நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக் காலமாகப் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாக வுள்ளது. போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருக்கும் சூழ்நிலையில், இனந்தெரியாத நபர்களால் நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
அண்மைக் காலத்தில் மாத்திரம் இடம்பெற்ற 72 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 45 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரான காலியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரும் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் அடங்குகின்றார்.
இதற்கு முன்பு சில நாட்களுக்கு முன்னதாக மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆறு வயதுக் குழந்தையொன்றும் காயமடைந்திருந்தது. மோட்டார் சைக்கிள்களில் வரும் இனந்தெரியாத நபர்கள் இந்தத் துப்பாக்கிச் சூடுகளை நடத்திவிட்டுத் தப்பிச் செல்வதாகவே அறிக்கையிடப்பட்டுள்ளன. இவற்றை யார் மேற்கொள்கின்றார்கள் அதற்கான நோக்கம் என்ன என்பது பற்றிய விடயங்கள் இதுவரை உரிய தரப்பினரால் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படவில்லை.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீட்டு சரியான பாதைக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் கடுமையான முயற்சிகளை எடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில், இவ்வாறான சம்பவங்கள் முன்னேற்றத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துபவையாக அமைகின்றன. அதிகரித்துள்ள குற்றச்செயல்களை, குறிப்பாக படுகொலைச் சம்பவங்களை நிறுத்துவதற்கு மூன்றுமாத கால அவகாசம் வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஊடகங்களின் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டு ஏறத்தாழ ஒருமாதகாலம் கடந்துள்ள நிலையிலும் படுகொலைகள் தொடர்ந்து வருகின்றமை மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் போன்றன கணிசமாக அதிகரித்திருப்பதும் இந்த நிலைமைக்குக் காரணமாக இருக்கலாம் என பாதுகாப்புத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். விசேடமாக நாடு பொருளாதார ரீதியில் சந்தித்துள்ள சவால்கள் குறித்து அரசாங்கமும், ஒட்டுமொத்த அரசபொறிமுறையும் கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், பாதாள உலகக் குழுவினர் தமது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளனரா என்ற கேள்வியும் எழுகிறது.
எந்தவொரு காரணத்துக்காகவும் தேசிய பாதுகாப்புக்கான முக்கியத்துவத்தைக் குறைக்கத் தயார் இல்லையென அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவரும் சந்தர்ப்பத்தில், அதிகரித்துள்ள பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டியதும் அவசியமாகிறது.
நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புக்களையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவொன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு தொடர்ச்சியாகக் கூடி இவ்விடயத்துடன் சம்பந்தப்பட்ட தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றது. இது ஒருபுறமிருக்க, போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதன் தேவை குறித்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக போதைப்பொருள் வியாபாரத்தில் உள்ள முக்கிய நபர்களைக் கைதுசெய்யாது போதைப்பொருள் பயன்படுத்துபவர்களை மாத்திரமே சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் கைதுசெய்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதுவிடயத்தில் பொலிஸார் தொடர்ந்தும் பொறுப்புடனும், மேலும் வினைத்திறனுடனும் செயற்பட வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தைத் தேடிவரும்வரை காத்திருக்காது திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்வதில் மேலும் கடுமையாக உழைக்க வேண்டும்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் சிலரே போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்ற பரவலான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படும் சூழ்நிலையில், இது விடயத்தில் பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் முப்படையினரின் உதவியுடன் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு போதைப்பொருள் வியாபாரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பட்சத்தில் பாதாள உலகக் குழுக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்.
இதற்கு முன்னரும் நாட்டில் ஏற்படக் கூடிய சாதாரண சூழ்நிலைகளைப் பயன்படுத்தி பாதாள உலகக் குழுவினர் தலைதூக்கியமை நினைவிருக்கலாம். தற்பொழுதும் கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பொலிஸாருக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு தொடர்பில் பிழையான அர்த்தப்படுத்தல்கள் சர்வதேசத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அரசாங்கம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், உயர் பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகளும் இதனை உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
இது இவ்விதமிருக்க, தேசிய பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்தும் விதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நடந்துகொள்வதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் பாதுகாப்புத் தரப்பினரும், விசாரணை மேற்கொண்ட தரப்பினரும் உரிய முறையில் செயற்பட்டுள்ளனர். இருந்தபோதும் அதனைக் கேள்விக்குட்படுத்தும் விதத்தில் சிலர் செயற்படுகின்றார்கள் என்றும் இதற்கு இடமளிக்கப் போவதில்லையென்றும் அவர் கூறியிருந்தார்.
ஒரு சிலரின் செயற்பாடுகளால் அரசாங்கத்தின் உயர்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறான அதிகாரிகள் எவ்வாறு நம்பிக்கையுடன் நாட்டுக்காகப் பணியாற்றுவார்கள் என்றும் கேள்வியெழுப்பியிருந்தார். சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட விடயங்கள் குறித்து நம்பிக்கைத் தன்மை இல்லையென்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
பி.ஹர்ஷன்