2023ம் ஆண்டின் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான நாட்களை மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் எண்ணிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கொமர்ஷல் வங்கி தெரண எப்எம் உடன் கூட்டு சேர்ந்து பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான தொடர் செயலமர்வுகளை நடத்தி உள்ளது. மாதிரி வினாப் பத்திரங்களுடன் பிரபலமான டியூஷன் ஆசிரியர்களைக் கொண்டு இவை நடத்தப்பட்டுள்ளன.
இந்தத் தொடரின் இறுதி செயலமர்வு கலவானையில் உள்ள ஸ்ரீ திலக்கரத்னாராமய புராண விகாரையில் இடம்பெற்றது. புலமைப் பரிசில் பரீட்சை டியூஷன் ஆசிரியர் வின்சார சமரசிங்கவால் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த மாணவர்களின் பெற்றோருக்காக புறம்பானதோர் நிகழ்வும் நடத்தப்பட்டது.
தமது பிள்ளைகளை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைய வைப்பதற்கான ஆதரவையும் வழிகாட்டலையும் எவ்வாறு வழங்குவது என்பது பற்றி பெற்றோருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
கலவானையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு முன்னதாக மகரகம ஜனாதிபதி கல்லூரி, கண்டி தர்மராஜ கல்லூரி, மெல்லவகெதர அநாகாரிக தர்மபால வித்தியாலயம், கேகாலை ஜோஸப் வாஸ் பெண்கள் கல்லூரி, திக்வெல்ல பிரதேச செயலகம், தவலம வித்தியாராஜ கல்லூரி, ஹங்குரன்கெத்த சிசி கல்லூரி, வெலிமட மகா வித்தியாலயம் என்பனவற்றிலும் இதே விதமான செயலமர்வுகள் இடம்பெற்றன.