‘இலங்கையை இராணுவத் தளமாகப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நாட்டுக்கும் அனுமதி கிடையாது. அது சந்தேகத்திற்கு இடமற்றது’ என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இலங்கையின் வெளியுறவுக் கொள்கையான அணிசேராமை என்பதன் அடிப்படையில் உலக நாடுகளுடனான உறவுகளை சிறப்புடன் பேணுவதற்கு முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார். சர்வதேச நாடுகளுடன் இலங்கை கொண்டிருக்கும் உறவுகள் மற்றும் நட்புறவைப் பேணுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எமக்கு அவர் பேட்டியளித்தார்.
கே: ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் சீன ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதான தகவல்களின் மத்தியில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுகின்றது. இதுபற்றி என்ன கூறுகின்றீர்கள்?
பதில்: இலங்கை தனது நடுநிலை நிலைப்பாட்டை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறது. அனைத்து நாடுகளுடனும் வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் சுயாதீனத்தை உறுதி செய்வதே எங்கள் அடிப்படை முன்னுரிமை. இலங்கையை இராணுவத் தளமாகப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நாட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது.
இந்த நிலைப்பாட்டை சமநிலைப்படுத்துவது சவாலானது என்றாலும் அது மிகமிக அவசியமானதாகும். எங்கள் துறைமுகங்களில் நிறுத்த அனுமதிக்கப்படும் கப்பல்கள், இராணுவம் அல்லது வேறு வகைகளில் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க, நிலையான செயல்பாட்டு நெறிமுறையை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
கே: இன்றைய உலகில், நடுநிலையான அல்லது அணிசேரா வெளியுறவுக் கொள்கை சாத்தியமான அணுகுமுறையா?
பதில்: உலகம் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது, நமது இராஜதந்திர உத்திகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. எந்தவொரு தேசத்துடனும் மிக நெருக்கமாக இணைந்திருப்பதானது சவால்களை எதிர்கொள்ளும் போது நம்மை தனிமைப்படுத்திவிடும் என்பதை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்டோம்.
இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையானது அணிசேராதது அல்ல, மாறாக பல அணிகள் சார்ந்தது. ஒன்று அல்லது இரண்டு குறிப்பிட்ட விருப்பங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதற்குப் பதிலாக பல தேர்வுகளைப் பேணுவதன் மூலம் பல நாடுகளுடன் நாங்கள் ஈடுபாடுகளைக் கொண்டுள்ளோம். இந்த அணுகுமுறை நமக்கு மட்டும உரித்தானது அல்ல, இது இராஜதந்திரத்தின் அடிப்படை அம்சமாகும்.
இந்த சிக்கலான உறவுகளின் வலையமைப்பை அவதானமாகவும், விடாமுயற்சியுடனும் நிர்வகிப்பதே எங்கள் குறிக்கோள். இது ஒரு சவாலான பணியாகும், ஆனால் நமது வெளியுறவுக் கொள்கையானது இலங்கையின் நலன்களுக்கு முதலிடம் கொடுக்கும் கொள்கையில் வேரூன்றி உள்ளது. எந்த ஒரு தேசத்துடனும் பக்கபலமாக இருக்கவோ அல்லது தேவையற்ற முறையில் நெருங்கிப் பழகவோ முடியாது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக நமது தேசத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இலங்கையின் வெளியுறவுக் கொள்கை இலங்கைக்கு ஆதரவாக உள்ளது.
கே: இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க இலங்கை தயாராகி வரும் நிலையில், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் கருத்தாக்கத்திற்கு அந்த நாடு எவ்வாறு பங்களிக்க முடியும்?
பதில்: இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைமைப் பதவியை இலங்கை ஏற்றுக் கொண்டது ஒரு இராஜதந்திர பார்வையைக் கொண்டதாகும். நாடுகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தைகளை நாங்கள் நம்புகிறோம்.
கணிக்கக்கூடிய, விதிகள் அடிப்படையிலான வரிசையை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். இதன் பொருள் அனைத்து தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட, வெளிப்படையான மற்றும் தன்னிச்சையான மாற்றங்களுக்கு உட்பட்ட விதிகளை உருவாக்குவது ஆகும். பேச்சுவார்த்தையானது பதற்றங்களைக் குறைக்கும்.
கே: பிராந்திய நாடுகளுடனான பல்வேறு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுடன் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில்இணைவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அறிவிப்பை உங்களால் வழங்க முடியுமா? பிரிக்ஸ் உறுப்புரிமைக்கு விண்ணப்பிப்பது பற்றி ஏதேனும் பரிசீலனை உள்ளதா?
