Home » இந்தியப் பெருந்தேசத்தில் இருந்து அள்ளிய ஒரு சிறுதுளி!

இந்தியப் பெருந்தேசத்தில் இருந்து அள்ளிய ஒரு சிறுதுளி!

by Damith Pushpika
October 8, 2023 6:20 am 0 comment

மகத தேசத்தில் தோன்றிய மூன்றாவது மௌரிய ஆட்சியாளர் அசோக மன்னர் ஆவார். இந்தியாவின் பண்டைய கல்வெட்டுகளின்படி கி.மு. 260 இல் கலிங்க நாட்டைக் கைப்பற்ற பெரும் போர் நடந்தது. பேரரசர் அசோகர் தான் அடைந்த வெற்றியைப் பற்றி உற்சாகம் அடையவில்லை.

அவர் மோதல்களின் விளைவுகளை அடையாளம் கண்டுகொண்டார். பௌத்த மதத்தின்படி அரசை ஆட்சிசெய்ய முனைந்தார். சண்டசோகர் தர்மசோகர் எனப் பிரபலமானார். மன்னன் அசோகர் தனது நாட்டு மக்களுக்கு புத்தரின் போதனைகளின்படி நேர்மையான நடத்தைகளை கடைப்பிடிக்கவும், அவர்களின் வாழ்க்கையை வடிவமைக்கவும் ஆணைகள் வெளியிட்டார்.

அது மாத்திரமல்ல, பௌத்த மதத்தை அண்டைநாடுகளிலும் பரப்ப நடவடிக்கை எடுத்தார் என்பது வரலாறு. அசோக மன்னர் மூன்றாவது தர்ம சங்கத்தை பேணி பௌத்தத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளார். தன் மகனையும் மகளையும் துறவற வாழ்க்கைக்கு அனுமதித்த மன்னர் தர்மசோக, பின்னர் மகிந்த தேரரின் தலைமையில் இலங்கைக்கு புத்த தர்மத்தை பரப்பியதோடு பிக்குணியான சங்கமித்தா மூலம் புனித வெள்ளரசு மரக்கிளையையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்.

இந்தியாவைப் பற்றிய ஆய்வில் அசோகரின் தத்துவம் தவிர்க்க முடியாதது. இந்திய உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர், இந்திய-_இலங்கை உறவுகளை ஆராய்வதில் நிகழ்காலத்திலிருந்து வரலாற்றை நோக்கிச் செல்வதன் மூலம் கணிசமான அளவிலான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தீர்மானிக்க முடிந்தது. இரண்டு வருட பதவிக் காலத்தில் இந்தியாவுடனான இராஜதந்திர விவகாரங்களில் அனுபவித்த மற்றும் அவதானித்த நுட்பமான அனுபவங்களை உங்களுடன் ‘மலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம்’ என்ற பத்தி எழுத்தின் மூலம் பகிர்ந்து கொள்ள முயற்சித்தேன்.

ஏகாதிபத்திய காலத்திலிருந்து காலனித்துவ காலம்வரை, பின்னர் சுதந்திர காலம் வரை, இக்காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் இந்தியா தனித்தன்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தால் ஆளப்படும் உலகின் மிகப்பெரிய நாடாக கருதப்படும் இந்தியா, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது. அரசாங்கத்தின் தனித்துவமான உத்தியால், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு கலாசாரங்களில் கூட ஒன்றாக வாழ முடிந்துள்ளது.

எழுநூறுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்துகின்றன இனங்கள் வாழ்வதோடு, அவற்றில் இருபத்திரண்டு மொழிகளை அரசமொழியாக ஏற்றுக்கொண்ட நாட்டின் தனித்துவமான தன்மையிலிருந்து ஒரு சிறு துளியையே இந்த பத்தி எழுத்தின் மூலம் இரு கைகளாலும் பெற முடிந்தது எனக் குறிப்பிட வேண்டும்.

இந்த பத்தி எழுத்து பெப்ரவரி 28, 2021 அன்று இந்தியாவில் உள்ள புத்த கோயில்கள் பற்றிய தகவலுடன் தொடங்கியது.

ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலவின் பணிகள், பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் மகாபோதி சங்கத்தின் செயற்பாடுகள் இங்கு வெளிப்படுத்தப்பட்டன. சேர் டி.பி. ஜயதிலகவிலிருந்து தொடங்கும் எண்பது ஆண்டுகால இராஜதந்திர உறவுகள், உலகெங்கிலும் உள்ள சுமார் பதினெட்டு மில்லியன் இந்திய புலம்பெயர்ந்தோரின் அளவு மற்றும் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பரிமாற்றம் ஆகியவை கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்தியாவின் கல்வி மற்றும் சுகாதார வசதிகள், தகவல் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சிக்கு முன்னால் உலகில் கிடைத்த வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டுடன் கருத்துவேறுபாடுகளுக்குப் பதிலாக இந்தியாவின் பிறமாநிலங்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. புதுடில்லி மற்றும் கொழும்புடன் நேரடியான கருத்துப் பரிமாற்றம் மூலம் நாடுகளுக்கிடையில் கட்டியெழுப்பப்படும் நம்பிக்கைக்குப் பதிலாக, யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான குறுகிய தொடர்பாடல் உபாயங்களால் பயனில்லை என்பதை புரிய வைக்க இந்த பத்தி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளடக்கப்பட்டன.

