கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதி எப்போதுமே பரபரப்பான பிரதேசமாகும். எல்லாநேரத்திலும் ஒன்றன்பின் ஒன்றாகப் பயணிக்கும் வாகனங்களும் வாகன நெரிசலும் அந்த வீதியில் பயணிப்பவர்களுக்கு புதிதல்ல. வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, இந்த நாட்களில் பெய்யும் வழக்கமான மழையுடன் விடிந்தது. வேலைக்குச் செல்பவர்களாலும், கொள்ளுப்பிட்டிக்கு வரும் சிலராலும் அவ்வீதி சற்றே பரபரப்பாக காணப்பட்டது. லிபர்ட்டி சுற்றுவட்டத்தைக் கடந்தவாறு சிகப்பு நிற இ.போ.சவுக்குரிய பஸ் ஒன்று மத்துகமையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. பஸ் முழுவதும் பயணிகளால் நிரம்பியிருக்கவில்லை என்றாலும், ஓரளவுக்ேகனும் பஸ் நிரம்பியிருந்தது.
கொள்ளுப்பிட்டி பஸ் தரிப்பிடத்தில் பயணி ஒருவர் பஸ்ஸை நிறுத்தியதால் அந்த பஸ் அங்கு நின்றது. அவ்விடத்தில் இரண்டு மூன்று பயணிகள் பஸ்ஸில் ஏறும் போதே, பெரிய மரம் ஒன்று பஸ்ஸின் மீது திடீரென விழுந்து, பஸ் நொடிப்பொழுதில் இரண்டாகப் பிளந்தது. ஒரு சில வினாடிகளுக்குள் அனைத்து நடந்து முடிந்தது. பஸ்ஸினுள் இருந்த பயணிகளின் அலறல் மட்டுமே கேட்டது. இதற்கிடையில், தம்மைக் காப்பாற்றும்படி கோரும் அழுகுரல்கள் விண்ணை முட்டின. அந்த சத்தம் கொள்ளுப்பிட்டியையே உலுக்கும் அலறலானது. முழு நாட்டையும் உலுக்கிய அந்த அனர்த்தத்தை நேரில் கண்ட சாட்சிகளின் அனுபவங்களை நாம் உங்களுக்குத் வழங்குகிறோம். இந்த அனர்த்தம் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றது. மத்துகம இலங்கை போக்குவரத்து சபைக்கு (டிப்போ) சொந்தமான WP NC 0741 இலக்கம் கொண்ட சிவப்பு பஸ் ஒன்று புறக்கோட்டையிலிருந்து மத்துகம நோக்கிப் பயணித்த போதே இவ்வாறு அதன் மீது மரமொன்று சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அந்த பஸ்ஸில் பயணித்த ஐந்து பயணிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
மரம் முறிந்து விழுந்து ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பில் தற்போது நாடே அறியும். விபத்தைப் பற்றி அறிந்ததும் புகைப்படக் கலைஞர் றுக்மல் கமகே உள்ளிட்ட எமது குழுவினர் சிறிது நேரத்திலேயே அவ்விடத்தை அடைந்தோம். அந்நேரம் அப்பிரதேசத்தைச் சேர்ந்தோர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே. ஓ. பீ. அபேரத்ன தலைமையிலான பொலிஸாருடன் இணைந்து அவ்விடத்திற்குச் சென்று விபத்தில் காயங்களுக்குள்ளானவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்மிடம் இவ்வாறு தெரிவித்தார்.
