Home » சட்டவிரோத சொகுசு வாகன இறக்குமதி; விசாரணையில் வெளியான உண்மைகள்

சட்டவிரோத சொகுசு வாகன இறக்குமதி; விசாரணையில் வெளியான உண்மைகள்

by Damith Pushpika
January 5, 2025 6:12 am 0 comment

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரும் வாகன உதிரிப்பாகங்களை பொறுத்தி அந்த வாகனங்களை திருட்டுத்தனமாக பதிவுசெய்து விற்பனை செய்யும் மோசடி சம்பவங்கள் சில காலமாவே நாட்டில் இடம்பெற்று வருகின்றது.

சட்டவிரோதமான வழிகள் ஊடாக நாட்டுக்கள் வரும் பெரும்பாலான வாகனங்கள் வீதிகளில் பயணிப்பது பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களின் பதிவு இலக்கங்களுடனாகும். அவற்றுள் விபத்துக்களில் சிக்கிய பின்னர் காப்புறுதி நிறுவனங்களினால் பாவனைக்கு உகந்த வாகனம் அல்ல என ஒதுக்கப்பட்ட வாகனங்களின் இலக்கங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட அரசாங்க வாகனங்களின் இலக்கங்களும் கூட உள்ளன.

இவையனைத்தும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழல் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே இடம்பெற்றுவருகின்றது. இந்த மோசடியில் முக்கிய தரப்பினராக இவர்கள் செயற்படுகின்றனர். இவர்கள் மூலமாகவே பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களின் செஸி, என்ஜின் எண்கள் மோசடிக்காரர்களுக்கு கிடைக்கின்றன. தற்போதும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகின்றன.

இதற்கு வழி வகுத்திருப்பது பாணந்துறை வலான மத்திய மோசடி தடுப்பு பிரிவினரால் சில காலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட விசாரணையின்போது தெரியவந்த தகவலாகும்.

இதுவரையான வரலாற்றில் தனி ஒரு பொலிஸ் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக அதிகளவான திருட்டு வாகனங்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருப்பின் அது வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவின் ஊடாக மாத்திரமேயாகும். ஏனென்றால், குறித்த கடத்தல்காரர்களுக்கு இந்த வலான மத்திய மோசடி தடுப்பு அதிகாரிகளை தங்கள் சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்வதற்கு ஒருபோதும் முடியாதுபோயுள்ளது. அதன் காரணமாகவே கடந்த காலங்கள் முழுவதும் வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவினரால் பிடிபட்ட திருட்டு வாகனங்களின் எண்ணிக்கை 100ஐ அண்மித்துள்ளது. அதில் பெரும்பாலான வாகனங்கள் விலை உயர்ந்த சொகுசு வாகனங்கள் என்பது முக்கிய அம்சமாகும்.

இதற்கு பிரதானமாக இருப்பது வலான மத்திய மோசடி தடுப்பு பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.உதய குமார மற்றும் அதன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்க ஆகிய அதிகாரிகளாகும்.

வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய உதய குமார மற்றும் அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்க ஆகியோர் இந்த மோசடியின் பின்னணியிலுள்ள மூளையாக செயற்பட்டவர்கள் பற்றிய தகவல்களைக் கண்டறியும் பொறுப்பை அன்று ஒப்படைத்திருந்தது வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவரான பொலிஸ் சார்ஜன்ட் ஜயலாலிடமாகும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் கடமையினைத் தன் உயிரை பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் செயற்படுத்தும் அதிகாரியான ஜயலால், பல மாதங்களாக மேற்கொண்ட நீண்ட விசாரணைகளுக்கு பின்னர், இந்த மோசடி தொடர்பாக பல தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். அந்த தகவல்களுக்கமைய இந்த மோசடியினை முன்னெடுக்கும் மூளைசாலிகள் இருவர் உள்ளனர். ஒருவர் கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்டவர். மற்றையவர் கடவத்த பஹல கரகஹமுதுனேவைச் சேர்ந்தவராகும்.

இவர்கள் இருவருக்கும் சுங்கத்துறை மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் தொடர்புகள் இருப்பதை ஜயலால் கண்டறிந்தார்.

