ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இரண்டாவது வெளிநாட்டுப் பயணமான சீன விஜயம் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்குச் சென்று திரும்பியிருந்த நிலையில், சுமார் ஒரு மாதகால இடைவெளியில் இரண்டாவது வெளிநாட்டு விஜயமாக அவர் சீனாவுக்குச் சென்று திரும்பியுள்ளார்.
ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது அவருக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் புதியதொரு அத்தியாயத்திற்கான தொடக்கப்புள்ளி இடப்பட்டுள்ளது.
1952ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட அரிசி- இறப்பர் ஒப்பந்தத்துடன் ஆரம்பமாகி 1957ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ உறவாகப் பரிணமித்த இலங்கை- சீன உறவுகள் தற்போது 68 ஆவது வருடத்திற்கு அப்பால் புதியதொரு இடத்திற்குச் செல்கின்றன.
இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதொரு ஆரம்பத்தைப் பெற்றிருக்கும் தேசிய மக்கள் சக்திக்கு சர்வதேச ரீதியில் இருக்கக் கூடிய உறவுகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை முன்வைத்திருந்தன. எனினும், இவற்றைப் பொய்யாக்கும் வகையில் ஜனாதிபதியின் இந்திய, சீன விஜயங்கள் அமைந்தன.
சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங் விடுத்திருந்த அழைப்பை ஏற்று கடந்த 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவுக்குச் சென்றிருந்தார். சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகத் தலைவர் மாவோ சேதுங்கின் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதன் பின்னர் சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங்கை சந்தித்தார். அங்கு மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இலங்கை ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி, அபிவிருத்தி யுகத்தில் இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றத் தயார் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்தார்.
உயர்மட்ட சந்திப்புக்கள்
இரு நாடுகளும் இணைந்து பணியாற்றக்கூடிய விடயங்கள் மற்றும் துறைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது மாத்திரமன்றி, பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தக் கூடிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
சீன ஜனாதிபதியுடன் மாத்திரமன்றி, அந்நாட்டின் பிரதமர் லீ சியாங் உடன் நடத்திய சந்திப்பில் மேலும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் கொள்கைத் திட்டமான ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீனா உறுதுணையாக இருக்கும் என்ற உறுதிமொழியை சீனப் பிரதமர் வழங்கியிருந்தார்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்று குறிப்பிட்ட அவர், ஊழலற்ற நாட்டை உருவாக்கும் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கும் தனது பாராட்டைத் தெரிவித்திருந்தார். அதேபோல் வறுமையை ஒழித்து இலங்கையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு சீனா தரப்பிலிருந்து சாதகமான சமிக்ஞையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புகளையடுத்து முக்கியமான சந்திப்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜிக்கும் இடையிலான சந்திப்பு அமைந்தது. இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் இங்கு தெரிவித்திருந்தார். இலங்கையுடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுவதே சீன தேசிய காங்கிரஸின் எதிர்பார்ப்பு என்றும், இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சீனா செய்யத் தயாராக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சீனாவின் பொருளாதார ஒத்துழைப்பு:
அரசியல் உயர்மட்ட சந்திப்புகளுக்கு அப்பால் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் இலங்கையில் சீன முதலீட்டாளர்களுக்குக் காணப்படும் வாய்ப்புக்கள் குறித்து ஆராயும் நோக்கிலான சந்திப்புகளிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டிருந்தார்.
உட்கட்டுமான அபிவிருத்திகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு விடயத்தில் இலங்கையில் சீனா பாரிய பங்காற்றி வருகின்றது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம், அதிவேக நெடுஞ்சாலைகள் எனப் பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் சீனா கடந்த காலங்களில் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. இவ்வாறான பின்னணியில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதில் குறிப்பாக வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சியிலும் சீனா ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. அதாவது கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்தமை வரவேற்கத்தக்க விடயமாக இருந்தது.
