இன்னும் மூன்று ஆண்டுகளில் அதாவது 2027 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் ஆசிய கிண்ண கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவதற்கு இலங்கைக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. என்றாலும் கால்பந்து உலகில் கடைக்கோடியில் இருக்கும் இலங்கை போன்ற அணிக்கு அசாத்திய திறமையை காட்டினாலேயே அந்த இலக்கை எட்ட முடியும்.
என்றபோதும் அடுத்த ஆசிய கிண்ண கால்பந்து தொடருக்காக 2025–26 பருவத்தில் இலங்கை அணி மொத்தமாக ஆறு தகுதிகாண் போட்டிகளில் ஆடப்போகிறது. இதற்கான போட்டி விபரங்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன.
ஆசிய கிண்ண கால்பந்து தொடரில் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளின் எண்ணிக்கை 24. இதில் போட்டியை நடத்தும் சவூதி அரேபியா உட்பட 18 நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. எஞ்சி இருக்கும் ஆறு அணிகளையும் தேர்வு செய்வதற்கு ஆரம்பச் சுற்றில் தோல்வியுற்ற அணிகளுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டதாலேயே இலங்கை உட்பட 24 அணிகளுக்கும் ஆசிய கிண்ண கனவை தொடர்ந்து தக்கவைக்க முடிந்திருக்கிறது.
ஆசிய கிண்ண கால்பந்து தகுதிகாண் சுற்றில் புதிதாக அமைக்கப்பட்ட முறையின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு இலங்கை போன்ற அணிகளுக்கு கிடைத்திருக்கிறது.
2028இல் நடைபெறப்போகும் அடுத்த உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்காக ஆசிய பிராந்திய ஆரம்பச் சுற்று போட்டியாகவும் 2027 ஆசிய கிண்ண கால்பந்து தொடர் கருதப்படுகிறது. இதில் இலங்கை பங்கேற்ற போட்டிகளில் பூட்டானுடனான போட்டியில் மாத்திரம் 2–0 என்ற கோல்களால் இலங்கையால் வெற்றி பெற முடிந்தது.
இதன்படி 2027 ஆசிய கிண்ண கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவதற்கு தோல்வியுற்ற அணிகளுக்கு கிடைக்கும் வாய்ப்பின் அடிப்படையில் இலங்கை எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி தாய்லாந்துக்கு எதிராக மூன்றாவது சுற்று தகுதிகாண் போட்டிகளை ஆரம்பிக்கப்போகிறது.
சர்வதேச கால்பந்து அரங்கில் இலங்கை அணி ஓரளவுக்கேனும் திறமையை வெளிப்படுத்திய ஆண்டாக இந்த ஆண்டை குறிப்பிட முடியும். இந்த ஆண்டில் 10 போட்டிகளில் பங்கேற்ற இலங்கை அணி பூட்டான் மற்றும் யெமனுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் மாத்திரம் வென்றபோதும் மேலும் மூன்று போட்டிகளை வெற்றி தோல்வி இன்றி முடிப்பதற்கு இலங்கையால் முடிந்தது.
பூட்டான் மற்றும் யெமனுக்கு எதிரான போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றதோடு பப்புவா நியூகினியா, கம்போடியா, மியன்மாருடனான போட்டிகளை சமநிலை செய்ய முடிந்தது. இந்த ஆண்டில் இலங்கை அணி தோல்வியுற்ற போட்டிகளின் எண்ணிக்கை ஐந்து. இதில் புரூனாயுடன் இரண்டு போட்டிகளிலும் கம்போடியா, மியன்மார் மற்றும் யெமன் அணிகளுக்கு எதிராக தலா ஒரு போட்டியிலும் இலங்கை தோல்வியுற்றது.
இலங்கை அணி இந்த ஆண்டில் உலக கால்பந்து சம்மேளன (பிஃபா) தரவரிசையில் 205 தொடக்கம் 200 ஆவது இடம் வரை முன்னேற்றம் கண்டது. இதில் இலங்கையிடம் தோற்ற எதிரணிகள் உலக தரவரிசையில் முன்னிலையில் இருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய தரவரிசையின்படி ஆசிய பிராந்தியத்தில் கடைசி இடத்தில் இருந்து (46 ஆவது இடம்) முன்னேற்றம் காண (தற்போது 45 ஆவது இடம்) இலங்கையால் முடிந்தது.
இலங்கை கால்பந்து அணிக்கு தற்போது நிரந்தர பயிற்சியாளராக குவைட் நாட்டின் அப்துல்லா அல் முதைரி செயற்படுகிறார். முன்னர் இருந்த ஸ்கொட்லாந்தின் அண்டி மொரிசன் தனது ஒப்பந்தக் காலத்தில் பாதி நடுவே விலகிச் சென்றார். இலங்கை அணிக்கான பயிற்சி குழுவில் 10 பேர் இருக்கிறார்கள்.
இந்தக் குழுவில் இதுவரை பெரும்பான்மையாக பணியாற்றிய வெளிநாட்டினருக்கு பதில் உள்நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
19ஆவது ஆசிய கிண்ணம் சவூதி அரேபியாவில் 2027 ஜனவரி 15 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 8 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
போட்டியை நடத்தும் சவூதி உட்பட அவுஸ்திரேலியா, ஈராக், உஸ்பகிஸ்தான், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான், தென் கொரியா, ஓமான், பலஸ்தீன், பஹ்ரைன், ஜோர்தான், சீனா, இந்தோனேசியா, வட கொரியா, குவைட் மற்றும் கிரிகிஸ்தான் இந்தத் தொடருக்கு ஏற்கனவே தகுதி பெற்ற அணிகளாகும்.
****
இலங்கை அணியின் தகுதிகாண் போட்டிகள்:
2025 மார்ச் 25: தாய்லாந்துக்கு எதிராக பாங்கொக் நகரில்
2025 ஜூன் 10: சீன தாய்ப்பேவுக்கு எதிராக கொழும்பில்
2025 ஒக்டோபர் 9: துர்க்மனிஸ்தானுக்கு எதிராக கொழும்பில்
2025 ஒக்டோபர் 14: துர்க்மனிஸ்தானுக்கு எதிராக எஸ்காபட் நகரில்
2025 நவம்பர் 18: தாய்லாந்துக்கு எதிராக கொழும்பில்
2026 மார்ச் 31: சீன தாய்ப்பேவுக்கு எதிராக கஹோசியுங் நகரில்