புத்தாண்டு உதயமாவதற்கு இன்னும் இரு நாட்களே உள்ளன. 2024 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து, 2025 ஆம் ஆண்டினுள் பிரவேசிப்பதற்கு நாம் தயாராகியுள்ளோம். புத்தாண்டு எதிர்வரும் புதனன்று பிறக்கின்றது.
இலங்கை மக்களுக்கு கடந்த சுமார் ஐந்து வருட காலப்பகுதி பெரும் இடர்கள் நிறைந்ததாகும். பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக மக்கள் நிம்மதி இழந்திருந்தனர்.
முதலில் உலகப் பெருந்தொற்றான கொவிட் தாக்கத்துக்கு மக்கள் முகம்கொடுத்தனர். நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறைகளும் முடங்கின, உள்ளூர் உற்பத்தித்துறை ஸ்தம்பித்தது, கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் மக்களைப் பராமரிப்பதற்காகவும் அரசாங்கம் பெருந்தொகை நிதியைச் செலவிட வேண்டியிருந்தது.
கொவிட் தொற்று படிப்படியாக நீங்கத் தொடங்கியதும், நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தது. எரிபொருள், சமையல்வாயு உட்பட அனைத்துப் பொருட்களுக்கான பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் காரணமாக முழு இலங்கைத் தேசமே முடங்கிப் போனது.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாத மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். மக்கள் எழுச்சியைச் சமாளிக்க முடியாமல் போனதால், அன்றைய ஆட்சியாளர்கள் விலகியோட வேண்டியிருந்தது.
அன்றைய அரசியல் கொந்தளிப்புகள் ஓய்வதற்கிடையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை அவரால் ஓரளவு தீர்க்க முடிந்ததாயினும், அது தற்காலிகமானதென்பது புரிந்தது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்திய போதிலும், வீண்விரயங்களைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டாரென்ற குற்றச்சாட்டைத் தவிர்க்க இயலவில்லை. அதுமாத்திரமன்றி, முன்னைய ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஊழல் மோசடிகளைக் கண்டுபிடிப்பதில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசு அலட்சியமாகவே இருந்தது.
நாட்டில் இடம்பெற்று வந்த ஊழல் மோசடிகள் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிருப்தியும், ஆத்திரமும் இன்றும் நிலவி வருகின்றன. அரச வளங்களை முன்னைய ஆட்சியாளர்கள் அபகரித்துள்ளனரென்பதுதான் மக்களின் குற்றச்சாட்டாகும். மக்களின் இந்த ஆதங்கமே தேசிய மக்கள் சக்தியை ஆட்சிபீடத்தில் அமர்த்துவதற்குக் காரணமாகவும் அமைந்தது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் முதலாவது புத்தாண்டை நாட்டு மக்கள் சந்திக்கப் போகின்றனர். ஊழல், மோசடி, முறைகேடுகள், வீண்விரயம் போன்றன இன்றைய அரசாங்கத்தில் முற்றாகவே இல்லையென்பதை அனைவருமே ஒப்புக் கொள்வர்.
எனினும் பொருளாதாரத்தில் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்த நாட்டை மீண்டும் முன்னைய நிலைமைக்குக் கட்டியெழுப்புவதென்பது இலகுவான காரியமல்ல. அம்முயற்சி கைகூடுவதற்கு சில காலம் தேவையென்றே பொருளாதார நிபுணர்களும் கூறுகின்றனர்.
எமது நாடு இத்தனை மோசமான நிலைமைக்குச் செல்வதற்கு கடந்தகால ஆட்சியாளர்களின் சுயநல செயற்பாடுகளே காரணமென்பதுதான் பொதுவான கருத்து.
ஊழல் மோசடியற்ற இன்றைய அரசின் பொருளாதாரத் திட்டங்கள் காரணமாக எமது நாடு விரைவில் மீண்டெழ வேண்டுமென்பதே புத்தாண்டு பிறக்கவிருக்கும் இவ்வேளையில் மக்களின் நம்பிக்கையாகும்.