இந்த நிலையில் நாடு படிப்படியாகப் பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீண்டுவரும் சூழ்நிலையில் புதிய முதலீடுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார தனது சீன விஜயத்தின் போது கவனம் செலுத்தியிருந்தார். சீனாவில் உள்ள முன்னணி வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுடன் விசேட அமர்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்ற அழைப்பை விடுத்திருந்தார்.
உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களுடன் கூடிய நிறுவனங்கள் பலவற்றின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பலசுற்று கலந்துரையாடல்களை நடத்தினார். சீனா பெட்ரோ கெமிக்கல் கூட்டுத்தாபனம், சினோபெக் குழுமம், சீன தொலைத்தொடர்பு நிர்மாண நிறுவனம், சீன மேர்சண்ட் குழுமம், ஹுவாவி, வாகன உற்பத்தித் துறையில் பிரபலமான நிறுவனமான பி.வை. டி ஒட்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியிருந்தார்.
சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இலங்கைக்கு 3.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள பாரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெற்றுக் கொடுக்கும் ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. சினோபெக் நிறுவனம் இலங்கையில் ஏற்கனவே எரிபொருள் விநியோகிப்பதற்கான அனுமதியைப் பெற்றிருக்கும் நிலையில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது இலங்கைக்குக் கிடைக்கக் கூடிய பாரியதொரு முதலீடாக அமையும்.
வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் கொண்டுவரும் நோக்கிலேயே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்ததாக கைத்தொழில் பேட்டையொன்று உருவாக்கப்பட்டது. இதில் முதலீடுகளைப் பெறுவதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும், பாரியளவில் வெற்றியளித்திருக்கவில்லை. இந்நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தினைத் தொடர்ந்து பாரிய முதலீடொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கும் அப்பால், பொருளாதார மேம்பாடு, கல்வி, ஊடகம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளை உள்ளடக்கிய 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு அரசாங்கங்களும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தங்கள் நீண்டகால நன்மைகளைத் தரும் என்றும், உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம், வறுமைக் குறைப்பு மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவதற்கும் இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் தெரிவித்திருந்ததுடன், இரு நாட்டு சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கான பரஸ்பர பயிற்சிகளை முன்னெடுப்பது உள்ளிட்ட பல விடயங்களுக்கும் இந்த விஜயத்தின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலீடு செய்வதில் சீன நிறுவனங்களை தாம் ஊக்குவிப்பதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. உயர்தர மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக தளவாடங்கள், பசுமை மேம்பாடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பினரும் இணங்கியிருப்பதாக இலங்கையும் சீனாவும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஊக்கத்தின் கீழ், சீனாவும் இலங்கையும் திட்டத்தின் ஒத்துழைப்பில் பலனளிக்கும் விளைவுகளை உருவாக்கியுள்ளன. ‘பெல்ட் அன்ட் ரோட்’ திட்டத்தினால் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியிலும் மக்களின் வாழ்வாதாரத்திலும் ஆற்றும் முக்கிய பங்கினை இலங்கை அரசாங்கம் பாராட்டியிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள்:
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயம் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற இந்திய விஜயம் என்பன அரசாங்கத்தின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்த தெளிவான நிலைப்பாட்டைப் பறைசாற்றுவதாக அமைகின்றன. ஒரு தீவு நாடாக, இலங்கை அணிசேரா வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலம் சர்வதேச அரங்கில் உயர்ந்த நிலையை அடையும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று ஜனாதிபதி அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதும் இந்த அண்மைய விஜயங்களின் ஊடாக வெளிப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்கள் இருக்காது என கடந்த தேர்தல் காலங்களில் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்திருந்த போதும், ஜனாதிபதியின் அண்மைய இரு வெளிநாட்டு விஜயங்களும் அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளன.
இலங்கையின் புவிசார் அமைவிடம் மற்றும் பூகோள அரசியல் ஆகியவற்றை சரியாகப் புரிந்துகொண்டு உலக நாடுகளுடன் நட்புறவுகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் உரிய பாதையில் செல்கின்றது என்பதை இந்த விஜயங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.