Home » தாய் நாட்டின் மீதுள்ள கரிசனை அற்ப சொற்பம் தானா?
நாட்டிலிருந்து வெளியேறுவோர்

தாய் நாட்டின் மீதுள்ள கரிசனை அற்ப சொற்பம் தானா?

by Damith Pushpika
October 8, 2023 6:02 am 0 comment

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், முக்கிய துறைகளில் உயர் பதவிகளை வகிப்போர் ‘அம்போ’ என நாட்டை விட்டு விட்டு குறுகிய நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்பில் சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவும் காலமிது.

நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து சற்றே தலை தூக்க முற்படும்போது மீண்டும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு பங்களிக்கக் கூடியவர்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்வதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சொந்த நாட்டில் இலவசக் கல்வி, பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரை படிப்பு, புலமைப் பரிசில் அதற்கு மேலாக சலுகை வட்டியில் அல்லது வட்டி இல்லாமல் வங்கிக் கடன் என அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் இலவசமாகப் பெற்று படிப்பை மேற்கொண்டு படிப்புக்கு ஏற்ப பதவிகளையும் பெற்று வாழ்ந்தவர்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவது என்பது மிகுந்த கவலை தரும் விடயமே.

அதிலும், இலவசமாக அனைத்தையும் பெற்று அதனூடாக சொந்தக்காலில் நிற்கக் கூடிய அளவு தம்மையும் தமது குடும்பத்தின் இருப்பையும் நிலைப்படுத்திக் கொண்டு நாட்டின் நிலைமையை உணராமல் சொந்த நாட்டை விட்டு வருமானம் உள்ளிட்ட சொந்த நலன்களை மட்டுமே கருத்திற் கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த வகையில் நாட்டிலிருந்து இவ்வாறு வெளியேறி வெளிநாடு செல்பவர்கள் தொடர்பில் முழுநாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்று பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

நாட்டில் பிரதான கட்சிகள் பிளவுபட்டுள்ளன. அந்த வகையில் அரசியல் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தாமல் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.

அதனைக் கவனத்திற் கொண்டு அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.

புத்திஜீவிகளின் வெளியேற்றம் நாட்டில் பாரிய எதிர்மறையான தாக்கங்களையே ஏற்படுத்தும் படித்த இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்கள். 30 வருட யுத்த காலத்தில் புத்திஜீவிகள் நாட்டிலிருந்து வெளியேறியதைப் போன்று தற்போதும் கல்விமான்கள், புத்தி ஜீவிகள் நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

யுத்த காலத்தை காட்டிலும் தற்போது கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளின் வெளியேற்றம் வெகுவாக அதிகரித்துள்ளது.

மருத்துவர்கள் உட்பட சுகாதார தரப்பினர் நாட்டை விட்டு வெளியேறுவது பாரதூரமானது. மருத்துவர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவதால் சுகாதார கட்டமைப்பே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.

ஒரு மருத்துவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 50 பேருக்கு சிகிச்சை யளிக்க முடியும்.

ஆனால் தற்போதைய நிலையில் அரச வைத்தியசாலைகளில் ஒரு மருத்துவர் ஒரு நாளைக்கு 200 க்கும் அதிகமானோருக்கு சிகிச்சையளிக்க வேண்டியுள்ளது.

சுகாதார கட்டமைப்பைப் போன்றே பல்கலைக்கழக கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது மிகவும் பாரதூரமானது. அதேபோன்று கல்வித்துறையும் வீழ்ச்சியடைந்தால் சிறந்த எதிர்கால தலைமுறையினரை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய: பொருளாதார நெருக்கடி காரணமாக புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காக வரி வீதம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்தே துறைசார் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

இதற்கு துரிதமாக தீர்வு காண துறைசார் மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் குறுகிய கால திட்டமாகவே வரி விதிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.வெகுவிரைவில் வரிக் கொள்கை மறுசீரமைக்கப்படும்.

பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண வேண்டுமாயின் கசப்பான மருந்தை தற்காலிகமாக அருந்த வேண்டும். நாட்டில் வரி செலுத்தலை ஒரு கலாசாரமாக மாற்றியமைத்தால் அரச வருமானம் சீரானதாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பொருளாதார நெருக்கடி காரணமாகவே புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றனர் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இத்தகைய வெளியேற்றம் இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல என்பதை எதிர்க்கட்சியினர் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து புத்திஜீவிகள் வெளியேற்றத்தை தமது அரசியல் நோக்கத்திற்கான பிரசாரங்களுக்காக எதிர்க்கட்சியினர் பயன்படுத்தி வருகிறார்கள்.நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத காரணத்தால் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று எதிரணியினர் குறிப்பிடுகிறார்கள். நாட்டில் யார் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது?

நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகளை தோற்றுவித்தவர்கள் தான் ஸ்திரமற்ற அரசியல் நிலை காரணமாக புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறுகின்றனர். இது வேடிக்கையாகவுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது. அது ஒன்றும் கொத்துரொட்டி விவகாரம் அல்ல. எதிர்க்கட்சியினர் வரியை அதிகரித்தாலும் விமர்சிக்கிறார்கள்,குறைத்தாலும் விமர்சிக்கிறார்கள்.

வரி வருமானத்தை அதிகரிக்காமல் ஒருபோதும் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியாது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இன்னும் அறியாமல் உள்ளார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் புத்திஜீவிகளின் வெளியேற்றம் நாட்டின் எதிர்காலத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த விவகாரத்தை உடனடியாகவும் பொறுப்புடனும் கையாளத் தவறினால், எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை இருளாக்கும் அபாயம் காணப்படுகிறது. நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் புத்திஜீகள் வெளியேறும் சவாலின் தீவிரத்தன்மையின் பாதிப்பை இதற்குப் பொறுப்பான அனைவரும் ஆழமாக உணர வேண்டும். இந்த விடயத்தின் ஆபத்து மேலோட்டமாகத் தெரியவில்லை என்றாலும் நாடு என்ற ரீதியில் நாம் இவ்விடயத்தை உடனடியாகவும் பொறுப்புடனும் கையாளத் தவறினால், எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை அது இருளாக்கும்.

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், நம் நாட்டில் உள்ள திறமையான புத்திஜீவிகள், இளைஞர்கள் பாரியளவில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். 2023 இல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ தரவுகளின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 750 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர்.

இலங்கையில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தி நிலை, எமது நாட்டின் உயர்கல்வி மற்றும் எமது எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எமது நாட்டவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நல்லது. அதன் மூலம் எமது நாட்டுக்கு அந்நிய செலாவணி அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று இந்த விவாதத்தில் தெரிவித்தவர்களும் உள்ளார்கள். எவ்வாறெனினும் இந்த விவாதத்தின் போது ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பலதரப்பட்ட கருத்துக்களை முன் வைத்தாலும் வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

அதனை விடுத்து வரி அதிகரிப்பு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என பல்வேறு காரணங்களை தெரிவித்து வசதி படைத்தோரே அவர்களது எதிர்காலத்தை மட்டும் கருத்திற் கொண்டு வெளிநாடுகளுக்கு செல்லும்போது தாய் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பது யார்?

அதிலும் நாட்டுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கக் கூடிய கல்விமான்கள், புத்திஜீவிகள், துறை சார்ந்த நிபுணர்கள் இவ்வாறு செயற்படுவது சரியா?

அவர்களது சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை தாய் நாடு காணும் என்பதே எமது தாழ்மையான கருத்து.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division