இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு ஒன்று அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை புதிய பெயர் மற்றும் புதிய வடிவில் இடம்பெற உள்ளது. அதன்படி, ”லீக் வன்” என்ற பெயரில் இடம்பெறவுள்ள இந்த தொடர் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகி எதிர்வரும் ஜூன் மாதம் நிறைவடையும் என்று இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இம்முறை தொடரில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மொத்தமாக 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. தொடருக்கான இறுதி இரண்டு அணியை தெரிவு செய்வதற்கு அண்மையில் ப்ளே ஓப் சுற்றுப் போட்டிகள் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றன. அதில் வெற்றியீட்டிய கொழும்பு விக்டரி விளையாட்டுக் கழகம் மற்றும் மாளிகாவத்தை யூத் விளையாட்டுக் கழகம் என்பன புதிய அணிகளாக லீக் வன் தொடரில் போட்டியிடவுள்ளன.
மொத்த அணிகளும் நான்கு குழுக்களுக்கு பிரிக்கப்பட்டு ஒரு குழுவில் தலா நான்கு அணிகள் மோதும் விதத்தில் முதல்சுற்றுப் போட்டிகள் இடம்பெறும். குழுநிலைப் போட்டிகள் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இடம்பெறவுள்ளன.
நாட்டின் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளை ஒரு குழுவில் உள்ளடக்கிய விதத்திலேயே இம்முறை முதல் சுற்றுக்கான அணிகள் குழு ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சென். நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் என்பன மட்டக்களப்பின் யங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்துடன் குழு ”டி” யில் இடம்பெற்றுள்ளன.
குழுஏ :
குரே வி.க., ஓல்ட் மெசனோடியன்ஸ் கா. க., படோவிட யுனைடட் வி.க., டொன்பொஸ்கோ வி.க.
குழு பி :
கிறீன் பீல்ட் கா.க., கிறேட் ஸ்டார் வி.க., குருந்துவத்த யுனைடட் வி.க., விக்டரி வி.க.
குழு சி :
ரெட்சன் வி.க., ஹைலைன் வி.க., கெலிஓய கா.க., மாவனல்ல யுனைடட் வி.க.
குழு டி :
சென். நிக்கலஸ் வி.க., பாடும்மீன் வி.க., யங்ஸ்டார் வி.க., மாளிகாவத்த யூத் வி.க.
குழுநிலைப் போட்டிகளின் நிறைவில் தலா முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகும். சுப்பர் 8 சுற்றிலும் 8 அணிகளும் இரண்டு குழுக்களுக்கு பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெறும். அதில் தலா முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகும். சுப்பர் 8 சுற்றின் போட்டிகள் அனைத்தும் ஏப்ரல், மே மாதங்களில் இடம்பெறும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மே மற்றும் ஜூன் மாதங்களில் இடம்பெறும். இம்முறை தொடரில் முதல் சுற்று தொடக்கம் இறுதிப் போட்டி வரை அனைத்து அணிகளும் சொந்த மைதானம், வெளிமைதானம் (Home & Away) என்ற விதத்தில் ஒரு அணியுடன் இரண்டு முறை மோத வேண்டும் என்பது விஷேட அம்சமாகும்.
சுற்றுத்தொடரின் நிறைவில் சம்பியனாகும் அணி அடுத்த பருவத்தில் சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தரமுயர்த்தப்படும் அதேவேளை, இத்தொடரில் இரண்டாம் இடத்தைப் பெறும் அணி, சம்பியன்ஸ் லீக் தொடரில் 13ஆம் இடத்தைப் பெறும் அணியுடன் பிளே ஓப் சுற்றில் விளையாடும்.
இலங்கை உதைபந்தாட்டத்தை பொறுத்தவரையில் கடந்த பல வருடங்களாக உள்ளூர் சுற்றுப்போட்டிகள் எதுவும் இடம் பெறவில்லை. இதனால் உள்நாட்டு கழகங்களுக்காக விளையாடி வந்த வீரர்கள் போட்டிகள் இல்லாமையினால் அதிருப்தியில் இருந்துவந்தனர். எனினும், தேசிய அணி சிறந்த முறையில் தயார்படுத்தப்பட்டு, அண்மையில் இடம்பெற்ற சர்வதேச போட்டிகளில் சிறந்த திறமையைக் காண்பித்து முன்னேற்றம் கண்டுவருகின்றது.
இவ்வாறான ஒரு நிலையில், இலங்கையில் இந்த வருடத்தில் இருந்து மீண்டும் உள்ளூர் போட்டிகள் அனைத்தும் ஆரம்பிக்கப்படும் என்று அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.
குறிப்பாக, ஜஸ்வர் உமரின் எண்ணக்கருவுக்கு அமைய கடந்த 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது தொழில்முறை உதைபந்து சுற்றுத்தொடரான ”சுபர் லீக்” தொடர் பல சவால்களுக்கு மத்தியில் 2022ஆம் ஆண்டு நிறைவுபெற்றது. களுத்தறை புளூஸ்டார் அணி சம்பியனாகிய அந்த தொடரானது அணிகளுக்கு பெரிய அளவில் பணம் வழங்கப்பட்ட தொடராகவும் அமைந்தது.
இந்நிலையில், சுப்பர் லீக் தொடர் மற்றும் சம்பியன்ஸ் லீக் தொடர் என்பன மீண்டும் இந்த வருடம் இடம்பெறும் என்றும், அதில் அணிகளுக்கு பெரும் தொகை பணம் வழங்கப்படும் என்றும் ஜஸ்வர் உமர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் கடந்த பல வருடங்களாக எந்தவொரு முன்னணி தொடரும் இல்லாமையினால் அதிருப்தியில் இருந்த வீரர்கள், கழக உரிமையாளர்கள் மற்றும் உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு மீண்டும் உள்ளூர் போட்டிகள் ஆரம்பிக்கப்படுகின்றமை புதிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஷாட் அன்வர்டீன்