டிகளை பிரிநிதித்துவம் செய்து வீர, வீராங்கனைகள் பங்கேற்றபோதும் அவர்களால் போதுமான திறமையை வெளிப்படுத்த முடியவில்லை.

தனிப்பட்ட போட்டிகளாக பெட்மின்டன், படகோட்டம், பாய்மரப் படகுப் போட்டி, குத்துச்சண்டை, செஸ், கராட்டே, ஸ்குவஷ், டைகொண்டோ, பாராம் தூக்குதல், மல்யுத்தம் மற்றும் வுஷு போட்டிகளிலும் இலங்கை வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். எனினும் ஒருவரால் கூட பதக்கத்தை நெருங்க முடியாமல்போனது.

அர்டிஸ்டிக் ஜிம்னாடிக் போட்டியில் பங்கேற்ற நதில நெத்விரு தனது தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தினார். ஒட்டுமொத்த போட்டியிலும் அவர் 71.065 புள்ளிகளை பெற்றபோதும் 18 போட்டியாளர்களில் 17 ஆவது இடத்தையே பிடித்தார். அதேபோன்று ஆண்களுக்கான ஒற்றையர் கொல்ப் போட்டியில் நடராஜ் தங்கராஜுக்கு நான்காவது சுற்று வரை முன்னேற முடிந்தது. என்றாலும் 288 புள்ளிகளை பெற்ற அவர் போட்டியில் 34 ஆவது இடத்தையே பெற்றார்.

நீச்சலில் 2 தேசிய சாதனைகள்

இலங்கை அணியின் நீச்சல் போட்டிகள் நிறைவின்போது இரு தேசிய சாதனைகளை முறியடிக்க மாத்திரமே வீரர்களால் முடிந்தது.

ஆண்களுக்காக 50 மீற்றர் பாக்ஸ்ட்ரோக் நீச்சல்போட்டியின் ஆரம்ப சுற்றில் பங்கெற்ற அகலங்க பீரிஸ் 26.01 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்து புதிய தேசிய சாதனை ஒன்றை படைத்தார்.

அதேபோன்று ஆண்களுக்கான 50 மீற்றர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் 24.58 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்த மத்தியு அபேசிங்க இலங்கை சாதனையை படைத்தார். இதன்போது அவர் அகலங்க பீரிஸ் கடந்த ஆண்டு படைத்த சாதனையையே முறியடித்தார்.

பதக்கங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்த விளையாட்டுப் போட்டிக்கு முன்னர் இலங்கை வென்றிருந்த மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 46 ஆகும். அதில் 11 தங்கம், 11 வெள்ளி மற்றும் 24 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இந்த நிலையில் இம்முறை போட்டி முடிவில் அந்த எண்ணிக்கையில் மேலும் 5 பதக்கங்கள் சேர்ந்துள்ளன.

இலங்கை இதுவரை வென்றிருக்கும் மெய்வல்லுனர் பதக்கங்களின் எண்ணிக்கை 27 என்பதோடு, அதற்கு மேலும் ஒரு தங்கம், வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் சேர்ந்துள்ளன. இதன்படி ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் மெய்வல்லுனர் போட்டிகளில் 12 தங்கப் பதக்கங்களும் 7 வெள்ளிப் பதக்கங்களும் 31 வெண்கலப் பதக்கங்களும் பெறப்பட்டுள்ளன.

சீனாவிலிருந்து நிரோஷான் பிரியங்கர

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division