நாட்டை அடுத்த சில வருடங்களில், புதிய திசையில் கொண்டு செல்வதற்கு மூன்று பிரதான வேலைத் திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
‘Clean Sri Lanka’, ‘டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்’ மற்றும் ‘கிராம வறுமை ஒழிப்புத் திட்டம்’ ஆகியவை அதன் கீழ் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார். பொருளாதாரம், சமூகம், அரசியல் மற்றும் கலாசாரமென அனைத்து அம்சங்களிலும் இலங்கையை புத்துயிர் பெறும் வகையில் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இது ஒரு அமைச்சினால் நிர்வகிக்கப்படக்கூடிய செயற்பாடல்ல. ஜனாதிபதியின் முயற்சியின் கீழ், பல அமைச்சுகள் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு விரிவான வேலைத்திட்டமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, ‘Clean Sri Lanka என்பது, சுற்றாடல், சமூகம், நெறிமுறைகள் போன்றவற்றில் நாட்டை உயர் மட்டத்துக்கு உயர்த்துவதற்கு விஞ்ஞான ரீதியாக தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டமெனவும், திட்டத்தை செயல்படுத்த நாட்டின் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.