ஊக்கத்துடன் முன்னேறுபவர்களின் வாழ்க்கையின் ஆரம்பம் கசப்பானது. ஜப்பானிய மொழியில் சக்தி என்னும் அர்த்தத்தை தருகின்ற லுமாலா என்னும் பெயரில் இந்நாட்டில் பிரபலமான சைக்கிள். அனைத்து சவால்களையும் வெற்றிக் கொண்டு முன்னணிக்கு வந்துள்ளதென எவ்வித விவாதமும் இன்றி ஏற்றுக்கொள்ளலாம். லுமாலா என்னும் பெயர் இந்நாட்டின் சைக்கிள் துறையில் முதலிடத்தை அடைய எடுத்த முயற்சியானது அவ்வளவு அழகானதல்ல. லுமாலா சைக்கிள் கைத்தொழிற்சாலை இன்று 3 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள பாரிய கட்டட வளாகமாகும். 38 வருட காலமாக மூன்று பரம்பரையாக இலங்கையின் சைக்கிள் உற்பத்தி முதன்மை நிறுவனம் என்பது ரகசியமான விடயமல்ல. இதுவரையில் பயணித்த கரடுமுரடான பாதையின் சிரமமான முயற்சியின் பலனை தற்போது உறுதி செய்துள்ளமைக்கு பல சாட்சிகள் உண்டு.
சிட்டி சைக்கிள் ஸ்டோர் (City cycle Stores) என்னும் பெயரில் பாணந்துறை, சரிக்காலமுல்ல, ஹேனாமுல்ல, காலி வீதி இலக்கம் 119 என்னும் இடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆர். எம் நஜிமுதீன் என்னும் வர்த்தகரால் 1953 இல் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வர்த்தக நிலையமாக ஆரம்பிக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டு லுமாலா வர்த்தக பெயரின் கீழ் ஜப்பானின் பிரபல சைக்கிள் உற்பத்தி நிறுவன ஒப்பந்தத்துடன் அதே வர்த்தக பெயருடன் இந் நாட்டு வர்த்தக சந்தைக்கு லுமாலா சைக்கிள்கள் இறக்குமதி செய்து விற்கப்பட்டன. பின்னர் ஜப்பானின் லுமாலா சைக்கிள் உற்பத்தி தொழிற்சாலை மூடப்பட்ட பின்னர் 1985ஆம் ஆண்டு அந்த கைத்தொழிற்சாலையின் அனைத்து இயந்திர உபகரணங்களோடு லுமாலா என்னும் பெயரையும் தற்போதைய தலைவர் எம். எம். மிஃப்லால் விலைக்கு வாங்கினார்.
லுமாலா என்னும் ஜப்பான் வர்த்தக நாமத்தின் கீழ் ஒரு கட்டடத்தில் மூன்று ஊழியர்களுடன் இந்த வர்த்தகம் தற்போதைய தலைவரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வர்த்தகம் இலங்கையால் கையகப்படுத்தப்பட்ட பின்னர் அதனை தற்போதைய நிலைமைக்கு கொண்டு வந்த ஆரம்ப கர்த்தா இவராவார்.
அதன் பின்னர் மிகவும் குறுகிய காலத்தில் 2010அளவில் தேசிய வர்த்தக சந்தையை ஆக்கிரமித்து வெளிநாட்டு சந்தையையும் வெற்றி கொள்ள முடிந்தது. அவ்வேளையில் 1500 ஊழியர்கள் பணி புரிந்ததோடு நாளொன்றுக்கு 2000 சைக்கிள்கள் வரை உற்பத்தி செய்யப்பட்டன. அதன் பின்னர் ஒரு தசாப்த காலத்திலேயே இலங்கையின் ஏற்றுமதி துறையில் முக்கிய இடத்தை அடைந்ததோடு ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தை வகித்தனர். தற்போது லுமாலா குடும்பத்தின் இன்னுமொரு உற்பத்தியாக லைக்கன் என்னும் பெயரில் மின்சார சைக்கிள்கள் உள்ளிட்ட சைக்கிள் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக தேசிய பொருளாதாரத்துக்கு அளிக்கும் பங்களிப்பை நாம் கௌரவிக்க வேண்டும்.
