ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்பொழுது இடம்பெற்றுவரும் அமர்வில் இலங்கை விவகாரம் மீண்டும் கலந்துரையாடலுக்கு உள்ளாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்துள்ள நிலையில், ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பேசுபொருளாகி வருகிறது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியில் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு முழுமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும், சர்வதேச அரங்கில் அதற்கான பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவதில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நடுநிலையாக அன்றி, பக்கச்சார்பான முறையில் செயற்பட்டு வருகின்றது என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த நிலையில் மீண்டும் இந்த நிலைப்பாடு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து இலங்கை விவகாரம் குறித்தும் கருத்தாடல்கள் இடம்பெற்றன. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நடா அல்நஷீஃப் உரையாற்றியிருந்தார்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் உண்மை, நீதி மற்றும் தீர்வு என்பவற்றுக்குக் காத்துக்கொண்டிருப்பதாகவும், நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான பொறிமுறையைப் பலப்படுத்த வேண்டும் என்றும், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் இலங்கை ெதாடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொறுப்புக்கூறல் செயல்முறையின் கீழ் ஆதாரங்களைத் திரட்டும் நடவடிக்கை முன்னேற்றகரமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இருந்தபோதும், சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்ந்தும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதை அரசாங்கம் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வந்திருந்தது. இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் தொடர்பாக வெளிவந்த பாதையானது, இலங்கைக்கு எதிராக இடைவிடாமல் தொடர்ந்த முன்கூட்டிய, அரசியல்மயப்படுத்தப்பட்ட மற்றும் பாரபட்சமற்ற சில கூறுகளின் நிகழ்ச்சி நிரலைப் பிரதிபலிக்கின்றது.
இந்தப் பரிந்துரைகள் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்தவை எனச் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னரே இலங்கை தெட்டத் தெளிவாகக் கூறிவிட்டது. அப்போது வெளிவிவகார அமைச்சராகவிருந்த தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன இதனை வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற பேரவையின் அமர்விலும் இந்த நிலைப்பாடு தெளிவாகக் கூறப்பட்டது. இவ்வாறான பின்னணியில் தற்பொழுது நடைபெற்றுவரும் அமர்வில் இலங்கை விவகாரம் பற்றிய கருத்தாடல்களில் ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி சுபாசினி அருணதிலக பதில் வழங்கியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 46/1 மற்றும் 51/1 ஆகிய தீர்மானங்களை இலங்கை ஏற்கனவே நிராகரித்திருப்பதாகவும், இம்முறை வெளியிடப்பட்ட உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலுள்ள முடிவுரை மற்றும் பரிந்துரைகளை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் இந்தத் தீர்மானங்களை எதிர்த்தன அல்லது வாக்களிக்கவில்லை என்பதுடன், ஏற்றுக்கொள்ள முடியாத உள்ளடக்கத்துடன் அடிப்படை உடன்பாடு இல்லை, குறிப்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை நிறுவுவது முன்னெப்போதும் இல்லாத ஒரு நடைமுறை என்றும் வதிவிடப் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் நாடுகளுக்குள் ஊடுருவும் நோக்கிலும், மனித உரிமைகளுடன் தொடர்பில்லாத உள்நாட்டு வாக்கு வங்கியை அடிப்படையாகக் கொண்டதாக சில நாடுகளால் கையாளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானங்களின் வரவுசெலவு நடைமுறைப்படுத்தல் குறித்து பல்வேறு நாடுகள் தமது அக்கறைகளை முன்வைத்திருப்பதுடன், பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் அதன் வளங்கள் வீணடிக்கப்படுவதற்கு வழிவகுத்துவிடும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருந்தபோதும், சர்வதேச சமூகத்துடனும், பேரவையுடனும் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன், ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறது என்ற உறுதிப்பாட்டையும் அவர் வழங்கியிருந்தார்.