ஜயலால் வழங்கிய தகவல்களுக்கமைய இந்த மோசடிகளில் மூளையாகச் செயற்பட்ட இருவரில் முதலில் கைது செய்யப்பட்டவர் கம்பஹாவைச் சேர்ந்தவராகும். உடல்நலக்குறைவு காரணமாக மோசமான நிலையில் இருந்த அவரிடமிருந்து மேலதிகத் தகவல்கள் எதனையும் அன்று பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம் ஒரு வரம்புக்குட்பட்டு அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததனாலாகும்.

எனவே, அதிகாரிகள் இருவரில் மற்றையவர் மீது கவனத்தைச் செலுத்தினர். அதன்படி, நாட்டுக்குள் திருட்டுத்தனமாகக் கொண்டுவரப்பட்ட வாகனம் ஒன்றுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

வலான மத்திய மோசடி ஒழிப்புப் படைப்பிரிவானது பொலிஸ்மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் செயற்படுவதால், இங்கு பணிபுரியும் அதிகாரிகள் மீது அதிக அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு எவருக்கும் இடமில்லை. அதனால் தான் சில காலம் சுதந்திரமாக தனது மோசடியை நடத்தி வந்த ஆரியரத்ன எனபவர் தற்போது கையும் களவுமாகச் சிக்கியுள்ளார்.

இந்த மோசடி குறித்து மத்திய மோசடி தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் ஆரியரத்னவிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைகள் ஏற்கனவே மேற்கொண்டு பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக் கொண்டே முன்னெடுக்கப்பட்டன. எனவே, வலான மத்திய மோசடித் தடுப்பு பிரிவின் அதிகாரிகளைக் கடந்து நுழைந்து செல்வதற்கு ஆரியரத்னவுக்கு இடம்கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே ஆரியரத்னவின் வாயினால் பல விடயங்களை வெளியில் எடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதன்பிரகாரம், இந்த வாகனக் கடத்தல் மோசடிகள் பல வழிகளில் நடைபெறுகிறது. இலங்கைக்குள் சட்டவிரோதமாக கடத்தப்படும் சொகுசு வாகனங்களை கன்டெய்னர்களுக்குள் மறைத்து கொண்டு வந்து அவற்றுக்குப் போலி ஆவணங்களைத் தயாரித்து பதிவு எண்களை வழங்கி சட்டப்பூர்வ வாகனமாக மாற்றுவது அதில் ஒரு முறையாகும்.

அதேபோன்று, திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களுக்கு பணம் செலுத்த முடியாத வாகனங்களுக்கு வேறு எண்களுக்கு மாற்றுவது இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாகும். இவையனைத்தும் இடம்பெறுவது மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தில் பணிபுரியும் சில ஊழல் அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடனாகும். இவ்வாறான எந்த முறையிலான வாகனங்களாக இருந்தாலும் வழங்கப்படுவது பழைய வாகனங்களின் இலக்கமே தவிர புதிய பதிவு இலக்கங்கள் அல்ல. அவ்வாறான வாகன இலக்கங்கள் வேண்டியளவில் இந்த மோசடிக்காரர்களிடம் உள்ளன. அவ்வாறான அனைத்து வாகனங்களும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட காப்புறுதி நிறுவனங்கள் மூலம் அல்லது அரச நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்களிலிருந்து கைவிடப்பட்ட வாகனங்களாகும்.

சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் வாகனங்களுக்கான பதிவு இலக்கங்கள் இவ்வாறான பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களிலிருந்தே வழங்கப்படுகின்றன. டிரக்டரின் இலக்கங்கள் கூட இவ்வாறு மொன்டிரோ வாகனங்களுக்கு வழங்கப்படுவது மோட்டார் வாகனத் திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்பில் வாகன இலக்கத்துக்குள்ள வாகன வகைகளில் டிரக்டர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக மொன்டிரோ வாகனமாக மாற்றப்பட்டேயாகும்.

அதேபோன்று வாகன உரிமையாளரின் விபரங்களும் அங்கு மாற்றம் செய்யப்படுகின்றன. ஆரியரத்னவிடமிருந்து மீட்கப்பட்டதும் அவ்வாறான 430 வாகனங்களின் பட்டியலாகும். இந்த தொகையை விட இரண்டு மூன்று மடங்கு ஆரியரத்னவினால் இவ்வாறு திருட்டு வழியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது வாயிலிருந்தே அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

அரசுக்கு பெருமளவு வரி வருவாயை இழக்கச் செய்துள்ள இந்த மோசடியில் மோட்டார் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திலுள்ள ஊழல்வாதிகளையும் கைதுசெய்து அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என முடிவு செய்த மத்திய மோசடி எதிர்ப்புப் பிரிவின் அதிகாரிகள், அதற்குச் சிறந்த வழி முறைகேடாக பதிவு செய்யப்பட்ட 430 வாகனங்கள் தொடர்பான எண்களுடன் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானித்தனர்.