லுமாலா நிறுவனத்தால் 1997இல் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சைக்கிள் ஏற்றுமதியை ஆரம்பித்து 1999இல் ஐரோப்பிய வர்த்தக சந்தையையும் வெற்றிக் கொண்டது. 2005ஆம் ஆண்டளவில் இந்தியாவுக்கும் பின்னர் பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளுக்கும் லுமாலா சைக்கிள்களை ஏற்றுமதி செய்கிறது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி பின்னர் மூலப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையும் மற்றும் வரிவிதிப்பால் சைக்கிள் உற்பத்தி செய்ய பெரும் செலவும் ஏற்பட்டது. நாளாந்தம் 2000 சைக்கிள் வரை உற்பத்தி செய்யக்கூடிய இந்த லுமாலா கைத்தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொடுப்பதன் மூலம் தேசிய பொருளாதாரம் மேம்படும் என்பதோடு இந்த பாரிய வர்த்தகம் எமது ஏற்றுமதி வருமானத்துக்கு பெரும் பங்களிப்பு வழங்கும் என்பது உறுதியாகும்.
தேசிய உற்பத்தியான இந்த லுமாலா தொடர்பாக இதற்கு முன்னர் அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்திருந்தால் தங்களுடைய உற்பத்தியின் கொள்ளளவை இதைவிட அதிகரித்திருக்கலாம் என லுமாலா நிறுவனத்தின் பணிப்பாளர் தலைமை நிறைவேற்று அதிகாரி தாரிக் மிப்லால் தெரிவித்தார். தற்போது போட்டி நிறைந்த வர்த்தக சந்தையில் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்களை விநியோகிப்பது மற்றும் மூலப் பொருட்களை உற்பத்தி செய்து சைக்கிள்களை தயாரிப்பதும் லுமாலா போன்ற சைக்கிள் உற்பத்தியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தரத்தில் உயர்வான சைக்கிள்களை உற்பத்தி செய்ய இறக்குமதி செய்யப்படும் சைக்கிள்களை விட அதிக அளவு செலவழிக்க வேண்டி உள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தின் கீழ் சாதாரண மின்சார சைக்கிள்கள், உல்லாச பயணிகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட இரட்டை ஆசனங்கள் கொண்ட மின்சார சைக்கிள்கள், கழிவு பொருட்களான பிளாஸ்டிக் போத்தல் உள்ளிட்ட இலகு கழிவுகளை சேகரிக்க விசேட மின்சார சைக்கிள்கள், மின்சாரத்தால் செயல்படுத்தப்படும் சக்கர நாற்காலிகள், மக்கள் போக்குவரத்துக்கான ஆசனங்களுடன் கூடிய மின்சார சைக்கிள்கள், ஐஸ்கிரீம் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய நாடு பூராவும் பிரபலமான உணவு உற்பத்தி பொருட்களை விநியோகிப்பவர்களுக்கான மின்சார சைக்கிள்கள், நடமாடும் விற்பனை நடவடிக்கைகளுக்காக உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சார சைக்கிள்கள் உள்ளிட்ட பல மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதோடு கேள்விக்கு அமைய பாரியளவில் அவற்றை உற்பத்தி செய்யக்கூடிய திறமை நிறுவனத்திடம் உள்ளது. இந்த சைக்கிள்களை அரசு விசேட கேள்வியின் கீழ் அரசு அதிகாரிகள், பிரதேச ஊடகவியலாளர்கள், நடமாடும் வர்த்தகர்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தால் அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மேலும் உதவியாக இருக்கும். இது போன்று ஐரோப்பா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இதற்கு பெரும் கிராக்கி உள்ளதாக நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரஞ்சித் சிறிவர்தன தெரிவித்தார். நாட்டுக்கு அந்நிய செலாவணி பெற்றுத் தருதல் உள்ளிட்ட பாரிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்வதன் மூலம் பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் 1500க்கும் அதிகமான ஊழியர்கள் பணி புரிவதோடு அவர்களுக்கான ஊழியர் சேமலாபநிதி உள்ளிட்ட வரப்பிரசாதங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்நாட்டில் போட்டியாக குறைந்த விலையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்கள் அவர்களுக்கு அச்சுறுத்தலாகும். லுமாலா கைத் தொழிற்சாலையில் நூற்றுக்கு நூறு வீதம் உள்ளூர் உற்பத்தி என்பதால் செலவு அதிகம். விற்பனை செய்யும் போது வரி அறவிடுவதால் இந்நிறுவனத்தை நடத்த பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என பொது முகாமையாளர் தெரிவித்தார். சில பிரிவுகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதை விட இறக்குமதி செய்வது இலாபம் என்பதால் தற்போது இங்கு பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை 500 ஆக குறைக்க வேண்டிய துயரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிறுவனத்தின் உற்பத்தி அளவு அதிகரித்த மட்டத்தில் காணப்பட்டால் வர்த்தக சந்தைக்கு வழங்கும் போது இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்களை விட அதிக செலவை அவர்கள் செய்ய வேண்டியுள்ளது.
நிறுவனத்தின் வர்த்தக முகாமையாளர் நிலந்த சட்டன் ஆராச்சி இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் “இவ்வாறான தேசிய உற்பத்திகள் தொடர்பில் மக்களுக்கு விரிவான அறிவுறுத்தல் அத்தியாவசியமாகும். கைத்தொழிலாக இவ்வாறான நிறுவனம் மேற்கொள்ளும் சேவை தற்போது உள்ளதைவிட அதிகமாக சமூகத்தில் பரப்பப்பட வேண்டும். பாரம்பரிய சைக்கிள்களுக்கு பதிலாக பலவகையான அதாவது சிறு பிள்ளைகளுக்கு, பல துறைகளைச் சேர்ந்த நடமாடும் விற்பனையாளர்களுக்கு இலகுவான முறையிலான சைக்கிள்கள் விஷேடமாக லைக்கன் என்னும் பெயரில் மின்சார சைக்கிள்கள் உள்ளிட்ட பல உற்பத்திகள் தற்போது சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். விசேடமாக மின்சார சைக்கிள்களை பயன்படுத்துவதன் மூலம் உடல் ரீதியான நன்மையும், நிதி ரீதியாகவும் பாரிய சேமிப்பு கிடைக்கும். நாள்தோறும் பயன்படுத்துபவருக்கு ஒரு மாதத்திற்கு 8000 ரூபாய் வரை எரிபொருள் சேமிப்பு இதன் மூலம் கிடைக்கும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் லுமாலா சைக்கிள்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் சைக்கிள்களை காட்டிலும் லுமாலா சைக்கிள் உயர்தரத்தில் காணப்படுகின்றன. லுமாலா என்பது நூற்றுக்கு நூறு வீதம் இலங்கையிலேயே தயாரிக்கப்படும் சைக்கிளாகும் இலங்கையில் தயாரிப்பது மாத்திரம் அல்ல ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.”
இந்த வர்த்தகம் வெளிநாட்டிலிருந்து சைக்கிள்களை இறக்குமதி செய்து விற்பதன் மூலமே ஆரம்பிக்கப்பட்டது. லுமாலா உற்பத்தி ஜப்பானில் நிறுத்தப்பட்டது. அதனையே விலைக்கு வாங்கி இங்கு அந்நிறுவனம் நிறுவப்பட்டது. சைக்கிள் உற்பத்தி கைத்தொழில் இலங்கைக்கு போட்டி மிகுந்த ஒரு கைத்தொழிலாகும். அந்த போட்டியான துறைக்கு முறையான நடவடிக்கைகள் அவசியமாகும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தாரிக் இறுதியாக தெரிவித்தார்.
சுபத்ரா தேசப்பிரிய தமிழில் வீ.ஆர்.வயலட்