கொவிட் தொற்றுநோய் நிலைமை உலக சமூகம் முகம்கொடுத்த ஒரு பயங்கரமான விதியாகும். புதிய தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பு, தடுப்பூசி மற்றும் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவு குறித்தும் பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தகவல்களை முன்வைத்த போது, இந்தியாவின் நடத்தைகள் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டிருந்தமை நினைவுகூரத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியா மீது பாகிஸ்தான் மனித உரிமை குற்றச்சாட்டை முன்வைத்தது. நாட்டிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தேசிய நடவடிக்கையொன்றை முன்மொழிந்து எதிர்க்கட்சி தலைவரும் பாரதிய ஜனதா தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயை அழைத்து ஜெனீவாவுக்கு செல்லும் குழுவுக்கு தலைமை வகிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்கொண்ட பிரச்சினையைத் தவிர, பத்தாண்டு காலமாக அரசியலில் ஈடுபட்டு வந்த வாஜ்பாய், 1994 இல் இந்தியா சார்பாக ஜெனீவாவுக்குச் சென்ற குழுவுக்குத் தலைமை தாங்கினார். நாட்டில் மனித உரிமைகள் பிரச்சினை இல்லை என எதிர்க்கட்சியினர் கூறிய பின்னர் குற்றச்சாட்டுகளால் பயனில்லாமல் போனது.

இக்கட்டான சூழ்நிலைகளில் ஏன் அரசியல்வாதிகளால் இவ்வாறு ஒன்றுபட முடியாது? மனித உரிமைகள், பொருளாதார நெருக்கடிகள், கடனை செலுத்த இயலாமை மற்றும் தற்போதைய நிலைமையை சீர்திருத்துதல் போன்ற பிரச்சினைகளில் பொதுவான கொள்கையுடன் செயல்படாத வரை இலங்கையர்களால் ஆறுதல் அடைய முடியாது.

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள், அதிகமாக பேசப்படும் இந்தியர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், இந்தியா வழியாக ஆட்கடத்தல் மற்றும் ஏழைகளுக்கு நேரடி உதவி வழங்கும் ஆதார் அட்டை அமைப்பு குறித்தும் பல கட்டுரைகள் வந்துள்ளன.

இந்தியா மின்சக்தி தேவைக்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் பல உலக நாடுகளுடன் தொடர்புடைய மின்சார உற்பத்தி என்பதுவும் கவனம் செலுத்தப்பட்ட ஒரு பிரிவாகும். பெற்றோலிய தேவைக்கேற்ப இலங்கைக்கும் வர்த்தக சந்தர்ப்பம் உண்டு. மன்னார் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கி நாடு தற்போது உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட ஐந்து மடங்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து, கூடுதல் மின்சாரத்தை இந்தியாவிற்கு விற்க முடியும் என்பதை இந்த பத்திகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வலியுறுத்தின.

அத்தகைய நடவடிக்கைகளில் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, இந்த நாட்டின் நுகர்வோருக்கு மிகக்குறைந்த விலையில் வழங்குவதுடன், இந்திய கிரிட் அமைப்பிற்கு மின்சாரத்தை வழங்குவதன் மூலம், அதிக அந்நிய செலாவணியை பெறக்கூடிய துறையாக மாற முடியும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அறிவிக்கப்பட்டுள்ள நோக்கங்களின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இருந்து பெறக்கூடிய புரட்சிகரமான வாய்ப்புகள் இலங்கையின் வளர்ச்சிக்கு உதவும் என்பது உறுதி.

பிறநாடுகளின் மூலோபாயம். பின்பற்றப்படும் வழிமுறையை ஆய்வு செய்ய வேண்டும். உலகளாவிய சமூக அமைப்பில் தனிமைப்படுத்தப்பட்ட தீவுகள் இல்லை. உலகில் பரவி வரும் வாய்ப்புகளைப் புரிந்துகொண்டு, அதனை ஏற்று நாட்டுக்கு தனித்துவமான முறைகளைத் தயாரிப்பது கொள்கை வகுப்பாளர்களின் பொறுப்பாகும்.

உலகில் நிகழும் மாற்றங்களுடன் முன்னேறத் தேவையான அறிவையும் புரிதலையும் அடையாளம் காண முடியும். உலக வரைபடத்தில் இந்தியா ஒரு நாடாக இருந்தாலும், மத, கலாசார மற்றும் மொழி பாரம்பரியத்தின் ஆதாரமாக இலங்கை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டுரைத் தொடரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் அடிப்படையில் விரைவில் ஒரு புத்தகம் வெளியிடப்படும். ‘மலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம்’ முற்றுப் பெற்றாலும், இந்தியாவுடன் புதிய கட்டமைப்பில் செயல்படும் தேவை நிறைவுறாது.

தமிழில்: வீ.ஆர்.வயலட

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division