கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் கடந்த (11) பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் வெளியாகிய நிலையில் இந்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கறுப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.
உடனடியாக பயந்துபோன மற்றொரு மாணவி அங்கிருந்து தப்பி ஓடியதுடன், கடத்தப்பட்ட மாணவியை காப்பாற்றுவதற்கு இளைஞர் ஒருவர் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த வேளையிலிருந்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த வாகனம் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
கடத்தலில் ஈடுபட்ட நபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என்பதும், குறித்த நபரே வாகனத்தை வாடகைக்கு பெற்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதேவேளை கண்டி கெலிஓயா பிரதேசத்தில் பாத்திமா ஹமிரா என்ற 18 வயது பாடசாலை மாணவியை கடத்தி 50 இலட்சம் கப்பம் கோரியதாக கூறப்பட்ட 31 வயதுடைய மொஹமட் நாசர் என்ற சந்தேகநபர் பாடசாலை மாணவியுடன் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதியன்று காலை, அம்பாறையில் இருந்து கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை செய்தனர்.
இச்சம்பவத்திற்கு முதல் நாள் (12) அம்பாறை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல் வெளியாகின.
கடத்தப்பட்ட பாடசாலை மாணவியும், கடத்திய சந்தேக நபரும் கடந்த (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகளினால் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் சந்தேக நபரும் மாணவியும் (14) கம்பளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.
கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.
மாணவியை கடத்திய சந்தேக நபரான மொஹமட் நாசர், கடத்தியமைக்கான உண்மையான காரணத்தை குறிப்பிடும்போது. தனது தாயின் தம்பியின் மகளையே இவ்வாறு அழைத்து வந்ததாக குறிப்பிட்டார். அத்துடன், தான் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஜப்பானில் பணிபுரிந்ததாகவும் தான் ஜப்பானில் உழைத்த பணத்தை தனது மாமாவிடம் கொடுத்ததாகவும் கொடுத்த பணத்தை தராததால்தான் அவரது மகளைக் கடத்தியதாகவும் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை பொலிஸாரிடமும் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவிக்கையில்,
எனது மகளுக்கும் மருமகனுக்கும் காதல் தொடர்பு இருக்கவில்லை. ஐந்து நாட்களாக திட்டம் தீட்டப்பட்டுத்தான் எனது மகளை கடத்தினார்கள். தனது மகளைக் கடத்தியவர் தனது மருமகன்தான்.
எனினும் ஏனைய இருவரைப்பற்றி தனக்குத் தெரியாது எனவும் கடத்தப்பட்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற தினம், வீதியால் சென்று கொண்டிருந்த 25 வயது இளைஞனின் கடத்தலை முறியடிக்கும் துணிகரமான பணியை பொலிசார் பாராட்டியுள்ளனர்.
எஸ்.அஷ்ரப்கான்