Home » மலையக மக்களுக்கான காணி உரிமை விரைவில்

மலையக மக்களுக்கான காணி உரிமை விரைவில்

அவர்கள் அச்சப்படத் தேவையில்லை

by Damith Pushpika
January 19, 2025 6:43 am 0 comment

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான முன்மொழிவுகள் முன்வைத்து, அம் மக்களுக்கு தற்போது வழங்கப்படும் நாட் சம்பளத்தை மாதச் சம்பளமாக மாற்றி வழங்குதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நேர்காணலின் முழு விபரம் வருமாறு:

கேள்வி: பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமையை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் நீங்கள் கூறியதுண்டு. அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விபரிக்க முடியுமா?

பதில்: மலையக மக்களின் முதலாவது பிரச்சினையாக காணி உரிமைப் பிரச்சினையே காணப்படுகின்றது. பெருந்தோட்ட பகுதிகளுக்கு இந்திய வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் காணிகள் இன்னும் ஒதுக்கப்படாமலுள்ளது. இந்நிலையில் இந்த காணிகளை எவ்வாறு ஒதுக்குவது என்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். அதாவது, மக்களின் பாவனைக்கு உதகந்தவாறு, போக்குவரத்து, பாடசாலை, வைத்தியசாலை மற்றும் நகரத்துக்கு அண்மையில் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். சில தோட்டங்களில், பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத, நீர் அற்ற, தூரப் பகுதிகளில் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக நாம் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளோம். அத்துடன் அனைத்து தோட்டங்களிலும் மக்கள் வாழ்வதற்கு வசதியான நிலப்பரப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம். இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு மாத காலத்தில் அவ்வாறான காணிகளை இனங்கண்டு வீட்டுத் திட்டத்தை அமைத்துக்கொடுக்க அல்லது காணிகளை உரியவர்களிடம் கையளிக்க தேவையான ஆய்வுகளை முன்னெடுத்துள்ளோம். எத்தனை பேர்ச்சஸ் காணி வழங்கப்படவேண்டும் என்ற அளவுத்திட்டம் இன்னமும் தீர்மானிக்கவில்லை. எனினும், மிக விரைவில் மக்களுக்கு தேவையான காணிகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை ஆரம்பிப்போம்.

கேள்வி: தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்ததல்லவா? அவற்றை நிறைவேற்றக் கூடியதாக இருக்கின்றதா? அல்லது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக நீங்கள் எதனை நினைக்கின்றீர்கள்?

பதில்: தேசிய மக்கள் சக்தியை பொறுத்த வரையில் மக்களுக்கு தேவையான வாக்குறுதிகளையே வழங்கியிருந்தோம். நாம் மெஜிக்காரர்கள் கிடையாது. எதனையும் உடனடியாக மாற்ற முடியாது. வழங்கிய வாக்குறுதிகள் கட்டங்கட்டமாக நிறைவேற்றப்படும். பாதளத்திற்குள் விழுந்திருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றுள்ளோம். கடன்சுமை, பொருளாதாரச் சிக்கல் போன்ற பல்வேறுப்பட்ட பிரச்சினைகளிலிருந்த நாட்டையே நாம் பொறுபேற்றோம். எதனையும் உடனடியாக மாற்ற முடியாது. இதற்கு குறிப்பிட்ட காலம் தேவை. ஐ.எம்.எப் பிடம் நாடு கடன் பெற்றுள்ளது. அவர்களின் நிபந்தனைகளை மீறி எம்மால் செயற்படமுடியாது. அதேவேளை மக்களுக்கான அபிவிருத்திகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும். மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களை நிறுத்த முடியாது. அதனைத் தொடர்ந்து செயற்படுத்த வேண்டும். இந்நிலையிலேயே நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கட்டங்கட்டமாக நிறைவேற்றுவோம் என்பது உறுதி. இதிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. மக்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின்போதுகூட, நாட்டில் முன்னெடுக்கக்கூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக கடன் வழங்குவதற்கு சீனா அரசாங்கம் பல்வேறு ஒப்புதல்களை வழங்கியுள்ளது. மிக விரைவில் அதற்கான செயற்றிடங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.

கேள்வி: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கீழ் உதித்த ” கிளின் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் மலையகத்தில் எந்த நிலையிலுள்ளது என்பது தொடர்பாக கவனம் செலுத்தினீர்களா?

