சஞ்சிகையின் பெயர்: இனிய நந்தவனம் 28 வது ஆண்டு சிறப்பு மலர்சஞ்சிகை ஆசிரியர்: நந்தவனம் சந்திரசேகரன் வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்
தபால் பெட்டி எண் 214, நம்பர் 17,
பாய்க்காரத் தெரு தெரு உறையூர்,
திருச்சி – 620 003,
தமிழ்நாடு.
விலை: 200.00
‘எப்போதும் எல்லாக் கதவுகளும் அடைத்துக் கொள்வதில்லை. எங்காவது ஒன்று நமக்காகத் திறந்தே இருக்கும் என்ற நம்பிக்கையே எல்லா தருணங்களிலும் முன்னகர்த்தி செல்கிறது. இன்று யார் புத்தகம் வாசிக்கிறார்கள்? எல்லாம் எண்ணிம மயமாகி விட்டதே என்று சிலர் அச்சு ஊடகங்களின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் அடிப்படையான ஆதாரங்கள் புத்தகங்களில் தான் இருக்கின்றன என்பதையும் அவர்கள் நம்ப வேண்டும்’.
இவ்வாறு சஞ்சிகையின் ஆசிரியர் நந்தனவனம் சந்திரசேகரன் இம்மலருக்கு ‘தமிழர்கள் அடையாளத்தை இழக்கக்கூடாது’ என்ற தலைப்பில் எழுதியுள்ள ஆசிரியர் தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில் எத்தகைய நம்பிக்கையுடன் இச்சஞ்சிகையை 28 வருடங்களாக சஞ்சிகை ஆசிரியர் வெளியிட்டு வருகிறார் என்பதை இந்த வசனங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆசிரியர் சந்திரசேகரன் குறிப்பிடுவது போன்று எல்லாம் எண்ம மயமானாலும் அடிப்படையான ஆதாரங்கள் புத்தகங்களில் தான் இருக்கின்றன என்பதை மறந்து விடலாகாது.
அழகான முறையில் வடிவமைக்கப்பட்ட அட்டைப் படத்தைத் தாங்கி வெளியாகியுள்ள இச்சஞ்சிகை விஷேட வாழ்த்து செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்ற பல அம்சங்களையும் தன்னகத்தே தாங்கி 200 பக்கங்களில் வெளியாகி இருக்கிறது.
குறிப்பாக இச்சஞ்சிகைக்கு தினகரன்- வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர், புரவலர் ஹாசிம் உமர், உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டொக்டர் வி.ஜி. சந்தோஷம், தமிழக முன்னாள் அமைச்சர் ந. நல்லுசாமி, ஐரோப்பிய தமிழ் வானொலி நிர்வாகப் பணிப்பாளர் தர்மலிங்கம் இரவீந்திரன் ஆகியோர் விசேட வாழ்த்து செய்திகளை வழங்கியுள்ளனர்.
இச்சஞ்சிகை பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
அவற்றில் தமிழகப் படைப்பாளிகளின் ஆக்கங்களை மாத்திரமல்லாமல் கனடா, மலேசியா, இலங்கை, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் உள்ள தமிழ் பேசும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை உள்ளடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மர்லின் மரிக்கார்