சிரியாவின் பஷர் அல் அசாத்தின் ஆட்சி கடந்த 08 ஆம் திகதி (2024 டிசம்பர்) ஹயாத் அல் ஷாம் (ஷாம் விடுதலை அதிகாரசபை) படையினர் வசம் விழுந்தது. அவ்வாட்சி வீழ்ந்து விட்டதாக இப்படையினர் அறிவித்து சில மணித்தியாலயங்கள் கடந்து செல்லவில்லை. அதற்கிடையில் ரடார் கட்டமைப்புக்கள், ஆயுத களஞ்சியசாலைகள், விமானப்படைத்தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள் அடங்கலான சிரியாவின் இராணுவ ஆற்றலை தாக்கி அழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது இஸ்ரேல்.
08ஆம் திகதி ஆரம்பமாகி 48 மணித்தியாலயங்களில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல், 90 சதவீதமான சிரிய இராணுவ திறன்களை அழித்து விட்டதாகவும் அறிவித்தது.
சிரியாவின் ஆயுதங்கள் எதிர்காலத்தில் தமக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையில் இந்நடவடிக்கையை முன்னெடுப்பதாக இஸ்ரேல் கூறியது.
இவை இவ்வாறிருக்க, இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் கீழ் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கும் சிரியாவின் கோலான் குன்று பகுதிக்கும் அதனையொட்டிய சிரியப் பகுதிக்கும் இடைப்பட்ட ஐ.நா. கண்காணிப்பிலுள்ள யுத்த சூனியப் பிரதேசத்தையும் அதனை அண்மித்த ஜபல் அல் ஷெய்க் மலை என்கின்ற மௌண்ட் ஹெர்மான் மலைப்பகுதியையும் இதே காலப்பகுதிக்குள் இஸ்ரேல் தம்வசப்படுத்திக் கொண்டுள்ளது.
ஆட்சி விழுந்ததையடுத்து சிரியா மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராக துருக்கி, ஜோர்தான், கட்டார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சிரிய பகுதியில் இருந்து வெளியேறுமாறும் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன. தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி சிரியாவின் இறைமையை மதித்து செயற்படுமாறு ஐ.நா. வும் வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்நடவடிக்கை சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றுள்ளது ஜேர்மனி.
ஆனால் 08 ஆம் திகதி முதலான சில தினங்களுக்குள் இஸ்ரேல் சிரியாவில் மேற்கொள்ள வேண்டிய தாக்குதல்களையும் கையகப்படுத்தல்களையும் நிகழ்த்தி முடித்துவிட்டது. இவற்றைப் பற்றி சிரிய ஆட்சியை கைப்பற்றியுள்ள இடைக்கால அரசு கருத்தில் கொள்ளவில்லை. அவர்கள் அசாத்தின் பாத் ஆட்சியை வீழ்த்திய வெற்றிக்களிப்பில் மூழ்கி இருந்தனர்.
சிரியாவின் 90 சதவீத இராணுவ ஆற்றலை தகர்த்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்த பின்னர்தான், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற நடவடிக்கை எடுக்குமாறும் இடைக்கால அரசு புகார் அளித்தது.
இதே காலப்பகுதியில் ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் படையின் தளபதி அல் சாரா, தாம் இஸ்ரேலுடன் யுத்தத்தில் ஈடுபடவில்லை என்றும் தாக்குதல்களை நிறுத்துமாறும் ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு விலகுமாறும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இவற்றை இஸ்ரேல் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. இக்கோரிக்கைகள் விடுக்கப்பட்ட பின்னரும் தக்குதல்கள் நடத்தப்பட்டன. அத்தோடு ஆக்கிரமிக்கப்பட்ட யுத்த சூனிய பிரதேசத்திலும் ஜபல் அல் ஷெய்க் மலைப்பகுதியிலும் இஸ்ரேல் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவே செய்திருக்கிறது.
பஷரின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததோடு நாடெங்கிலும் பணியாற்றிய சிரிய படையினர் பின்வாங்கியது போன்று இம்மலையில் கடமையாற்றிய சிரிய வீரர்களும் பின்வாங்கினர். அதனைத் தொடர்ந்து இம்மலையையும் அதிலிருந்த சிரிய படையினர் பயன்படுத்திய இராணுவ தளத்தையும் கைப்பறியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஜபல் அல் ஷெய்க் மலை இஸ்ரேலுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் டெல்அவிவ் கூறியுள்ளது. அந்த வகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரைல் கார்ட்ஸ், முப்படைத்தளபதி ஹெரசி ஹலவி, சின்பெத் உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பின் தலைவர் ரெனென் பத், வடக்கு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஊரி கோர்டின் ஆகியோர் கடந்த 17 ஆம் திகதி இம்மலைப்பகுதிக்கு சென்று வந்துள்ளனர்.
