கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலம் நீடித்த தனுஷ்க குணதிலக்க மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு, ஒரு கிரிக்கெட் வீரருக்கு அப்பால் அவர் சர்வதேச ஊடகங்களில் பெரும் அவதானத்தை பெற்ற கதாபாத்திரமாக மாறுவதற்கு உதவியது.
அவர் மீது குற்றம் சுமத்திய பெண், தனுஷ்க மிருகத்தனமானவர், படுக்கையில் பயங்கரமாக நடந்து கொண்டார், என்னை மூச்சுத்திணற வைத்தார், நான் உயிர் ஆபத்தை உணர்ந்தேன் என்று அடுக்கடுக்காக கதை சொன்னது இந்த வழக்கு மீதான ஆர்வத்தை தூண்ட காரணமானது.
என்றாலும் சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த செப்டெம்பர் 28 ஆம் திகதி வழக்கு மீதான தீர்ப்பு வந்தபோது அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது. குணதிலக்க குற்றமற்றவர் என்று அறிவித்த நீதிபதி சாரா ஹக்கட், குற்றம்சாட்டிய பெண்ணை மறைமுகமாக சாடி இருந்தார்.
இந்தத் தீர்ப்பை அடுத்து அதுவரை பரவலாக குற்றவாளியாக பார்க்கபட்ட தனுஷ்க குணதிலக்க ஒரே இரவில் அப்பாவியாகிவிட்டார்.
குற்றம்சாட்டும் பெண் புத்திசாலித்தனமாக செயற்படுவதாகவும் ஒரு சாட்சியாகவன்றி “வேண்டுமென்றே தவறான சாட்சியங்களை வழங்குவதற்கான விருப்பத்தால் தூண்டப்பட்டிருப்பதாகவும்” குறிப்பிட்ட நீதிபதி, “அந்தப் பெண் குற்றம்சாட்டியவரை சாதகமற்றவராக சித்தரிக்கும் நோக்கமுடையவராக இருந்துள்ளார்” என்றார்.
அதாவது உடலுறவுக்கு முன் குணதிலக்க தனது விருப்பத்திற்கு மாறாக ஆணுறையை அகற்றினார் என்பதே சிட்னி நகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டு. பார்க்க சாதாரணமாக இருந்தாலும் இது பாரதூரமான ஒன்று. கச்சிதமாக நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
ஆனால், உடலுறவின்போது ஆணுறையை அகற்றுவதற்கு குணதிலக்கவுக்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை என்பது ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் பொலிஸுக்கு வழங்கிய வாக்குமூலத்தில் உண்மையாக இருந்தார் என்றும் தீர்ப்பளித்த நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கை தலைகீழாக புரட்டுவதில் குணதிலக்கவின் வழக்கறிஞரான முருகன் தங்கராஜுக்கு முக்கிய பங்குண்டு. நான்கு நாட்கள் நீடித்த வழக்கு விசாரணையில் பெண்ணின் கூற்றுகளை தனது குறுக்கு விசாரணையாலேயே பொய்யாக்கினார்.
அதாவது உடலுறவு 10 தொடக்கம் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக அந்த பெண் வாக்குமூலம் அளித்ததைக் கொண்டு அவருக்கு ஆணுறையை அகற்றுவதற்கு அவகாசம் இருக்கவில்லை என்பதை தங்கராஜ் நிரூபித்தார்.
அந்தப் பெண் குணதிலக்கவை படுக்கை அறைக்கு அழைத்தது மற்றும் பெழுகுவர்த்தியை ஏற்றி அங்கே உணர்வை ஏற்படுத்தியது என்பதை அந்தப் பெண்ணின் வாயாலேயே சொல்லவைத்தார். வழக்கு விசாரணையின்போது தங்கராஜின் குறுக்கு விசாரணை பொறுக்காமல் ஒரு கட்டத்தில் அந்தப் பெண் அழுதுவிட்டார்.
மற்றது பொலிஸார் குணதிலக்கவை கைது செய்த பின் அவர் அளித்த வாக்குமூலம், குணதிலக்க கைது செய்யப்பட்டபோது அவரது கையில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆணுறைகள், மற்றும் இந்த ஜோடி சிட்னியில் கடந்த நவம்பர் 2 ஆம் திகதி சந்தித்தபோது பெறப்பட்ட சிசிடிவி கெமராவில் இருந்த வீடியோ பதிவுகள் எல்லாம் குணதிலக்கவுக்கே சாதகமாக இருந்தது.
அதேபோன்று அந்தப் பெண்ணின் நண்பர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலமும் குணதிலக்கவுக்கே சாதகமானது.
குணதிலக்க “மிருகமாக மாறியதாகவும் உண்மையில் மிகப் பயங்கரமான ஒன்று நடந்ததாகவும்” அந்தப் பெண் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆணுறை தொடர்பில் அந்த பெண் நண்பர்களிடம் கூறும்போது, “அவர் அதனை அகற்றினாரா என்பது எனக்குத் தெரியாது” என்று குறிப்பிட்டதோடு “எனக்கு உறுதியாகத் தெரியாது அப்படி உணர்கிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
நீதிபதி கூறியதாவது, “குற்றம்சாட்டுபவரின் ஆதாரங்கள் குற்றம்சாட்டுபவருக்கு ஆதாரவாகவன்றி அதனை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது” என்றார்.
வழக்கு விசாரணையின்போது அந்தப் பெண் உண்மையானவரல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட தங்கராஜ், படகில் இருந்த சிசிடீவி மற்றும் கண்காணிப்பு கெமராவில் இந்த ஜோடி முத்தமிடுவது மற்றும் கட்டிப்பிடிப்பது தெரிகிறது என்றும் அது எனது கட்சிக்காரர் வலுக்கட்டாயமாகவும் கடுமையாகவும் செயற்பட்டதாக அந்தப் பெண் விபரிப்பதற்கு முரணாக இருப்பதகவும் தெரிவித்தார். எனவே இந்த வழக்கில் இருந்து முற்றாக விடுதலை பெற குணதிலக்கவினால் முடிந்திருக்கிறது.
உண்மையில் இந்தத் தீர்ப்பை பார்க்கும்போது குணதிலக்க அந்தப் பெண்ணிடம் வசமாக சிக்கி இருந்தது தெரிகிறது. தனது வாழ்வை சிதைத்த அந்தப் பெண் மீது அவர் இழப்பிடு கோருவதற்கான அனைத்து சாத்தியங்களும் திறந்தே இருக்கின்றன. என்றாலும் தனது விளையாட்டை தொடர விருப்பமாக இருப்பதாக தீர்ப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் குணதிலக்க கூறியிருந்தார்.
ஆனால், அவர் மீது இலங்கை கிரிக்கெட் சபை விதித்த தற்காலிக தடை இன்னும் அப்படியே இருக்கிறது. அவர் நீதிமன்றத்தால் நிரபராதியாக்கப்பட்டாலும் இலங்கை அணியுடன் கிரிக்கெட் ஆடச் சென்றே பெண் ஒருவருடன் உறவில் ஈடுபட்டிருக்கிறார். அது தெளிவாக ஒழுக்காற்று மீறலாக இருக்கிறது. அதற்கு எதிராக அவர் இலங்கையில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.
என்றாலும் அவர் கிரிக்கெட்டுக்கு திரும்புவது என்பது நினைக்கும் அளவு இலகுவானதாக இருக்காது. அதிலும் தேசிய அணிக்கு திரும்புவதற்கு இன்னும் பல தடைகளை தாண்ட வேண்டி இருக்கும்.
எஸ்.பிர்தெளஸ்