“இவ்விபத்து தொடர்பில் சரியாக எனக்கு காலை 6.16 மணிக்கு தகவல் கிடைத்தது. லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்தில் பஸ் ஒன்றின் மீது மரம் ஒன்று சரிந்து விழுந்து பாரிய அனர்த்தம் ஏற்பட்டதாக நபர் ஒருவர் எனக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கூறினார். உடனே பொலிஸ் குழுவினருடன் நான் அவ்விடத்திற்கு விரைந்தேன். அந்நேரம் பஸ்ஸினுள் காயங்களுக்குள்ளான பயணிகள் சிக்கியிருந்தார்கள்…. ஒரு பயணி சத்தமிட்டு அலறினார்…. “ஐயோ சேர்… பஸ்ஸை வெட்டியாவது என்னை அவசரமாக வெளியில் எடுங்கள்…” என. அந்நபரை நாம் துரிதமாகச் செயற்பட்டு மீட்டாலும் அவர் உயிரிழந்துவிட்டதாக பின்னர் அறிந்து கொண்டேன். நாம் அங்கிருந்த 17 பேரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தோம். அவர்களுள் 5 பேர் உயிரிழந்துள்ளார்கள். மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் இருவர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் அறிந்து கொண்டேன். அவர்களுள் சிலர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் செல்லாமல் வீடு திரும்பியுள்ளார்கள்” வெள்ளிக்கிழமையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்களை பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அவ்விபரங்களின் பிரகாரம், அங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஜீ. ஏ. ஏ. சத்துரங்க, மாத்தளையைச் சேர்ந்த 31 வயதுடைய எச். எம். சுரேஷ் பண்டார ரத்நாயக்கா, 65 வயதுடைய பேலியாகொடை, பராக்கிரம வீதி, இல. 95/7 என்ற முகவரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சுப்ரமணியம் மற்றும் ராகமை, வெலிசறையைச் சேர்ந்த 30 வயதுடைய அருண பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். அத்துடன் மற்றொருவரான 54 வயதுடைய பியசேன அல்லது பிரியஞ்ஜன என்ற பெயரில் கொழும்பு 13 பிரதேசத்தில் வசிப்பவர் என ஊகிக்கப்படும் ஒருவரும் உயிரிழந்தவர்களுள் அடங்குகிறார். அவரது சடலத்தை அடையாளம் கண்டு கொள்வதற்கு தற்போது பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மேலும், வெள்ளிக்கிழமை மாலையாகும் போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவில் 72வது வார்டில் சிகிச்சைக்காக இவ்விபத்தில் காயமடைந்த மல்வானைச் சேர்ந்த 49 வயதான சி. எச். ஏ. டி. உதார, கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஐ. டி. ஆர். தமயந்தி மற்றும் வெலிமடை, கடகெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய ஆர். டி. எம். ஜே. குமாரசிங்க ஆகிய மூவரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
விபத்தில் உயிரிழந்த ஐவரில் பேலியாகொடையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன’ சுப்ரமணியம் வீட்டிலிருந்து வெளியேறி மொரட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ப்ளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிக்காகச் சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார். இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனின் தந்தையான சுப்ரமணியத்தின் மரணத்தை அறிந்து கொண்டதும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்துப் பிரிவுக்கு முன்னால் கதறி அழுத சுப்ரமணியத்தின் மனைவி நாகஜோதி இவ்வாறு கூறினார்.
“எனது கணவர் தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறி வேலைக்குச் செல்வார். அன்றும் அவ்வாறே வீட்டிலிருந்து வெளியேறினார். ஐயோ இப்படியொரு சம்பவம் நடந்து விட்டதே. இதற்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என எனக்குத் தெரியாது. எனினும் நான் இப்போது தனித்துப் போய்விட்டேன். எனது கணவருக்கு நேர்ந்த இந்த துயருக்கு எவ்வழியிலாவது நியாயம் கிட்ட வேண்டும் என நான் வேண்டுகிறேன்”
அத்துடன், துரதிர்ஷ்டவசமாக மரணத்தைத் தழுவிக் கொண்ட சுப்பிரமணியத்தின் மருமகன் மனோஜிடம், அவரது மரணச் செய்தியை எப்படி அறிந்து கொண்டீர்கள் என்று கேட்டோம்.