பதில்: பொருளாதார வளர்ச்சியில் வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கும் இன்றைய உலகில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் முக்கியமானவை. பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை இலங்கை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. சமீப காலங்களில் விரைவாக வளர்ச்சியடைந்த பல நாடுகள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னேறி வருகின்றன.
இலங்கை ஒப்பீட்டளவில் மிகவும் சிறிய சந்தையென்பதால் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் தானாக முன்வந்து இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வராது. இது உலகப் பொருளாதாரத்தில் 0.07 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். எனவே, இலங்கையைப் பார்த்து யாரும் இலங்கையைக் கைப்பற்ற முயற்சிக்கவில்லை.
நமது பலம் மற்றும் நமது அளவு பற்றிய மிக விரைவான மதிப்பீட்டை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியம்.
முதற்கட்டமாக, தாய்லாந்துடனான ஒப்பந்தங்களை இறுதி செய்து சிங்கப்பூருடன் ஏற்கனவே உள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அமுல்படுத்த உள்ளோம். சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, மேலும் இந்தியாவுடனான எங்கள் பொருளாதார ஒத்துழைப்பையும் விரிவுபடுத்துகிறோம்.
பிரிக்ஸ் உறுப்புரிமையைப் பொறுத்தவரை, நாங்கள் இன்னும் அந்தப் பாதையில் இறங்கவில்லை, ஆனால் நமது வெளியுறவுக் கொள்கையானது ஈடுபாடு மற்றும் திறந்த உறவுகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, நாங்கள் எங்கள் விருப்பங்களைத் திறந்து வைத்திருக்கிறோம், மேலும் எங்களது முடிவுகள் இலங்கையின் சிறந்த நலன்களுடன் இணங்கும்.
கே: கச்சதீவுப் பகுதியை இந்தியா கையகப்படுத்த வேண்டும் என்று இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் கண்ணோட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதா?
பதில்: கச்சதீவின் நிலை குறித்து ஏற்கனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இது பேச்சுவார்த்தைக்குட்பட்ட விடயம் அல்ல. சில சமயங்களில், தேர்தல்களின் போது அரசியல் விவாதங்கள் வெளிப்படும், ஆனால் இவை பெரும்பாலும் அரசியல் கருத்தாக்கங்களால் இயக்கப்படுகின்றன. நமது நாடுகளுக்கிடையேயான தீர்வு ஒப்பந்தங்களைப் பிரதிபலிக்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
கே: கொவிட் -19 தகனம் சர்ச்சை போன்ற பிரச்சினைகளால் முஸ்லிம் நாடுகளுடனான இலங்கையின் உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டது. நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், இந்த உறவுகளை சரிசெய்யவும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
பதில்: இலங்கை பாரம்பரியமாக முஸ்லிம் மற்றும் இஸ்லாமிய உலகத்துடன், குறிப்பாக அணிசேரா இயக்கத்தின் மூலம் வலுவான உறவுகளைப் பேணி வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, கொவிட்-19 நெருக்கடியின் போது, சில முடிவுகளும் செயல்களும் எம்மைப் பற்றிய நிலைப்பாட்டை சேதப்படுத்தி உறவுகளில் விரிசலை ஏற்படுத்தி விட்டன.
இந்த உறவுகளை மீளக்கட்டியெழுப்பவும், எமது முஸ்லிம் நண்பர்களின் நம்பிக்கையை மீளப்பெறவும் நாம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இந்த முக்கிய உறவுகளை மீண்டும் ஒருங்கிணைப்பதே எங்கள் குறிக்கோள், மேலும் கடந்தகால தவறான புரிதல்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது 2019 ஈஸ்டர் ஞாயிறு படுகொலைக்குப் பின்னர் உடனடியாக நடந்தது.
அவை அறிவியல் அல்லது தர்க்கத்தால் இயக்கப்படவில்லை. அது முஸ்லிம்கள் மீதான வெறுப்பு. மேலும் அவர்கள் அந்த நேரத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் கூட்டாக தண்டிக்க விரும்பினர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது இலங்கையர்களை தண்டித்தது. உலகத்தின் பார்வையில், இலங்கை மனித உரிமைகளை மீறும் ஒரு சகிக்க முடியாத அரசாகத் தோன்றியது, இறந்தவர்கள் மற்றும் உயிருடன் இருப்பவர்களின் உரிமைகளையும் கூட மீறுகிறது.
எனவே, நிறைய சீரமைக்கும் பணிகள் செய்யப்பட வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர், அதற்கான புதிய கண்ணோட்டம் கொடுக்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். இதை முஸ்லிம் உலகமும் பாராட்டுகிறது.