இந்து சமுத்திரத்தில் நாலாபுறமும் கடலால் சூழப்பட்டுள்ள இலங்கையில் கடந்த சில வருடங்களாக அடிக்கடி நில அதிர்வுகள் பதிவாகின்றன. அவை நிலத்திலும் நாட்டை சூழவுள்ள கடலிலும் இடம்பெறுகின்றன. அந்த வகையில் கடந்த 11ஆம் திகதி இரவு (2023 செப்டம்பர் 11ஆம் திகதி) மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து 310 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் 24 கிலோ மீற்றர்கள் ஆழத்தில் 4.65 ரிச்டர் அளவில் நில அதிர்வொன்று பதிவானது. அதுபோன்று கடந்த ஜுலை 2ஆம் திகதி தென் கிழக்கு ஹம்பாந்தோட்டையில் இருந்து 1200 கிலோ மீற்றர்கள் தூரத்தில் கடலில் 10 கிலோ மீற்றர்கள் ஆழத்தில் 5.8 ரிச்டர் அளவிலும் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி தென் கிழக்கு ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து 25.8 கிலோ மீற்றர்கள் தூரத்தில் 3 கிலோ மீற்றர்கள் ஆழத்தில் 4.4 ரிச்டர் அளவிலும் மார்ச் 10ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் 3.00, 3.5 மற்றும் 2.3 ரிச்டர் அளவுகளில் புத்தள, பெல்வத்த, வெல்லவாய பிரதேசங்களிலும் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு நில அதிர்வுகள் பதிவானதும், அவை சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவை அல்ல என்று இலங்கை புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம், இலங்கை வளி மண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன உடனடியாக அறிவித்து மக்களுக்கு அறிவூட்டி விடுகின்றன.
ஆனாலும் 2022இல், 07 நிலஅதிர்வுகளும் 2023இல் முதல் சில மாதங்களுக்குள், புத்தல, பேருவளை, கிரிந்த, கோமரன்கடவல மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளில் 09 நிலஅதிர்வுகளும் பதிவாகியுள்ளன. அந்த வகையில் கடந்த 11ஆம் திகதி மட்டக்களப்பு கடற்கரைக்கு அப்பால் கடலில் ஏற்பட்ட 4.65 ரிச்டர் அளவிலான நில நடுக்கத்துக்கு முன்னரான 08ஆம் திகதி வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் 6.8 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டு 2900க்கும் மேற்பட்டோர் உயிரிந்ததோடு 5530பேர் காயமடைந்து கோடிக்கணக்கான சொத்துக்களும் அழிவுற்றுள்ளன.
அதனால் இந்நாட்டில் அவ்வப்போது பதிவாகும் நில அதிர்வுகள் குறித்து மக்கள் மத்தியில் அச்ச நிலையும் காணப்படவே செய்கின்றது.
ஏனெனில் புவி நடுக்கம் என்பது சில வினாடிகளே நீடிக்கக்கூடியவை. ஆனால் பாரிய அழிவுகளையும் இழப்புக்களையும் ஏற்படுத்தக்கூடியவை. அதனால் நில நடுக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் அழிவுகளையும் குறைத்து, தவிர்த்துக் கொள்வது இன்றியமையாததாகும். அதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியமானது.
அந்த வகையில் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் நில அதிர்வுகள் கண்காணிப்பு மத்திய நிலையத்தின் அதிகாரியொருவரின் கருத்துப்படி, நாட்டில் நில அதிர்வுகளைக் கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதிகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு நிலநடுக்கங்கள் குறித்த அறிவும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அதனால் சிறிய நில அதிர்வு குறித்தும் கவனம் செலுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதே கருத்தைத் தான் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பூகற்பவியல் ஓய்வுநிலை பேராசிரியர் அத்துல சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
‘தற்போது நாட்டில் நில அதிர்வு குறித்த அறிவும் தொழில்நுட்ப கண்காணிப்பு வசதிகளும் முன்னேற்றமடைந்துள்ளதால் அதனை உணர்வது அதிகரித்துள்ளதே அன்றி நில அதிர்வு ஏற்படுவது அதிகரிப்பதாக நான் கருதவில்லை’.
நில அதிர்வுகளைக் கண்காணிக்கும் தொழில்நுட்பக் கருவிகள் இந்நாட்டின் பல்லேகல, மகாகனரதாவ, ஹக்மன, புத்தங்கல உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அவை 24 மணிநேரம் தொழிற்படுவதோடு, நிலத்திலோ கடலிலோ ஏற்படும் நில அதிர்வுகளை உடனுக்குடன் பதிவு செய்யக்கூடியனவாகவும் உள்ளன. அவை குறித்து உடனுக்குடன் ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு அறிவூட்டப்படுகின்றன.
இதன் மூலம் நில நடுக்கங்கள் குறித்த போதிய அறிவை மக்கள் பெற்றுக்கொள்ள வசதி ஏற்பட்டுள்ளது. அத்தோடு அவை குறித்து அதிகம் கவனம் செலுத்தக்கூடிய நிலைமையும் உருவாகியுள்ளது. இற்றைக்கு 10 -முதல் 15 வருடங்களுக்கு முன்னரும் இவ்வாறு நில அதிர்வுகள் ஏற்பட்டிருக்க முடியும். அது தொடர்பிலான விழிப்புணர்வு இன்மையால் அது பெரிதாக உணரப்படவுமில்லை. அப்போது அவற்றைப் பதிவு செய்வதற்கான போதிய தொழில்நுட்ப வசதிகளும் நாட்டில் காணப்படவுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நில நடுக்கமானது எந்த இடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்படலாம். அவற்றை முன்கூட்டியே கூற முடியாது. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டதும் இரண்டு முறைகளில் அறிந்து கொள்ளலாம். அவற்றில் ஒன்று பூகம்பத்தை அளவீடு செய்யும் கருவிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். மற்றையது மனிதர்களால் உணர முடியும். நில அதிர்வை உணர்வதற்கு பதற்றமவர்களாகவும் உள அமைதி கொண்டவர்களாகவும் இருப்பது அவசியம். ஆனால் நில அதிர்வு குறித்த அறிவைப் பெற்றிராதவர்கள் சில நில அதிர்வுகளைப் பொருட்படுத்துவதில்லை. குறிப்பாக வாகனத்தில் பயணிக்கும் போது உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் அதனை உணர முடியாது. ஆனால் நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு எல்லா நில அதிர்வுகளையும் அளவிட முடியும்.