“நான் காலையில் பேஸ்புக் (முகப் புத்தகம்) பார்த்துக் கொண்டிருந்த போதுதான் இந்த விபத்தைப் பார்த்தேன். பின்னர் நான் தற்செயலாக மாமாவின் கைபேசிக்கு அழைப்பை எடுத்துப் பார்த்தேன். அந்த அழைப்புக்கு பொலிஸாரே பதிலளித்தார்கள். உங்களது மாமா பயணித்த பஸ் கொள்ளுப்பிட்டியில் விபத்துக்குள்ளாகியிருக்கின்றது, உடனே கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வாருங்கள் என அந்த பொலிஸ் உத்தியோகத்தர் என்னிடம் கூறினார். பின்னர் நாம் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு விரைந்தோம். அங்கு தான் இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தைப் பற்றி அறிந்து கொண்டேன். எனது மாமா எம் அனைவரையும் கவனித்துக் கொண்டு வாழ்ந்த ஒரு அப்பாவி மனிதராகும். அவர் அவரது வயதையும் பொருட்படுத்தாமல் வாழ்வதற்கு வழி இல்லாததால்தான் தொழிலுக்குச் சென்றார்”
விபத்தில் உயிரிழந்தவரான, மாத்தளையைச் சேர்ந்த சுரேஷ் ரத்நாயக்க, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வந்தவராகும். அவர் திருமணமானவர். அன்றைய தினம் காலை அவர் பணியாற்றிக் கொண்டிருந்த மகாஇலுப்பள்ளமவில் மனைவியுடன் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியேறியது அன்று ஆரம்பமாகவிருந்த யுனிவடெக் பல்கலைக்கழகத்தின் முதல் மூன்று நாள் ஆய்வு முகாமில் பங்கேற்பதற்காகும். அவரது மறைவினால் சோகத்திற்குள்ளாகியோருள் யுனிவடெக் பல்கலைக்கழகத்தில் அவரது நண்பர்கள் பலரும் அடங்குவர். அந்த நண்பர்களுள் ஒருவரான டிலானும் சோனாலியும் கண்ணீர் மல்க நம்மிடம் இவ்வாறு கூறினார்கள்.
“இன்று எமது பல்கலைக்கழகத்தில் ஆய்வு முகாம் ஒன்றிருந்தது. அதில் கலந்து கொள்ள வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுரேஷ் காலையில் புறக்கோட்டையில் வந்திறங்கி எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தான். முகாம் ஆரம்பமாகியும் இன்னும் சுரேஷ் ஏன் வரவில்லை என்று நாம் சுரேஷூக்கு அழைப்பை எடுத்தோம். எனினும் அந்த அழைப்பு அவர் பதிலளிக்கவில்லை. பதில் வராததால் நாம் தேடிப் பார்த்தோம். அப்போது, இப்படி ஒரு விபத்து நடந்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. எங்கள் நண்பர் ஒருவருக்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தெரியும். அவருக்கு போன் செய்த பிறகுதான் இந்த தகவல் எனக்கு தெரிந்தது. ”
பெருமூச்சு விட்ட நண்பர்களிடையே இருந்த சுரேஷின் நெருங்கிய நண்பர்களுள் டிலானும் ஒருவர். தன் நண்பனைப் பற்றி இவ்வாறு நினைவு கூர்ந்தார்.
“நானும் சுரேஷூம் ஒரே பெச்… இது இன்ஜீனியரின் ஸ்பெஷசல் டிக்ரியாகும். பெரும்பாலும் இதனைச் செய்வது தொழில் செய்பவர்களாகும். நாம் இன்ஜீனியரிங் பீல்டில் பணியாற்றுபவர்கள். சுரேஷ் மாத்தளையைச் சேர்ந்தவர். அவர் திருமணம் முடித்து கணவன் மனைவி இருவரும் மகாஇலுப்பள்ளம நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றுகின்றார்கள்.