அதற்காக, மஹர நீதவான் நீதமன்றத்தின் உத்தரவையும் பெற்றுக் கொண்ட மத்திய மோசடி தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், அந்த வாகன எண்கள் தொடர்பான ஒவ்வொரு விபரங்களையும் மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்கள தரவு அமைப்பிலிருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொண்டனர்.

அந்த வாகனங்களின் தற்போதைய உரிமையாளர்களின் பல முகவரிகள் போலியானவை. எனவே, மோட்டார் வாகனத் திணைக்களத்தின் தரவுகளை மட்டும் வைத்து விசாரணை நடத்துவதில் பலனில்லை என மத்திய மோசடி தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கருதினர்.

அதன்படி, சந்தேகத்துக்கு இடமான 430 வாகனங்கள் தொடர்பான பதிவு எண்களின் உரிமையாளர்களை காப்புறுதி நிறுவனங்கள் மூலம் அடையாளம் காண விசாரணை அதிகாரிகள் முடிவு செய்தனர். வாகனத்தின் உரிமையாளர்களின் தரவுகள் வாகனங்களைக் காப்புறுதி செய்யும்போது சேர்க்கப்படுவதால், அதனூடாக வாகனத்தின் தற்போதைய உரிமையாளர்களை அடையாளம் காண்பதே விசாரணை அதிகாரிகளின் நோக்கமாக இருந்தது. இலங்கையில் வாகனக் காப்புறுதியில் ஈடுபட்டுள்ள 14 காப்புறுதி நிறுவனங்களுக்கு இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் மஹர நீதிமன்றத்தின் உத்தரவினைப் பெற்றுக் கொள்வதற்கும் மத்திய மோசடித் தடுப்பு பிரிவினர் அன்று நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் மூலமேகவே, அந்த 430 வாகனப் பட்டியலிலுள்ள ஒரு வாகனத்தைப் அப்போது பயன்படுத்தும் உரிமையாளரை மத்திய மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

அந்நபர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராகும். சந்தேகநபர் தொடர்பான தகவல்களைத் தேடியபோது அவர் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள ஆவணக் களஞ்சியத்தில் பணியாற்றும் ஒரு எழுதுவிளைஞர் என்பது தெரிய வந்துள்ளது. ஆரியரத்னவுக்கும் இந்நபருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதை அப்போது விசாரணை அதிகாரிகள் அறிந்து கொண்டனர்.

இந்த எழுதுவிளைஞரின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்ததில், அவர் ஒரு கறுப்பு பாத்திரம் அல்ல, இராணுவத்தின் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களைக் கொள்வனவு செய்து உதிரிப்பாகங்களைப் பொருத்திய சொகுசு வாகனங்களுக்கு அந்த பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களின் இலக்கங்களை உள்ளீடு செய்து பதிவு செய்யும் பாரியளவிலான மோசடி தொடர்பாக 2010 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதும் கூட மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புறத்திலிருந்து பெரும் ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினுள் இடம்பெறும் மோசடிகளை நாட்டுக்குத் தெரியப்படுத்துமாறு கோரி அந்நபர் கட்டுரையாளருக்கும் கூட அவரே தகவல்களை வழங்கியிருந்தார். இறுதியில் அவரும் இவ்வாறான மோடிகளோடு தொடர்புபட்டிருப்பது முக்கிய அம்சமாகும்.

என்றாலும் வலான மத்திய மோசடி பிரிவினரால் அப்போது பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. சில உயர் மட்ட அழுத்தம் காரணமாக இந்த விசாரணைகளை அப்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவினால் வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவினரிடம் இருந்து மீட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவ்வாறான விசாரணைகளுக்கு சிறந்த வசதிகளைக் கொண்டுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த வலையமைப்புடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் பட்டியலிலுள்ள வாகனங்களையும் கண்டுபிடிக்கும் எனக் கூறியே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division