பதில்: கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அதில், நாட்டின் சட்ட ஒழுங்கு, நிர்வாக சீர்கேடு மற்றும் அரச ஊழியர்களின் முறையான வேலைத்திட்டம் போன்றவற்றை முதலாவதாகவும், இரண்டாவதாக சிந்தனை ரீதியாகவும் பார்க்க வேண்டும். க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் என்பது வெறுமனே குற்றங்களை மட்டும் கண்டறிவதையும் தாண்டி, சட்டத்தை கடைப்பிடித்தல், ஒழுக்கத்துடன் செயற்படுதல் என்பதை வலியுறுத்துகின்றது. உதாரணமாக, இன்று போக்குவரத்து பொலிஸாருக்கு அஞ்சியே தலைக் கவசம் அணிகின்றோமே தவிர நமது பாதுக்காப்பை பற்றி சிந்தித்து செயற்படுவதில்லை. பாதசாரிக் கடவையை கடக்கும் அநேகமானவர்கள் தொலைபேசியில் கதைத்துக்கொண்டு செல்கின்றார்கள். இவ்வாறான சம்பவங்கள் அதிகளவிலான வீதி விபத்துக்கள் சம்பவிக்க காரணமாக அமைகின்றன.

எனவே, சட்டத்தை முறையாக பின்பற்றுகின்ற ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும். மலையகத்தை பொறுத்தவரையில் அம்மக்கள் அரச நிறுவனங்களுக்குச் சென்று ஒரு சேவையை பெற்றுக்கொள்ள பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள். அதில் பிரதானமாக மொழியை கூறலாம். தமது சொந்த மொழியில் அரச சேவையினை பெற்றுக்கொள்ள இயலாமலுள்ளது. இதற்கு கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினூடாக தீர்வு கிடைக்கும். அடுத்ததாக தோட்ட மக்களிடையே நிலவும் சுகாதார பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்கவுள்ளோம். கிளின் ஸ்ரீலங்காவினூடாக நாடளாவிய ரீதியில் பாரிய மாற்றமொன்று கொண்டுவரப்படும்.

கேள்வி: ஊழல் ஒழிக்கப்படும் என்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான எண்ணக்கருவாக ஒலித்தது. இந்த ஊழல் என்ற விடயத்தில் மேல் அல்லது உயர் அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும் அடிமட்ட கிளைகளை அகற்ற முடியும் என நினைக்கின்றீர்களா?

பதில்: நிச்சயமாக. இவ்வளவு காலம் ஊழலுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தமையினால், ஊழல்களும் அதிரித்து காணப்பட்டன. தற்போது நாம் அந்த வாய்ப்பை முழுமையாக இல்லாதொழிக்கவுள்ளோம்.

உழல் சம்பவங்கள் இரண்டு வகையாக இடம்பெறுகின்றன. அதாவது, அரச நிறுவனங்களில் கட்டுமான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும்போது அதில் அதிகளவிலான ஊழல்கள் இடம்பெறுகின்றன. இதற்குக் காரணம் சரியான காண்காணிப்பு மற்றும் விலைமனுக்கோரல் இன்மையாகும். அடுத்ததாக அரச ஊழியர்களுக்கு தேவைக்கேற்றவாறான சம்பள அதிகரிப்பு இன்மையால், தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இலஞ்ச ஊழல் பெற முயற்சிக்கின்றனர். இதனால் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்கும்போது இலஞ்ச ஊழல் செயற்பாடுகளிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் இலஞ்ச ஊழல் செயற்பாடுகளில் ஈடுட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவர்களை மிக விரைவில் சட்டத்துக்குமுன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.

கேள்வி: மலையக வாழ் மக்களின், குறிப்பாக தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மக்களுக்காகவும் அவர்களின் பிள்ளைகளுக்காகவும் கிடைக்க வேண்டிய சலுகைகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா?

பதில்: ஆம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டத்தை பொறுத்தவரையில் கடந்தகால அரசாங்கத்தின் தெரிவுகளில் பிழைகள் காணப்படுகின்றன. அதனை நிவர்த்தி செய்யும் முகமாக தோட்டப்புறங்களில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களை கண்டறிந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அத்துடன், மலையக மாணவர்களுக்கு கல்விக்காக வருடமொன்றுக்கு 6000 ரூபாவை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றையும் ஆரம்பித்துள்ளோம்.