தற்போதுள்ள செலவுகளுக்கு மத்தியில் மிகவும் சிரமங்களுடன்தான் பணிக்கு வந்து போவார்கள். என்ன நடந்தது என நினைத்தும் பார்க்க முடியாதுள்ளது. எமது பெச்சில் இருந்த ஒரு அப்பாவி அவர்தான் என நினைக்கிறேன்” இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிர் இழந்த ஒரு இளைஞனின் உயிரின் பெறுமதியை அவரது நண்பர்கள் விபரித்த விதம் இது.
சரிந்து வீழ்ந்த மரம் டூப்ளிகேஷன் வீதியில் கிளிஃபோர்ட் ஒழுங்கையை ஒட்டியதாக இருந்துள்ளது. மத்துகம டிப்போவிற்கு சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு இந்த மரம் சரிந்து வீழ்ந்து அனர்த்தத்திற்குள்ளானது. குறித்த பஸ்ஸின் சாரதி யட்டபாத, 13ம் கட்டையை சேர்ந்த 45 வயதான சமன் கபில என்பவராவார். இலங்கை போக்குவரத்து சபையில் 12 வருடங்கள் அவர் சேவை அனுபவத்தைக் கொண்டுள்ளார். அந்தப் பன்னிரண்டு வருடத்தின் பதினொரு வருடங்கள், இந்தப் பயங்கர விபத்தில் சிக்கிய பஸ்ஸின் சாரதியாகப் பணியாற்றி வருபவர். இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமன் கபில இந்த பயங்கர விபத்தால் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதோடு, அந்த திகில் அனுபவத்தை நம்மிடம் இவ்வாறு தெரிவித்தார்.
“பஸ் தெனியாயவிலிருந்து புறக்கோட்டைக்கு அதிகாலை 5.30 க்கு வந்தது. நாம் புறக்கோட்டையிலிருந்து 5.45 மணிக்குப் புறப்பட்டோம். எமது பஸ் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி ப்ளாஸா சுற்றுவட்டத்தைத் தாண்டி அங்கிருந்த பஸ் தரிப்பிடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்நேரம் அந்த தரிப்பிடத்தில் நின்ற மூன்று பெண்கள் பஸ்ஸில் ஏறுவதற்கு கைகளைக் காட்டினார்கள்.
நான் பஸ்ஸை மெதுவாக பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தினேன். ஒரு சில வினாடிகள்தான் இருக்கும். நொடிப்பொழுதில் பஸ் நின்றுவிட்டது. பின்னால் பார்த்த போது நடந்த பேரழிவைக் கண்டேன். பஸ்ஸினுள் இருந்தவர்களுள் இயன்றவர்கள் வெளியில் குதித்தார்கள். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். இடம்பெற்றது பேரழிவாகும். நானும் நூலிழையில் உயிர் தப்பினேன்”
விபத்துக்குள்ளான 54 இருக்கைகள் கொண்ட 0741 இலக்கமுடைய இ.போ.ச பஸ்ஸானது பதினொரு வருடங்களாக இவ்வழியாகச் சேவையில் ஈடுபட்டு வந்த பஸ்ஸாகும். சுமார் ஒரு வருடமாக பஸ்ஸின் நடத்துனராகப் பணியாற்றி வரும் யு. எச். கயான் புத்திக 37 வயதுடையவராகும். யட்டபாத 8ம் கட்டையைச் சேர்ந்த கயான் புத்திகாவும் இந்த பயங்கரமான அனர்த்தத்தில் உயிர் தப்பியுள்ளார்.
