ஹற்றனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டி ஹற்றன் – கண்டி பிரதான வீதியில் ஹற்றன் மல்லியப்பு பகுதியில் 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில், மூவர் பலியானதுடன் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து நேற்று (21) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹற்றன் பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கண்டிக்கு சென்ற இந்த பஸ், பாதையை விட்டு விலகிச் சென்று 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 03 பேர் உயிரிழிந்ததுடன் 40 பேர் படுங்காயமடைந்தனர்.
விபத்தில் சுமார் 05 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனும், வயோதிபர் இருவரும் என, மூவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்தில் பஸ் சாரதி உட்பட 40 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இவர்கள், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் கண்டி மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பஸ்ஸில் 54 பேர் வரை பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பில் ஹற்றன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹற்றன் சுழற்சி நிருபர்