ஏற்கனவே அஸ்வெசும நலன்புரி உதவியை பெற்றுவரும் குடும்பங்களிலுள்ள மாணவர்களும் இத் திட்டத்தினூடாக பயன்பெறுவார்கள். குறிப்பாக மலையத்தில் 300க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளின் மாணவர்களும் இத்திட்டத்தினூடாக நன்மையடைவார்கள்.

கேள்வி: ஆனால், அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தேவையானவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றனவே?

பதில்: அது உண்மை. கடந்தகால அரசாங்கத்தினால் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான வேலைத்திட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை. அதற்காகவே நாம் புதிய விண்ணப்பங்களை கோரியுள்ளோம். தற்போது இந்த உதவியை பெற்றுவரும் பயனாளர்களை உடனடியாக நிறுத்தவிட முடியாது. இதில் பாதிக்கப்பட்டவர்களையும் கைவிடமுடியாது. ஆகவேதான், புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள பயனாளர்களுக்கு உரிய முறையில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க நாம் ஏற்பாடுசெய்துள்ளோம்.

கேள்வி: தோட்டபுற பாடசாலைகளில் மாணவர்களின் இடைவிலகல் மற்றும் தேவையான வயதில் முறையான கல்வியை பெற்றுக்கொள்ளாமை போன்றவை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இது குறித்து என்ன நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன?

பதில்: விசேடமாக இந்த விடயம் தொடர்பாக பெண்கள் விவகார அமைச்சருடன் நாம் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளோம். மலையக மாணவர்கள் இன்று கல்வியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளமைக்கான காரணம் வறுமையாகும். எனவே, அம் மாணவர்கள் பாடசாலை செல்லாமைக்கான காரணம் என்ன, எதற்காக இடைவிலகுகின்றார்கள் போன்ற காரணங்களை கண்டறிந்து அதற்கான விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.

கேள்வி: முந்தைய அரசாங்கத்தினால் தோட்டத் தொழிலார்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு போதாதெனவும் குறைந்த அடிப்படைச் சம்பளமாக 2000 ரூபாவாவது வழங்கப்பட வேண்டுமெனவும் உங்களின் தொழிற்சங்கமே வலியுறுத்தியிருந்தது. இந்த சம்பள அதிகரிப்பு விடயமாக அரசாங்கம் ஏதேனும் கவனம் செலுத்தியுள்ளதா?

பதில்: நிச்சயமாக. தோட்டதொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டுமென போராட்டம் நடத்தி, அம் மக்களுக்காக தோள் கொடுத்த இயக்கமாக நாம் உள்ளோம். எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான முன்மொழிவை நாம் முன்வைத்துள்ளோம்.

அதன்படி, அவர்களுக்கு வழங்கப்படும் நாட் சம்பளத்தை மாதச் சம்பளமாக எதிர்வரும் காலத்தில் வழங்குவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளோம்.

கேள்வி: ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாக பேசப்பட்டதல்லவா? இதற்குள் மலையகமும் உள்வாங்கப்படுகின்றதா?

பதில்: நிச்சயமாக. இந்திய வீட்டுத்திட்டனூடாக அதிகூடிய பயன்பெறுவது மலையக மக்களே.

கேள்வி: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயம் தொடர்பாக நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: இலங்கையுடன் நட்புடன் பழகும் ஒரு நாடாக சீனா விளங்குகின்றது. அதுமட்டுமல்லாமல் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்படுகின்றது. அந்த உறவின் காரணமாக அதிகூடிய கடன் திட்டங்களான மக்கள் நலன் திட்டங்களை சீன அரசு வழங்கியுள்ளது. மிக விரைவில் நாட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் சீன அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும். மேலும், எண்ணைய் சுத்திகரிப்பு நிலையத்துக்காக 3.7 பில்லியன் ரூபா நிதியுதவியை சீனா வழங்கியுள்ளது. இதுவரை காலத்திலும் சீனா நாட்டுக்கு வழங்கிய மிகப்பெரிய கடன் தொகையாக இது பார்க்கப்படுகின்றது. எனவே, இதனூடாக நாடு பாரிய வளர்ச்சியை சந்திக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நேர்காணல் : காயத்ரி சுரேஷ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division