பெருந்தோட்ட தொழிற்துறையை பயனுள்ள வகையில் கட்டியெழுப்புவதற்கும், தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கும் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இந்த மறுசீரமைப்பு அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கும் உரிய தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தமது அமைச்சு சமூக உட்கட்டமைப்பு வசதிகளுக்கான அமைச்சாகும். இதன் கீழ் மலையகத்திற்கு மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுமென்றும் அவர் கூறினார்.
தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த விசேட நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் கடந்த போதிலும் அவர்கள் இன்னும் நாட் கூலிகளாகவே செயற்படுகின்றனர். இந்த நிலை விரைவாக மாற்றி அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இரத்தினபுரி மாவட்டத்தில் முதல் முறையாக தெரிவான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இவர். 1982ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்தை நகருக்கருகில் உள்ள ஓபாத என்ற தோட்டத்தில் பிறந்தவர். தந்தை வழியில் சமூகப் பணியில் ஈடுபட்டு வந்தவர். 2003ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட இவர், குண்டசாலையில் பொலிஸ் தொழில்சார் பயிற்சியையும் நிறைவு செய்துள்ளார்.
2007ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இருந்து விலகி ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்டார். 2008ஆம் ஆண்டு ஆசிரிய சேவை சங்கத்தில் தேசிய மாநாட்டில் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஆசிரிய சேவை ஊடாக பின்தங்கிய மலையக பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.
வளமான நாடு -அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி சார்பாக இரத்தினபுரி மாவட்டத்தின் பொது மக்களின் ஆதரவுடன் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
கேள்வி : பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணிப் பிரச்சினை இன்றும் நிலவி வருகிறது. அதற்கு முழுமையான தீர்வு இன்னும் கிட்டியதாக தெரியவில்லை.
பதில் : இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். இதற்காக ஏற்கனவே அட்டன் பிரகடனத்தை அங்கீகரித்துள்ளோம். இதன் அடிப்படையில் பெருந்தோட்டத் துறை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேள்வி : தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லையே?
பதில் : இந்த மக்களின் இன்றைய வாழ்வாதாரத்துக்கு தற்பொழுது வழங்கப்படும் 1,300 ரூபா நாளாந்த சம்பளம் போதுமானதல்ல என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த குறையைத் தீர்ப்பதே எமது மறுசீரமைப்புப் பணியின் முதலாவது விடயமாகும்.
கேள்வி : 22 தனியார் கம்பனிகளின் கீழ் தற்போது பெருந்தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான உடன்படிக்கை 1992ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையை ஆராய்ந்துள்ளீர்களா?
பதில் : இந்த விடயம் பெருந்தோட்ட மறுசீரமைப்பின் கீழ் கவனத்தில் கொள்ளப்படும். அதிலுள்ள குறைபாடுகள் விசேடமாக தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படவேண்டிய விடயங்களுக்கு முக்கியத்தும் வழங்கவுள்ளோம்.
கேள்வி : பெரும்பாலான தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணமாக பல விடயங்களை கம்பனிகள் முன்வைக்கின்றன ?
பதில் : தோட்டங்கள் உண்மையிலேயே நட்டத்தில் இயங்குகின்றதா? இதற்கான காரணங்களைக் கண்டறிவது முக்கியமானதாகும். தோட்டங்களை கம்பனிகள் நிருவகிப்பதற்காக 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொழிலாளர் நலன்களும் பெருந்தோட்டத் தொழிற்துறையின் வளர்ச்சியிலும் இதுவரையில் உண்மையிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.
கேள்வி : விசேடமாக ஆங்கிலேயர் காலத்தில் காணப்பட்ட பெருந்தோட்டத்துறை வளர்ச்சி தற்போது இல்லை. இதற்கான காரணத்தை கண்டறிந்துள்ளீர்களா? பல தோட்டங்கள் இன்று பெருங்காடுகளாக காணப்படுகின்றது. இதற்குக் காரணம் என்ன?