அங்கு சென்றிருந்த இஸ்ரேலிய பிரதமர், ’53 ஆண்டுகளுக்கு முன்பு இதே மலையின் உச்சியில் நான் ஒரு சிப்பாயாக கடமையாற்றியுள்ளேன். சமீபத்திய நிகழ்வுகள் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு இம்மலையின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளன. அதனால் அடுத்தாண்டு (2025) இறுதி வரை இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் இம்மலைப்பகுதி இருக்கும்’ என்றுள்ளார்.
இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையில் 1974 இல் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை வீழ்ச்சியடைந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல், கோலான் குன்று பகுதியின் யுத்த சூனிய பிரதேசத்தையும் ஜபல் அல் ஷெய்க் மலையையும் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.
இந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறிவிட்டதாக அறவித்துள்ளதால், அடுத்த ஏற்பாடுகள் வரும் வரை இஸ்ரேலிய படைகள் இங்கு இருப்பது அவசியம் என இஸ்ரேல் கருதுகிறது. அதாவது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் வரை நாம் இங்கு இருப்போம் என்றுள்ளார் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்.
இந்த மலையின் மூலம் இஸ்ரேல் அருகில் இருந்தும் தூர இருந்தும் எதிர்கொள்ளக்கூடிய அச்சுறுத்தல்களை முன்கூட்டியே அடையாளம் காண முடியும் என்று குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர், குறிப்பாக மலையின் வலதுபுறமுள்ள லெபனானில் ஹிஸ்புல்லாவின் நிலைகளையும், இடதுபுறம் டமஸ்கஸையும் கண்காணிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
அதனால் இம்மலைப்பகுதியில் குளிர்காலத்தில் கடமையாற்றுவதற்கான கடுமையான நிலைமைகளுக்கு தயாராகுமாறும் அவர் இராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த ஜபல் அல் ஷெய்க் மலையையொட்டிய தென்மேற்கு சிரியாவில் உள்ள கோலன் குன்று பகுதியை 1967 போரில் இஸ்ரேல் கைப்பற்றி ஆக்கிரமித்தது. அந்தப் பகுதி 1981 இல் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.
ஜபல் அல் ஷெய்க் மலையானது கோலான் குன்று பகுதியில் இருந்து சிரியாவினுள் 10 கிலோ மீற்றர் (6 மைல்) துரத்திலும் டமஸ்கஸ்ஸில் இருந்து 35 கிலோ மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் உயரம் 2814 மீற்றர் (9232 அடிகள்) ஆகும். இம்மலையின் அடித்தளம் இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் உள்ளது.
இம்மலையை அண்டியுள்ள பிரதேசங்களில் கோலான் குன்று பகுதியில் வசிக்கும் ட்ரூஸ் மத சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். அந்த மக்கள் தாம் இஸ்ரேலுடன் வாழ விருப்பம் தெரிவித்திருக்கும் வகையிலான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளதாக டைம்ஸ் ஒப் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளதாக த டெலிகிராப் தெரிவித்துள்ளது.
சிரியாவின் தென்பகுதியில் 07 இலட்சம் ட்ரூஸ் மத சிறுபான்மையினர் உள்ளனர். சிரியாவின் மூன்றாவது பெரும்பான்மையினர் இவர்களாவர். அவர்களில் 02 இலட்சம் பேர் கோலான் குன்று பகுதியிலும் மேலும் ஒன்றரை இலட்சம் பேர் இஸ்ரேல் பகுதியிலும் வசிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் சிரியாவின் இராணுவ ஆற்றலை இலக்கு வைத்துள்ளதன் ஊடாக சிரியா உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தமக்கு நிகரான அல்லது தம்மை விட பலமான இராணுவ ஆற்றலை எந்தத் தரப்பினரும் கொண்டிருக்கக் கூடாது என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருப்பது தெளிவாகிறது என்று சர்வதேச இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவின் இராணுவ ஆற்றல்களை தகர்க்கவென இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதல்களை நோக்கும் போது கிட்டிய எதிர்காலத்தில் அந்நாட்டின் இராணுவ ஆற்றல்களைக் கட்டியெழுப்ப முடியாது. அதற்கென பத்து இருபது வருடங்கள் கூட செல்ல முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம் ஜபல் அல் ஷெய்க் மலைப்பகுதியில் 2025 இறுதி வரை தமது படையினர் இருப்பர் என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், அப்பகுதியிலுள்ள ட்ரூஸ் சமய சிறுபான்மையினர் இஸ்ரேல் பகுதியுடன் சேர விரும்புவதாகக் கூறியதாக காணொளியும் வெளியாகி இருக்கிறது.
பஷரின் வீழ்ச்சியை தொடர்ந்து இஸ்ரேல் முன்னெடுக்கும் நகர்வுகள் சிரியாவின் எதிர்காலம் குறித்து பாரிய கேள்விகளை தோற்றுவித்துள்ளன.
மர்லின் மரிக்கார்