“பெரும்பாலும் இந்த பஸ்ஸில் பயணிப்பது அன்றாடம் பயணம் செய்பவர்கள்தான். இந்த அனர்த்தம் ஒரு திங்கட்கிழமை நாளில் நடந்திருந்தால் ஏற்பட்டிருக்கும் பேரழிவை நினைத்துப் பார்க்க முடியாதுள்ளது. திங்கட்கிழமைகளில் ஏராளமானோர் நின்று கொண்டுதான் பயணிப்பார்கள். அதிகமாகப் பயணிப்பது முப்படைகளைச் சேர்ந்தவர்களாகும். இந்த துயரச் சம்பவம் இடம்பெற்ற நேரமும் பஸ்ஸில் 40 பேரளவில் இருந்தார்கள். 26 பேருக்கு டிக்கட் வழங்கியிருந்தேன். இதில் இந்து வித்தியாலயங்களில் பயிலும் 8 மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் பருவச் சீட்டுள்ளவர்கள். இன்னும் பாஸ்களைப் பெற்றிருந்த இரண்டு மூன்று பேரும் பயணித்தார்கள். டிக்கட் பெறாத ஒரு சிலரும் இருந்தார்கள். பின் ஆசனங்களில் சிறுவர்கள் எழுந்து நின்றார்கள். நான் பின் கதவில் நின்றிருந்தேன். திடீரென லிபர்ட்டி பஸ் தரிப்பிடத்தில் பஸ் நிறுத்த ஆயத்தமாகும் போதுதான் இந்த மரம் சரிந்து வீழ்ந்தது. என்ன நடந்தது என நினைத்தும் கூடப் பார்க்க முடியாதுள்ளது. எப்போதும் எமது பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளுக்கு நேர்ந்த இந்த அனர்த்தத்தை நினைக்கும் போது மனதுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது.”
இந்த பஸ்ஸின் மீது மரம் உடைந்து வீழ்ந்ததால் அதற்குள் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு பொலிஸார், தீயணைப்புப் பிரிவினர், கொழும்பு மாநகர சபை, அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மற்றும் அங்கிருந்தவர்கள் பெருமுயற்சியை மேற்கொண்டு அவர்களை மீட்டு காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதித்தனர்.
இந்த பஸ் மத்துகம இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவுக்குச் சொந்தமானதாகும். தனது 31 வருட சேவையில் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான அனுபவம் இடம்பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்று கூறிய முகாமையாளர் 52 வயதுடைய கசுன் சஞ்ஜீவ இந்த விபத்தில் ஐவரது உயிர் இழந்ததால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
”இந்த பஸ், டிப்போவுக்கு ரெண்டு நாள் ஷிப்டுக்கு பிறகுதான் வரும். இந்த விபத்து இடம்பெற்ற தினத்திற்கு முந்தைய நாள், 5ம் திகதி பகல் 10.00 மணிக்கே, பஸ் டிரைவர், நடத்துனர் ஆகியோரால் டிப்போவிலிருந்து இந்த பஸ் பயணிகள் சேவைக்காக பொறுப்பேற்றார்கள். அதன் பின்னர் 10.30க்கு அவர்கள் கொழும்பு வருவார்கள். கொழும்பிலிருந்து தெனியாயவுக்கு 2.30க்குச் செல்வார்கள். இரவு 8.30 மணியளவில் தெனியாயவுக்குச் செல்வார்கள். தெனியாயவிலிருந்து மறுநாள், அதாவது சம்பவம் நடந்த 6ம் திகதி, அதிகாலை 1.30க்குத்தான் கொழும்புக்குப் புறப்படுவார்கள். ஐந்து, ஐந்தரை மணிக்கெல்லாம் கொழும்பு புறக்கோட்டையை வந்தடைந்து விடும். புறக்கோட்டையிலிருந்து 5.45க்குப் புறப்பட்டு 8.20க்கு மத்துகம வந்து சேரும். இவ்வாறுதான் பஸ்ஸின் பயண ஒழுங்கு திட்டமிடப்பட்டுள்ளது. சாரதி, நடத்துனர் இருவரும் மாறி மாறி பணியில் ஈடுபடுவார்கள். எங்கள் டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸினுள் இப்படி ஒரு பயங்கர விபத்தால் மனித உயிர்கள் பலியாகிருப்பதையிட்டு நாங்களும் மிகவும் வேதனையடைகிறோம்”
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக தலா 500,000 ரூபாவை வழங்குமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸுக்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசந்தா அருள்ரட்ணம்