இம்மாதம் (ஒக்டோபர்) முதல் அமுல்படுத்தப்படவுள்ள மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக மின்சாரக் கட்டண திருத்தம் மேற்கொள்வதற்காக இலங்கை மின்சாரசபை இரண்டு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள கட்டண திருத்தத்துக்கு பதிலாக அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய, இந்த விசேட கட்டண திருத்த யோசனை இலங்கை மின்சாரசபையால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ மேலும் தெரிவித்த போது,
“மின்சார கட்டணங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை ஆலோசனைக்கமைய, வருடம் தோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டண திருத்தத்துக்கான முன்மொழிவுகளை இ.மி.ச. முன்வைக்கலாம். இந்நிலையில், அடுத்த வருடத்தின் ஜனவரி முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியும்.
எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் நிதி நிலைமை, மின்சார உற்பத்தி மற்றும் மின்சாரத்துக்கான கேள்வி ஆகியவை முன்னறிவிக்கப்பட்ட நிபந்தனைகளிலிருந்து வேறுபட்டுள்ளமையால், இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், ஜனவரி மாதத்துக்கு திட்டமிடப்பட்டிருந்த கட்டண திருத்தத்தை முன்னோக்கி கொண்டு வருவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் ஜனவரியில் மீண்டும் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாதென குறிப்பிட வேண்டும். இந்த வருடத்தில் 31 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுமென்று இ.மி.ச. மதிப்பிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.