பதில் : கம்பனிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றன. பெரும்பாலான தோட்ட நிர்வாகக் கம்பனிகளுடன் அரசியல் வாதிகளுக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. கம்பனிகள் கூறும் காரணத்தை அரசியல்வாதிகள் தமது சொந்த நலனுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக தொழிவாளர்களின் நலனுக்கும் தோட்டத்துறை அபிவிருத்திக்கும் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படும் போது சில அரசியல்வாதிகள் “கமிஷ”னை கவனத்தில் கொண்டு செயல்படுகின்றனர். இதேபோன்று நிருவாகிகளும் தமக்கான “கமிஷ”னை இலக்காகக்கொண்டு செல்படுகின்றனர். இதனால் நடைமுறைப்படும் திட்டங்களில் குறைபாடுகள் இருந்தால் அரசியல்வாதிகளினால் தட்டிக்கேட்க முடியாத நிலை. சீர்கெட்ட நிர்வாகங்கள் தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்படுவதில்லை.
கேள்வி : தோட்டங்கள் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் டொலர்களில் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடிய கம்பெனிகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் மாறாக உள்ளூர் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டதால் இன்றைய நிலை ஏற்பட்டுள்ளது என்பது சரியான கருத்தா?
பதில்: தோட்டங்களில் பயிர் உற்பத்திக்கு அதாவது தேயிலை, இறப்பர் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அப்பொழுதே தோட்டத் தொழில்துறையை நம்பியிருப்பவர்களுக்கும் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்த விடயங்களில் கூடிய அக்கறை செலுத்தப்படவில்லை. எமது மறுசீரமைப்பின் கீழ் இவை கவனத்தில் கொள்ளப்படும். நாம் புதிய முதலீடுகளுக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமீபத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். அங்கும் முதலீடுகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இது மாத்திரமன்றி பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இதனால் பிரச்சினை இன்றி பெருந்தோட்டத்துறையை மட்டுமின்றி நாட்டையும் மேம்படுத்த முடியும்.
கேள்வி : சமகால அரசாங்கம் பதவிக்கு வந்த சில நாட்களிலேயே அரிசி தட்டுப்பாட்டை மக்கள் எதிர்கொண்டுள்ளனரே?
பதில் : அரிசித் தட்டுப்பாடு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முறைகெட்ட செயற்பாடாகும். நெல் களஞ்சியசாலைகளை கொண்டிருக்கும் வர்த்தகர்கள் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்குவதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பணத்தை வழங்குவார்கள். அரசாங்கத்தை அமைக்கும் கட்சியின் மூலம் இவர்கள் செலவிட்ட தொகையிலும் கூடுதலான இலாபத்தை பெற்றுவந்த நடைமுறையே இருந்துவந்தது. இதற்கு தீர்வாக விசேடமாக நெல் கொள்வனவில் அரசாங்கம் நேரடியாக செயற்பட்டுள்ளது. நியாயமான விலையில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் நெல் கொள்வனவு நிலையங்களை செயற்படுத்த உள்ளது. இதன்மூலம் இத்துறையில் ஏகபோகம் கொண்ட தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் அடாவடித்தனத்தை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளோம்.
கேள்வி : நீங்கள் கூறும் இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பண வசதி தேவை? இதனால் இன்றைய அரசாங்கத்தினால் இதனை விரைவாக செய்யமுடியுமா ?
பதில் : முதலீடுகள் நாட்டில் இடம்பெறுவதினால் தேவையான நிதியுதவியை பெற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கை சமகால அரசாங்கத்திற்கு உண்டு.
கேள்வி : பெருந்தோட்டத்துறைக்கு உட்பட்ட பல நிறுவகங்கள் தொழிலாளர் நலனுக்காக உண்டு. இருப்பினும் தொழிலாளர்களின் நலனுக்கோ, இத்துறையின் வளர்ச்சிக்கோ, பங்களிப்பு இடம் பெறுவதை காணக்கூடியதாக இல்லையே ?