அதனால் நில நடுக்கத்தின் தாக்கங்கள், பாதிப்புக்களில் இருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்வதற்காகவும் அதன் பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்வதற்காகவும் விரைந்து செயற்பட வேண்டும். குறிப்பாக பூகம்பமொன்றை உணரும் சந்தர்ப்பத்தில் உயரமான கட்டடங்களில் இருப்பவர்கள் மின்னுயர்த்திகளை பயன்படுத்தி கீழே இறங்க முற்படலாகாது. கட்டடத்தின் படிகளைப் பயன்படுத்தி கீழே இறங்க வேண்டும். ஆனால் உயரமான கட்டங்களில் இருப்பவர்கள் உடனடியாக வலுவான மேசைக்கு கீழோ அல்லது கட்டிலுக்கு கீழோ இருந்து தலையையும் கழுத்தையும் பாதுகாத்துக் கொள்வது அவசியம். அதன் மூலம் கூரை ஒடுகள் தலைகளில் விழுந்து பாதிப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
அதேநேரம் வீதியிலும் பாலங்களிலும் பயணிப்பவர்கள் விரைந்து திறந்த வெளிகளுக்கு செல்வது நல்லது. இந்தோனோசியா, சுமத்ரா போன்ற பிராந்தியங்களில் பூகம்பம் ஏற்பட்டால் சுனாமி அனர்த்தம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தவும் தவறலாகாது. குறிப்பாக கரையோரங்களை விட்டு உயரமான நிலப்பகுதிக்கு செல்வது முக்கியமானது. அத்தோடு இப்பிராந்தியங்களில் 6.5 ரிச்டர் அளவுக்கு மேல் பூகம்பம் ஏற்பட்டால் இலங்கையில் அனர்த்த முகாமைத்துவம், வளிமண்டலவியல் திணைக்களம் என்பவற்றின் அறிவித்தல்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தவும் வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார் பூகம்ப கண்காணிப்பு மத்திய நிலையத்தின் அதிகாரி.
இலங்கையானது இந்தோ -_ அவுஸ்திரேலிய புவித்தட்டில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றாகும். இந்தியாவின் இமயமலைப் பகுதியில் இருந்து அவுஸ்திரேலியாவின் கிழக்கு மூலை வரையும் பரந்து காணப்படும் இப்புவித்தட்டின் எல்லைகளில் நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவை சில சந்தர்ப்பங்களில் எம்மால் உணரக்கூடியனவாக அமைகின்றன.
இப்புவித்தட்டின் மத்தியில் உடைவு ஏற்பட்டுள்ளதோடு ஏனைய இடங்களிலும் 20க்கும் மேற்பட்ட பிளவுகள் உருவாகி வருகின்றன. இதன் விளைவாக புவித்தட்டின் உட்பகுதியில் நகர்வுகள் நிகழ்வதோடு உராய்வு மற்றும் மோதும் நிலை ஏற்படும் போது சிறிய, பெரிய பூகம்பங்கள் அவ்விடங்களில் ஏற்படுகின்றன. இது ஆழ்கடலில் இடம்பெறுவதால் அதன் தாக்கங்கள் குறைவான போதிலும் அவற்றை எம்மால் உணரக்கூடியதாக இருக்கும். ஆனால் சுனாமி அனர்த்தம் ஏற்படாது.
இவ்வாறான நிலநடுக்கங்கள் இந்தோனேசியா, சுமத்ரா தீவின் பண்டா – அசே பிரதேசங்களில் ஏற்படுமாயின் சுனாமி அனர்த்தம் ஏற்படலாம். அப்பிராந்தியம் ஆழமற்ற கடற்பரப்பைக் கொண்டுள்ளது. அப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் 2004 போன்று சுனாமி அனர்த்த அச்சுறுத்தல் ஏற்படலாம்.
அதன் தாக்கத்தை எம்மாலும் உணரக்கூடியதாக இருக்கும். மற்றப்படி எமது கடற்பிராந்தியத்தில் ஏற்படும் பூகம்பங்களினால் சுனாமி அனர்த்தங்கள் ஏற்படாது எனவும் ஒய்வு நிலைப் பேராசிரியர் சேனாரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இலங்கையின் தென் பகுதிக்கு அப்பால் பூகம்ப வலயமொன்று உருவாகியுள்ளது. அங்கும் நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. அதனால் தெற்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் அவ்வப்போது நிலஅதிர்வுகள் உணரப்படுகின்றன.
நிலஅதிர்வு குறித்த அறிவைக் கொண்டுள்ளவர்களால் இது பெரிதும் உணரப்படுகிறது. ஆனாலும் இந்நிலஅதிர்வுகள் குறித்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்பதையும் குறிப்பிடத்தவறவில்லை பேராசிரியர் சேனாரட்ன.
மர்லின் மரிக்கார்