கடந்த வருடத்தில் இலங்கை அடைந்துள்ள பொருளாதார, சமூக மற்றும் நிதிநிலைப்படுத்தல் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பாராட்டப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார மற்றும் நிதிச் சீர்திருத்தங்களைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் நாட்டில் உருவாகியுள்ள வாய்ப்புகளில் நம்பிக்கை கொண்டுள்ளனர். நாடு மற்றும் அதன் அமைப்புகளின் ஜனநாயக பின்னடைவை கடந்த ஆண்டில் நிரூபித்ததையும் புறக்கணிக்கத் தேர்ந்தெடுத்திருப்பது வருத்தமளிக்கிறது.
பொருளாதாரம், நிதி, தேர்தல், அரசியல், உள்நாட்டு வரவு செலவுத் திட்டம் மற்றும் அபிவிருத்திக் கொள்கைகளின் அனைத்து அம்சங்களிலும் பரந்த மற்றும் ஊடுருவும் கருத்துக்களை வெளியிடுவதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணை அதிகரித்து வருவது தொடர்பான ஆழ்ந்த கவலைகளை இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையைப் பொறுத்த வரையில் கொவிட் 19 தொற்று சூழல் மற்றும் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடி எனத் தொடர்ச்சியாக சவால்களுக்கு முகங்கொடுத்த நாடாக அமைகிறது. இந்தச் சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதை குறிப்பிட்டுக் கூற முடியும்.
குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்த பின்னர் நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தியிருப்பதைப் பகிரங்கமாகக் காண முடிகிறது. விசேடமாக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கும் ஜனாதிபதி, அதற்கு ஏதுவான முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
அது மாத்திரமன்றி, காணாமல்போனோர் அலுவலகம், நஷ்டஈடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தின் செயற்பாடுகளைப் பலப்படுத்துவதற்கும் அவர் தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது.
இருந்தபோதும், இலங்கையில் ஒரு சில சக்திகள் குறிப்பாக தென்னிலங்கையிலும், வடபகுதியிலும் உள்ள சில தரப்புக்கள் தேவையற்ற மதரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றன. விசேடமாக தொல்பொருள் ஆய்வுகள் என்ற அடிப்படையில் மதரீதியான குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றன. குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்டவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இந்த விடயங்களில் அரசியல்வாதிகள் ஒரு சிலரின் தலையீடுகள் சர்வதேச அரங்கில் நாட்டின் மீது தேவையற்ற அழுத்தங்களுக்கு வழிவகுக்கின்றன. உதாரணமாகக் கூறுவதாயின் குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றத்தின் செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விமர்சிப்பது தேவையற்ற குழப்பத்துக்கு வழியை ஏற்படுத்துவதாக அமைகிறது.
வடபகுதியில் உள்ள அரசியல்வாதிகளும் ஏனைய தரப்பினரும் இதனைப் பிடித்துக்கொண்டு சர்வதேச அரங்குகளை நாடுகின்றனர். எனவே, அரசாங்கம் இதுபோன்ற விடயங்களை சரியான முறையில் கையாள்வதும் நாட்டுக்கு சர்வதேச அரங்கில் ஏற்படக்கூடிய தேவையற்ற அழுத்தங்களைத் தணிப்பதற்கு ஏதுவாக அமையும்.
மறுபக்கத்தில், அரசாங்கம் பல்வேறு சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்து நாட்டை சரியான பாதைக்குக் கொண்டு செல்ல முயற்சிகளை எடுத்துள்ளது. குறிப்பாக இலஞ்ச ஒழிப்பு, சுயாதீனமான மத்திய வங்கி போன்றவை குறித்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடுகள் சர்வதேச நாடுகளால் வரவேற்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மாத்திரம் தொடர்ந்தும் இலங்கை விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் உண்மையான முன்னேற்றங்களை இவர்கள் விரும்பவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. இலங்கை அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் அழுத்தங்களைக் கொடுப்பதைவிடுத்து ஒரு சில நாடுகள் தமது நாட்டில் தமக்குக் காணப்படும் வாக்கு வங்கிகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவது துரதிர்ஷ்டமானதாகும். இருந்தபோதும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை சர்வதேசத்துக்கு ஒத்துழையாமல் இருப்பதாக அறிவிக்கவில்லை. எனவே, சர்வதேச சமூகமும் இலங்கை குறித்து சாதகமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.
பி.ஹர்ஷன்