பதில்: இதிலுள்ள அதிகாரிகள் மேற்கொள்ளும் அரசாங்கத்தின் திட்டப் பணிகளில் ஊழல்கள் நிறைந்துள்ளன. இதற்குக் காரணம் அரசியல்வாதிகளே. திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதிகாரிகள் தமது சொந்த நலனைக் கருத்திற்கொண்டு அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் வழங்குவதாக முன்னர் குறிப்பிட்டிருந்தேன். இதுவே கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் தொடரும் ஒரு கலாச்சாரமாக இருந்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வருவதே சமகால எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
கேள்வி : விசேடமாக இவர்களை கண்காணிப்பதற்கும். திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதற்கு சமகால அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
பதில் : எல்லாத் துறைகளையும் அரசாங்கம் அவதானித்து வருகின்றது. இது ஒரு வகையில் மர்மமான செயற்பாடாகும். இதற்கு விளக்கமளிப்பது அவ்வளவு சிறப்பானதல்ல.
கேள்வி : தொழில் நுட்பத்தை பெருந்தோட்டத் துறையில் மேற்கொள்வதாகக்கூறி தோட்டகம்பெனிகள் பல தொழிற்சாலைகளை மூடின. நீண்ட காலத்திற்கு வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய இறப்பர் மரங்களை நடைமுறைக்கு மாறாக கையாண்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர். இதேபோன்று தேயிலையின் தரத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான தோட்டக்கம்பெனிகள் தோட்டத்தின் இயற்கை வளத்தை மாத்திரமின்றி பெரும்பாலான சொத்துக்களை சுரண்டுவதில் காலத்தை செலவிட்டுள்ளதாக சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர் ?
பதில்: மறுசீரமைப்பு மூலம் இந்த விடயங்களுக்கு தீர்வு காணப்படும்.
கேள்வி : தோட்டத் தொழிலாளர்களின் காணியுரிமை மற்றும் வீட்டுப் பிரச்சினை தீர்வுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?
பதில் : காணிப் பிரச்சினை விடயத்தில் தொழிலாளர்களுக்கு பயனுள்ள வகையில் தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பெருந்தோட்டத் துறையில் இவர்களின் வீட்டுப் பிரச்சினைக்கும் மறுசீரமைப்பு மூலமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். புவியியல் ரீதியில் வீட்டுப் பிரச்சினையை அணுகி வருகிறோம். இதன் மூலம் தொழிலாளர்கள் நாட்டின் நுவரெலியா, தலவாக்கலை போன்ற பகுதிகளைப்போல் இரத்தினபுரி, கேகாலை, தெனியாய வரையில் வாழும் தோட்ட மக்களுக்கு பயனுள்ள வகையில் வீட்டுப்பிரச்சினையை தீர்க்க திட்டமிட்டுள்ளோம். தோட்டங்களில் 70 சதவீதமானோர் லயன் குடியிருப்பிலேயே வாழ்கின்றனர். இருப்பினும் இவர்கள் வாழும் பகுதியை கவனத்திற்கொண்டு, இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும். இதற்காக குழு அமைக்கப்படும்.
கேள்வி: தோட்டங்களில் தொழில் புரியும் தோட்ட உத்தியோகத்தர்களும் வீட்டுப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். இதற்கு மறுசீரப்பு ஊடாக தீர்வு கிட்டுமா?
பதில்: பெருந்தோட்டத் துறையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் வீட்டுப் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு. இவர்களும் பெருந்தோட்டத்தின் வருமானத்துக்கும் தொழிலாளர்களின் நலனுக்காகவும் செயற்பட்டவர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
பெருந்தோட்டத்துறை மறுசீரமைப்பில் இவர்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டு இவர்களுக்கும் வீட்டு வசதி செய்து கொடுக்கப்படும். அப்போது இவர்கள் எம்முடன் தொடர்பு கொள்வதற்கான அறிவிப்புகளும் இடம்பெறும்.
ஏ.கே.எம்.பிள்ளை